Gamestop : அமெரிக்கப் பங்குச்சந்தை எனும் யானையின் காதுக்குள் புகுந்த எறும்பு

Spread the love

பங்குச்சந்தையில் முதலிடுவது தொடர்பாக தொடங்கியுள்ள தொடர் கட்டுரையின் ஆரம்பத்திலேயே சுவாரசியமான சம்பவம் ஒன்று தற்போது அமெரிக்கப் பங்குச்சந்தையில் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது. செய்திகளில், பேஸ்புக்கில் என பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விடயம்தான் – Gamestop அமெரிக்கப் பங்குச்சந்தை என்பவற்றை தொட்டு நடைபெறும் சம்பவங்கள். இவ்விடயத்தை நீங்கள் இவ்வாரத்தில் எங்காவது கடந்து செல்லாமல் இருந்திருக்கமாட்டீர்கள்.

Wallstreet – அமெரிக்க பங்குச்சந்தை உள்ள இடம். உலக பொருளாதாரத்தின் கடிவாளம் இங்குதான் உள்ளது. 2009 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி கூட இங்கிருந்துதான் ஆரம்பித்தது.

தற்போதைய நிலையும் அதை ஒத்ததாக மாறிவிடுமோ என்ற அச்சம் கூட ஏற்படுமளவுக்கு நிலமை தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பங்குச்சந்தை எனும் வர்த்தகத்தில் வழமையாக நடக்கும் சூதாட்டம், சூதாடிகளை பகடைகளாக்கிவிட்டதே. 

பங்குச்சந்தை என்பது ஒரு வகையான சூதாட்டக் களமே! பங்குச்சந்தையில் முதலிடுவது தொடர்பில் ஒன்றிற்கு ஓராயிரம் தடவை யோசித்து இறங்கவேண்டியது அவசியம். பெரும் பணபலம் படைத்த பங்கு வணிகர்கள் தொடங்கி சிறு வர்த்தகர்கள் வரை தங்களுக்கான இடத்தினை தக்க வைக்க பங்குச்சந்தையில் சாம, தான, பேத, தண்டம் என அனைத்து முறைகளையும் பிரயோகிப்பர். அமெரிக்கப் பங்குச்சந்தையானது பல பங்குச்சந்தை ஜாம்பவான்களைக் கொண்டது. அவர்கள் விரும்பினால், பங்கு வர்த்தகத்தின் போக்கினை மாற்றமுடியும். விலையினை ஏற்றி இறக்க முடியும் என பல “முடியும்” களை தன்னகத்தே வைத்திருந்தனர். ஆமாம்! “வைத்திருந்தனர்” இப்போது இல்லை. பங்குச்சந்தை தொடர்பாகவும் பெரு பங்கு வணிக நிறுவன ங்கள் தொடர்பாக ஊதிப் பெருப்பிக்கப்பட்ட பிம்பம், ஒரு சிறு முதலீட்டாளர் குழுவினால், ஊதித் தள்ளப்பட்டிருக்கின்றது. அதுவும் ஒரு சமூக ஊடகத்தின் மூலம் இது சாத்தியமாகி இருக்கின்றது.

 

Gamestop அமெரிக்கப் பங்குச்சந்தை

Gamestop

 

கணனி விளையாட்டுக்களை விற்கும் அமெரிக்க நிறுவனமாகும். தற்போதைய கொரோனா நிலமை மற்றும் அதிகரித்து வரும் Online Games போன்றவற்றினால் நலிந்து போய் வங்குரோத்து நிலைக்கு செல்ல இருந்த நிறுவனமாகும்.

அமெரிக்க பங்குச்சந்தையில் சென்ற வருட ஏப்ரலில் GameStop அமெரிக்க பங்குச்சந்தை நிறுவனத்தின் ஒரு பங்கு 3.25 டொலர்கள் மட்டுமே. ஆனால், தற்போதைய பங்கு விலை 347.50 டொலர்கள்! திவாலாக தம்மை அறிவிக்க இருந்த ஒரு நிறுவனத்தின் பங்குகள் இந்தளவு விரைவான அதிகரிப்பினை காட்டக் காரணம் என்ன? என தேடினால், விடை பல சுவாரசிய திருப்பங்களுடன் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது. இதற்கு நாம் பங்குச்சந்தை நடவடிக்கைகளில் “ Short Trading” பற்றி கொஞ்சம் அறிந்திருத்தல் அவசியம்.

 

Short Trading என்றால் என்ன?

