பங்குச்சந்தையில் முதலிடுவது எப்படி – ஆரம்ப வழிகாட்டி How to invest in share market? – Beginners guide (01)

Spread the love

முதலீடுகள் தொடர்பில் நாம் யோசிக்கின்ற போது, ஒன்றில் அதிக கவனத்தை செலுத்துகின்றோம். அது – இலாபம் அல்ல! நமது முதலீட்டிற்கான பாதுகாப்பு! பலரும் செய்கின்ற ஒரு தவறு இதுதான்! அநேகர், இடர்களை (Risk) எதிர்கொள்ள விரும்புவதில்லை. தேங்கி இருக்கின்ற பணத்தினை இரட்டிப்பாக்க ஆசை இருந்தும், இருப்பதும் போய்விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில், வங்கியில் பணத்தை உறங்குநிலையில் சிறிய ஒரு இலாபவிகிதத்தில் வைத்திருக்கின்றனர் அல்லது அசையா சொத்துக்களை வாங்கிக் கொள்கின்றனர். பங்குச் சந்தை போன்ற Risk அதிகமுள்ள அதேவேளை இலாபமும் அதிகம் தரக்கூடிய சந்தைகளை தவிர்ந்து கொள்கின்றனர். இன்னும் சிலர், பங்குச்சந்தையில் முதலிடுவது எப்படி (How to invest in share market?) என தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தும், சரியான வழிகாட்டுதல்கள் இனமையால் அதையும் அப்படியே தூரப் போட்டுவிடுகின்றனர்.

சரி! பங்குச்சந்தையில் முதலிடுவது எப்படி என்பதைப் பார்ப்பதற்கு முன்னர், ஆரம்ப விடயங்கள் தொடர்பில் நாம் தெளிவு பெறுவது அவசியம். தொடராக வெளியிட எண்ணியுள்ள இத்தலைப்பின் முதலாவது பகுதியான இப்பதிவில், பங்குச்சந்தை தொடர்பான அடிப்படை அம்சங்களைப் பற்றி கலந்துரையாடுவோம்.

பங்கு என்றால் என்ன?

 

பங்கு என்றால் என்ன? எனக் கேட்டால் பொதுவாக உங்களின் பதில் என்னவாக இருக்கும்? பெரிய விடயம் ஒன்றுமில்லை. மொத்தமாக உள்ள ஏதோ ஒன்றின் ஒரு பகுதி – பங்கு.

ஒரு முழு கேக்கில் ஒரு துண்டு, அந்தக் கேக்கின் ஒரு பங்கு. குறித்த அந்த துண்டு –  அளவில் சிறியதா? பெரியதா? அதில் – அதிகம் காணப்படுவது ஐசிங்கா? கேக்கா? போன்ற கேள்விகளுக்கான விடை வேறுபட்டதாக இருப்பினும், பொதுவான அம்சம் என்னவென்றால், முழுக் கேக்கினதும், ஒரு பகுதியான அந்தக் கேக் துண்டானது – அக் கேக்கின் ஒரு பங்கு.

இதே விடயத்தினை ஒரு நிறுவனத்தின் மீது பிரயோகிக்கும் போது, வர்த்தக உலகம் கூறுகின்ற பங்கு தொடர்பான ஒரு தெளிவு கிடைக்கும்.

ஒரு வர்த்தக நிறுவனத்தின் மொத்த உரிமையினை முழு கேக் என எடுத்துக் கொண்டால், அதன் சிறு சிறு பகுதிகள்தான் பங்குகள். இதுதான் அடிப்படை! இதன் உள்ளார்ந்த விடயங்களும் சூட்சுமங்களும் பல இருந்தாலும், இந்த அடிப்படை தொடர்பில் நமக்கு தெளிவில்லாவிட்டால், மற்ற விடயங்களை கற்பது வீண்!

 

 

பங்குகளும் பங்குகளை கொள்வனவு செய்பவரும்

 

சரி! பங்கு என்பது ஒரு வர்த்தக நிறுவனத்தின் உரிமையில் ஒரு பகுதி! இதன் மூலம் பங்கினை கொள்வனவு செய்தவர் – பங்காளர் ஆகின்றார். அதாவது, அவர் அந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒரு

வர். Crowdfunding எனும் கூட்டுமுயற்சி வியாபார நடவடிக்கைகளின் ஒரு மேம்பட்ட வடிவமே இது.