 

பங்குச்சந்தையில் காணப்படும் வர்த்தக நடவடிக்கைகளில் இது ஒரு முறை. “ஊக வணிகம்” எனக்கூறலாம். அதாவது, நிறுவனம் ஒன்றின் பங்கின் தற்போதைய நிலவரத்தை கணித்து, பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவது Short Trading எனப்படுகின்றது.

உதாரணமாக இப்படி ஒரு சந்தர்ப்பத்தை கற்பனை செய்து பாருங்கள்,

10 ரூபா பெறுமதியான பங்குகளைக் கொண்ட நிறுவனம் ஒன்றின் பங்குகள் 15 ரூபாவாக மாறும் என்ற கணிப்பினை நம்பி, அந்தப் பங்குகளை தற்ப்போதுள்ள பெறுமதியான 10 ரூபாய்களுக்கு வாங்கி 15 ரூபாய்களாகும் போது விற்றால் 5 ரூபா இலாபமாக உங்களுக்கு கிடைக்கும்.

இதைச் சாதரண பங்கு வர்த்தகம் என நாம் பொதுவாக கூறலாம். ஆனால், பங்குச்சந்தையின் தொழிற்பாடு மற்றும் வியாபார நடவடிக்கைகள் தொடர்பில் ஆழ்ந்த ஞானம் உள்ள ஒருவருக்கு, இந்த எளிய விளக்கத்தின் பின்னால் உள்ள சிக்கலான முடிச்சுக்கள் புரியும். ஆனால், ஒரு புரிதலுக்கு நாம் இதனை மேற்கூறிய உதாரணம் மூலம் எளிமைப்படுத்திக் கொள்ளலாம்.

Short Trading என்பது மேற்கூறிய உதாரணத்துக்கு ஒப்பான ஒன்று என்றாலும் இன்னும் ஒரு சில படிமுறைகள் இணைந்த ஒன்று.

Shorting இல் நான் இலாபம் உழைக்க எதிர்பார்க்கும் நிறுவனப் பங்கின் விலை 5 ரூபாவாக வீழும் என அனுமானித்து, அப்பங்கினை வைத்திருக்கும் இன்னொருவரிடம் – கால எல்லை குறிப்பிட்டு , சிறிய தொகை ஒன்றினை மேலதிகமாக கொடுக்க உடன்படுவதன் மூலம் கடனாக பெற்று 15 ரூபாவிற்கு விற்றுவிடுவதன் மூலம் 10 ரூபாய்களை இலாபமாக பெறுகின்றேன்.

 

இடர்களில் தங்கி நிற்கும் இலாபம் மற்றும் நட்டம்

 

ஆனாலும், எனக்குள்ள அடுத்த பொறுப்பு – நான் கடனாகப் பெற்ற பங்கினை உரிய தவணைக்குள் திரும்பச் செலுத்த வேண்டும். இப்போது, குறித்த பங்கின் விலை மீண்டும் 5 ரூபாவாக குறையும் சந்தர்ப்பம் ஒன்றில் அந்தப்பங்கினை வாங்கி உரியவருக்கு கொடுத்து கடனை மீளளிப்புச்  செய்துவிடுவதுடன் Short Trading முடிகின்றது.

இந்த உதாரணத்தை வைத்துப்பார்த்தீர்கள் என்றால், எனக்கு இலாபம் 5 ரூபாய்கள். எந்தவொரு பங்குகளையும் நான் சொந்தமாக வைத்திருக்காமல் எனக்கு 5 ரூபாய்கள் இலாபமாக உழைக்க முடிகின்றது.

மாறி மறுதலையாக, எனது அனுமானத்தின் படி உரிய நிறுவனப்பங்கு 5 ரூபாய்களுக்கு குறையாமல் 100 ரூபாயாக உயர்ந்துவிடுகின்ற நிலை ஏற்படும் என்றால், எனது நிலை – கையறுநிலைதான்! எனக்குச் சொந்தமில்லாத பங்கு அதனை நான் திரும்பக் கொடுக்க வேண்டும். 100 ரூபாய் இல்லை அதனைவிட கூடினாலும் நான் அதனை திருப்பிச் செலுத்தியே ஆகவேண்டும். எனவே, எனது முதல் 10 ரூபாவுடன் சேர்த்து 90 ரூபா நஸ்டத்தில் மீண்டும் அந்தப்பங்கை வாங்கி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு உண்டாகிவிடும். இந்த 100 ரூபா எனும் விலை உயர்விற்கு எந்தவொரு எல்லையும் இல்லை (Ceiling ) அது எவ்வளவு என்றாலும் உயரலாம். இந்த ரிஸ்க்கினை அனுமானிக்கத் தவறும் பட்சத்தில் ஏற்படுகின்ற நஸ்டம் மீண்டும் எழமுடியாத அளவுக்கும் இருக்கலாம்.

 Tesla வின் உரிமையாளரும், உலக செல்வந்தர்கள் வரிசையில் முதன்மை வகிப்பவருமான Elon Musk.

அதாவது, “சொந்தமாக வீடில்லை என்றால் உங்களால் வீடொன்றினை விற்கமுடியாது. சொந்தமாக காரில்லை என்றால் காரொன்றை விற்கமுடியாது, ஆனால், சொந்தமாக பங்கு இல்லை என்றாலும் உங்களால் பங்குகளை விற்க முடியும். Shorting ஒரு பணமோசடி” எனக் குறிப்பிடுகின்றார்

தற்போது நடந்து வருகின்ற GameStop விவகாரத்தில் Elon Musk இன் இன்னொரு Tweet உம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. அதனை பின்னர் பார்ப்போம்.

 

Wall street இல் Short Trading

 

இல்லாத ஒன்றில் காசு பார்க்கும் Short Trading முறையில் எப்போதும் நின்று விளையாடுவது – Hedge Fund எனப்படும் பரந்துபட்ட திரவ மூலதனத்தை கொண்டுள்ள பாரிய நிதி நிறுவனங்களே.

அரசாங்கத் தொடர்புகள், உள்ளக தகவல்கள் போன்ற விடயங்களை இலகுவாக அணுகக்கூடிய இந்நிறுவனங்கள் எப்போதும் Shorting இல் நிறைய காசு பார்த்திருக்கின்றன. திவாலாகும் நிலையில் உள்ள நிறுவனங்களை தெரிந்தெடுத்து, அவற்றின் பங்குகளை Short Trading Brokers களிடமிருந்து இரவல் வாங்கி, பின்னர் அவற்றிற்கான விலையினை செயற்கையாக அதிகரித்து விற்பனை செய்து பின்னர் விலையினை குறைத்து Manupulate செய்து பங்குகளை திருப்பி அளித்து விடுகின்றன.

இதனால், இரண்டாம் நிலை சிறு பங்கு வர்த்தகர்கள் பாரிய நஸ்டத்தினை அடைந்து கொண்டிருந்தனர். செயற்திறனற்ற நிறுவனம் ஒன்றின் பங்கினை விலைகூடுதலாக வாங்கி, குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஒவ்வொரு முறையும் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

பாரிய நிதி நிறுவன ங்களுடன் போட்டி போட முடியாத நிலையில் இவ்வாறான நெருக்குவாரங்களுக்குள் தங்களது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் சிறுமுதலீட்டாளர்கள் இருந்தனர்.

 

r/wallstreetbets/

 

சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்படுகின்ற இந்த அநீதி மற்றும் பெரு பங்கு வணிக நிதித் தாபனங்களை எதிர்க்கமுடியாத கையறு நிலை என பல பிரச்சனைகளை முகங்கொடுத்து வந்த சிறிய முதலீட்டாளர்கள், தமக்கிடையில் தகவல்களை பரிமாறவும் தீர்வுகளை ஆலோசிப்பதற்கும் Reddit எனும் உலகின் பெரிய செய்தித் திரட்டி (Social News Aggregation) சமூகத்தளத்தில்  wallstreetbets எனும் பெயரில் ஒரு குழுமத்தை நடாத்திக் கொண்டிருந்தனர்.

அங்கிருந்துதான் Gamestop புரட்சி ஆரம்பிக்கின்றது.

 

Gamestop புரட்சி

 

வழமை போன்று, தமது Short Trading திருவிளையாடலை தொடர ஆரம்பித்த Hedge Fund நிறுவனங்களுக்கு நடக்க இருக்கும் அபாயம் தெரியவில்லை.

Hedge Fund நிறுவனங்கள், வங்குரோத்தாக இருக்கும் GameStop நிறுவன பங்குகளை அமெரிக்கப் பங்குச்சந்தையில் Short Trading பண்ண தொடங்கி இருந்தன. அதிலும் Melvin Capital எனும் Hedge Fund நிதி தாபனம் அதிகளவில் GameStop பங்குகளில் Short Trading பண்ண தொடங்கி இருந்தது.