பங்கினைக் கொள்வனவு செய்த பங்குதாரர், குறித்த நிறுவனத்தின் மூலம் அடைகின்ற பொருளாதார பலன்களை அனுபவிக்க உரித்துடையவர். அதாவது , இலாபம் நட்டம் என இரண்டையும் ஏற்கவேண்டியது நிறுவனத்தின் பங்குதாரர்களின் பொறுப்பாகும். ஆனால், அந்தப் பலன்களின் விஸ்தீரணம் அவர் கொண்டுள்ள பங்கின் பெறுமதி அல்லது சதவீதத்தினை பொறுத்துக் காணப்படும். பங்குச்சந்தையில் முதலிடுவது எப்படி என்ற வினாவிற்கான பதில் பங்குக் கொள்வனவு என இலகுவாக எடுத்துக் கொள்ளமுடியாது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

 

பங்கின் விலையினை தீர்மானிப்பது எப்படி?

நிறுவனத்தின் வளர்ச்சி

நிறுவனம் – தனிநபராகவோ அல்லது நண்பர்கள், உறவினர்கள் சேர்ந்து கூட்டாகவோ ஆரம்பிக்கப்படுகின்றது. இதன்போது, நிறுவனத்தின் மூலதனமானது, நிறுவனத்தின் ஆரம்பகர்த்தாக்களால் இடப்படுகின்றது. இலாப நட்டங்கள் அவர்களுக்குள் பகிரப்படுகின்றது. இது ஒரு நிறுவனத்தின் ஆரம்பப் படி. இதன் போது, நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக, நிறுவனமானது, sole proprietorship எளிய நிறுவனமாக, அல்லது அதையும் விட ஒரு படி உயர்ந்த, Private Limited Company ஆக காணப்படும்.

நிறுவனத்தின் வளர்ச்சி தொடர்ச்சியாக நடைபெறுகின்ற போது, அடுத்த கட்டத்திற்கு நிறுவனத்தினை எடுத்துச் செல்லும் நிலை ஏற்படும். அதிக மூலதனத்தினை நிறுவனம் வேண்டி நிற்கின்ற இந்நிலையில், நிறுவனத்திற்கு வேண்டிய மூலதனத்தினை உள்ளிட இன்னும் முதலீட்டாளர்களை நிறுவனம் எதிர்பார்க்கும்.

இந்நிலையில் நிறுவனத்தின் அடுத்த நிலைக்கான முஸ்தீபுகள் தொடங்குகின்றன. வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாக (Private Limited Company) குறித்த ஓர் இரு முதலீட்டாளர்களுடன் காணப்பட்ட நிறுவனம், பொதுவுடமை நிறுவனமாக (Public Limited Company) ஆக மாறுகின்ற நிலைக்கு செல்லும். இங்குதான் உங்களது கேள்வியான பங்குச்சந்தையில் முதலிடுவது எப்படி என்ற கேள்விக்கான விடை தொடங்குகின்றது.

 

மூலதனத்தினை அதிகரித்தல்

 

நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையான மூலதனத்தினை அதிகரிப்பதற்கான தேவையே பங்குகளை விற்பதற்கான தேவையினை நிறுவனத்திற்கு ஏற்படுத்துகின்றது. இது – நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு அமைய நடைபெறுகின்ற ஒரு செயற்பாடு. இதன் பின்னணி மிக விரிவானது, ஆனால், அதன் அடிப்படை இதுதான்.

 

பங்குகளுக்கான விலை நிர்ணயம்

 

தனியார் நிறுவனமாக இருக்கின்ற நிறுவனத்தின் மூலதன் உள்ளீர்ப்பினை அதிகரிக்க நிறுவனம் எடுக்கின்ற முதல் அடி, Public Limited Company ஆக மாறுவதற்கான அடிக்கல்லாகின்றது.

இந்த நிலையில், குறித்த நிறுவனமானது, தமது மூலதனத்தின் தேவையினை நிர்ணயம் செய்து, பொது மக்களிடம் இருந்து அத்தொகையினை பெறுவதற்கான கோரிக்கையினை முன்வைக்கும். இதுதான் பங்குகள் வழங்குவதற்கான ஆரம்பம். இதனை Initial Public Offering (IPO) (ஆரம்ப பொது வழங்கல்) எனக்குறிப்பிடுவர். இதன் போது, பங்குப் பரிவர்த்தனை தொடர்பான நாடுகளிலுள்ள சட்ட வரையறைகள் பிரயோகிக்கப்படுகின்றது.

இந்த ஆரம்ப நிலையில், பட்டியல்படுத்தப்பட்ட விலையில் பங்குகளை விரும்புபவர்கள் வாங்குவார்கள். இது பங்கு வர்த்தகத்தில் முதன்மைச் சந்தை (Primary Market) எனப்படுகின்றது.

 

பங்குகளை என்ன அடிப்படையில் வாங்குகின்றனர்?