இதனை சரியாக கணிப்பிட்டு wallstreetbets குழுமத்தினர், கூட்டாக சேர்ந்து சரியான திட்டமிடலுடன் GameStop பங்குகளை வாங்கிக் குவிக்கத் தொடங்கினர். செயற்கையாக உருவாக்கப்பட்ட இக்கேள்வியினால், Gamestop அமெரிக்கப் பங்குச்சந்தை நிறுவனத்தின் பங்குகளின் விலை சடுதியாக அதிகரிக்கத் தொடங்கியது.

அந்த அதிகரிப்புக்கு வலுச்சேர்க்கும் வகையில் Elon Musk இன் Tweet உம் அமைந்தது.

இதைத் தொடர்ந்து அவ்வதிகரிப்பு 1800% தை தாண்டியது. Manupulation க்கு சாத்தியமற்ற வகையில் சிறு முதலீட்டாளர்களின் திடீர் நகர்வு பாரிய பொறி ஒன்றினுள் Hedge Funds நிறுவனங்களை தள்ளிவிட்டிருக்கின்றது. Short Squeez எனக்கூறப்படும் இந்த Trap இனால், பலத்த அடியினை வாங்கியுள்ளது பாரிய நிதி நிறுவனங்கள்.

Gamestop அமெரிக்கப் பங்குச்சந்தை

இலாபமும் நஸ்டமும்

 

இந்த நிலமையினால், சிறுமுதலீட்டாளர்களில் பலர் Call Option எனும் நேரடிக் கேள்வி மூலமாக தமது GameStop அமெரிக்கப் பங்குச்சந்தை யில் பங்குகளை விற்பனை செய்வதால் நல்ல இலாபத்தினை அடைந்துள்ளனர். பல இளைஞர்கள் தமது கல்விக்கடனை அடைக்க முடிந்துள்ளதாக ரெட்டிட் தளத்தில் குறிப்பிடுகின்றனர்.

சில முதலீட்டாளர்கள் தங்களது இலாபத்தினை தொண்டு ஸ்தாபனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இது இப்படி இருக்க, மறுபக்கம் சேதாரம் மிக அதிகமாகிவிட்டது.

இது வரைக்கும், 19 பில்லியன் அமெரிக்க டொலர்களை Hedge Funds நிதி நிறுவனங்கள் இழந்துள்ளதாக  பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இக்கணிப்பீடு இந்த வெள்ளி வரைக்குமானது (29-01-2021) மட்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

தற்போதைய நிலமை

 

தொடர்ச்சியான Hedge நிதித் தாபனங்களின் சரிவு உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை உண்டு பண்ணலாம் என்ற அச்சத்தினால், GameStop இன் பங்குகளை வாங்க பங்குப்பரிவர்த்தனை மத்திய நிலையம் தடை விதித்திருந்து தற்போது ஒருவர் ஒரு பங்கினை மட்டும் வாங்கலாம் என அறிவித்துள்ளது.

Robinhood எனப்படும் பங்குப் பரிவர்த்தனை Mobileapp தற்போது ஒருவருக்கு ஒன்று என்ற வகையில் விற்கத் தொடங்கியுள்ளது.

ஆனால், இத்தடை தொடர்பில் Wallstreetbeats குழும அங்கத்தவர்கள் தமது அதிருப்தியினை தெரிவித்துள்ளனர். இந்த ஏற்பாடு – பாரிய நிதித் தாபனங்களை பாதுகாப்பதற்காகவே என அவர்கள் கூறுகின்றனர்.

Wallstreet இன் இவ்வார நிலை இப்படி இருக்க, அடுத்த வாரத்தில் இதன் தொடர்ச்சி எவ்வாறிருக்கும்? என ஒரு துப்பறியும் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு காத்திருக்கும் உணர்வுடன் நகங்களைக் கடித்துக் கொண்டு காத்திருக்கின்றனர், பங்குபரிவர்த்தனையுடன் தொடர்புடைய தரப்பினர்.

எது எப்படி இருப்பினும், ஒற்றுமையாக செயற்படுவதால், எந்த ஒரு ஜாம்பவனானாலும்  வீழ்த்துவது இலகு என உலகுக்கு காட்டி இருக்கின்றது wallstreetbets. GameStop அமெரிக்கப் பங்குச்சந்தை நிறுவனத்தினை களமாக்கி போராடி வென்றிருக்கின்றனர் wallstreetbets.

பங்குச்சந்தையில் முதலிடுவது எப்படி என்ற தொடரில் மீண்டும் சந்திப்போம்.

பகிர:

Leave a Reply