 

பங்குச்சந்தையில் முதலிடுவது எப்படி என ஆராய தொடங்கும் நபர்கள், ஆரம்ப பொது வழங்கலுக்கான அழைப்பு பொதுமக்களுக்கு விடுக்கப்படுகின்ற போது, ஆர்வமுள்ளவர்கள் அந்த நிறுவனம் தொடர்பாக ஆராய்ந்து பார்க்கின்றனர். நிறுவனத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள், இலாபம் உழைக்கும் விதம், மூலதனத்திற்கும் இலாபத்திற்குமிடையிலான விகிதாசாரம் போன்ற பல விடயங்களை கருத்தில் எடுத்து, குறித்த நிறுவனத்தின் பங்கினை வாங்குவது தொடர்பில் முடிவெடுக்கின்றனர்.

இதில்தான், பங்குவர்த்தகம் தொடர்பில் எடுக்கப்படுகின்ற பாரிய இடர் தொக்கி நிற்கின்றது. அனுமானங்களும் ஆய்வுகளும் இறுதியில் பிழைக்கும் பட்சத்தில் போட்ட முதல் அம்போதான்.

மறுதலையாக, சரியாக அமைந்துவிட்டால், ஏகபோகம்தான். இந்த Risk இனை குறைப்பதற்கும் சரியாக பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கும் பங்கு வர்த்தகம் தொடர்பில் தெளிவான அறிவு இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

 

பங்குச்சந்தை

 

விற்றல் வாங்கல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பமொன்றில் ஏற்படுகின்ற அதே கேள்வி நிரம்பல் தொழிற்பாடும் இந்த பங்கு பரிவர்த்தனையிலும் ஆரம்பிக்கின்றதால், சந்தைக்கான தேவை உருவாகுவதால், பங்குச்சந்தையின் வகிபாகம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றது.

நிறுவனங்களின் மற்றும் பங்காளர்களுக்கான பாதுகாப்பு, நிதியினை முறைப்படுத்தல் போன்றவற்றிற்கான அவசியம் காணப்படுகின்ற இந்நிலையில் அரசின் இடையீடு அவசியமாகின்றபடியால், முறைப்படுத்தப்பட்ட ஒரு சட்ட வரையறைக்குள் பங்குச்சந்தை தொழிற்பட தொடங்குகின்றது. 

 

பங்குச்சந்தை தொழிற்படும் முறை

 

நிறுவனத்திற்கான மூலதனத்தினை பெறுவதற்கான மூலோபாயமாக பங்கு பரிவர்த்தனை நடைபெற்றாலும், பங்கினை மையமாக வைத்து நடைபெறுகின்ற வியாபார நடவடிக்கைகளே பங்குச்சந்தையில் இடம்பெறுகின்றது.

பங்குச்சந்தையில் முதலிடுவது எப்படி (How to invest in share market?) – என்ற கேள்விக்கு ஆரம்ப பதிலாக இதை எடுத்துக் கொள்ளுங்கள்.

உரிய நிறுவனத்தின் பங்கினை ஒரு பொருளாதார பண்டமாக நீங்கள் உருவகப்படுத்தினால், இது இலகுவாக புரியும். அந்த பண்டத்திற்கான கேள்வி நிரம்பல் என்பனவற்றிற்கு அமைய வியாபாரம் நடைபெறுகின்றது.

உரிய பங்கிற்கான கேள்வி அதிகரிக்கின்றது எனில், அந்தப் பங்குடன் தொடர்பான நிறுவனமானது வளர்ச்சியடைகின்றது; அதன் இலாபம் உழைக்கும் விகிதம் அதிகரிக்கின்றது எனப் பொருள். எனவே, அதிகளவான முதலீடுகளை அந்நிறுவனம் பங்குகள் மூலம் ஈர்க்கின்றது.

இதே விடயம் மறுதலையாக நடைபெறுகின்ற போது, பங்காளர்கள் தங்களது பங்குகளை விற்றுவிட்டு அகல முனைவர்.

இவை இரண்டும் இரு அந்தங்கள். இவை இரண்டிற்கும் இடையிலான அனுமானமே, பங்குச்சந்தையில் பணம் உழைப்பதற்கான வழிகளை காட்டித் தருகின்றது. துல்லியமான எதிர்வுகூறல் பங்குச் சந்தையில் Vital Role இனை வகிக்கின்றது. ஆனால், அது ஒன்றும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. அதேநேரம் சாத்தியமற்றதும் இல்லை.

 

இன்னும் தெரிய வேண்டியது பல உள்ளன.

 

இதுவரைக்கும் நீங்கள் வாசித்து அறிந்தது அறிமுகம் மட்டுமே. பங்குச் சந்தை, பங்குச்சந்தை முதலீடு தொடர்பில், தெரிந்த தேடிய விடயங்கள் என பலவற்றினை இனிவரும் தொடர்களில் உங்களுக்காக தர எண்ணியுள்ளேன்.

தொடர்ந்து இணைந்து இருங்கள்.

 

அடுத்ததாக, இலங்கையின் பங்குச்சந்தை தொடர்பான அறிமுகம்..

பகிர:

Leave a Reply