இலங்கையில் தற்போது சர்ச்சையாக மாறி உள்ள ஜனாசா எரிப்பு தொடர்பில், இலங்கை ஒரு பக்கமும் ஏனைய உலக நாடுகள் மறுபக்கமும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அந்த நிலைப்பாட்டில் இன்னும் உறுதியோடிருக்க தற்போது Denmark Mink களை துணைக்கழைக்கின்றனர் இலங்கையின் துறைசார் நிபுணர்கள்.
உலக சுகாதார நிறுவனம் – Covid தொற்றினால் மரணிப்பவர்களை மத நம்பிக்கைகளுக்கமைவாக அடக்கலாம் அல்லது எரிக்கலாம் என அனுமதித்திருந்தும் ஆசியாவின் ஆச்சரியத்தில், அடக்க அனுமதி இன்னும் இல்லாமல் இருக்கின்றது. புவியியல் படித்த Virologist அடக்குவதால் உண்டாகும் கொரோனா பாதிப்புக்கள் தொடர்பில் விஞ்ஞானம் படித்த Virologist களுக்கு, திரும்பத் திரும்ப புரியவைக்க போராடிக் கொண்டிருக்கின்றார். அரசாங்கம் கூட, புவியியல் விஞ்ஞானி சொல்வதைத்தான் கேட்போம் என ஒற்றைக் காலில் நின்று கொண்டிருக்கும் ஆச்சரியம் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது. ஆசியாவின் ஆச்சரியங்களில் இதெல்லாம் ஒரு விடயமா என எண்ணத் தோன்றுகின்றதல்லவா?
உண்மைதான்! ஆனாலும், அண்மையில் அடக்குவதில் உள்ள அபாயம் தொடர்பில், டென்மார்க்கில் – Mink எனப்படும் எலிக் குடும்ப விலங்குகள் தொற்றுக்குள்ளானதால், கொல்லப்பட்டு புதைக்கப்பட்டு மீண்டும் அவை எரிக்கப்படுவதாக ஒரு சம்பவத்தை சுட்டிக் காட்டினார் நமது Virologist. சம்பவம் ஒன்று நடந்துதான் உள்ளது. ஆனால், காரணம் அதுதானா? என இணையத்தில் தேடிய போது, கிடைத்த தகவல்கள் வேறாக இருந்தன. அதன் ஒரு தொகுப்பே இந்தக் கட்டுரை.
Mink விலங்குகள் ஏன் வளர்க்கப்படுகின்றன?
இவை உரோமங்களுக்காக வளர்க்கப்படுகின்றன. விலை உயர்ந்த குளிர் ஆடைகள் மற்றும் பேசன் உடைகளுக்கு இதன் உரோமங்கள் பயன்படுகின்றன. மட்டுமல்லாது, அழகுசாதனப் பொருட்களுக்கும் இதன் உரோமங்கள் பயன்படுகின்றன.
உலக உரோம உற்பத்தியில் (Fur Production) ஐரோப்பிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. ஐரோப்பாவில் உரோம உற்பத்தி பண்ணைகள் 5000 , 22 நாடுகளில் உள்ளதாக கணக்கெடுப்பு ஒன்று கூறுகின்றது. இது உலகின் உரோம உற்பத்தியில் 50% ஆகும்.
Mink உரோம உற்பத்தியில் டென்மார்க் உலக சந்தையில் முதலிடத்தில் உள்ளது. மொத்த உற்பத்தியில் 28% இனை டென்மார்க் தன்னகத்தே கொண்டுள்ளது. Mink விலங்குகளை உரோமங்களுக்காக மட்டுமல்லாது, அதன் உடலங்களை சேதன உரம், மற்றும் கொழுப்பினைக் கொண்டு சவர்காரம் போன்ற உற்பத்திகள் என பல்வேறு வழிமுறைகளிலும் டென்மார்க் Mink விலங்குகளை பணமாக்குகின்றது.
கொரோனாவுக்கும் Mink களுக்கும் என்ன சம்பந்தம்?
உரோமங்களுக்காக வளர்க்கப்படும் Denmark Mink பண்ணைகளினையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை. அங்கும் பரவியது. அதில் அதிக கவனத்தை ஈர்த்த விடயம். COVID தொற்றியது Mink களுக்கு, கொரோனாவின் திரிபடைந்த (Mutation) ஒரு வைரஸ் அவற்றில் ஊடுருவியதும் அதன் மூலம், அந்தப் பண்ணைகளில் வேலை செய்யும் மனிதர்களை அவை தாக்கியதுமாகும்.
இது டென்மார்க் மட்டுமல்லாது. Mink பண்ணைகளை கொண்டுள்ள – நெதர்லாந்து, ஸ்பெய்ன்,இத்தாலி மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளில் உள்ள பண்ணைகளும் Covid தொற்றுக்குள்ளாகி உள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிடுகின்றது. ஆனால், இந்த உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடாக டென்மார்க் காணப்படுவதால், அனைவரது கவனமும் டென்மார்க்கின் மீது குவிந்துள்ளது.
தொற்றுக்குள்ளான ஒரு mink இலிருந்து மனிதர்களுக்கு மாறும் இந்த வைரஸ், பூனை , நாய் போன்றவற்றைப் போலல்லாது மிக குறைந்தளவான நோயறிகுறிகளையே காட்டுவதாக குறிப்பிடுகின்றனர். இதன்படி, Denmark Mink களிடமிருந்து இதுவரைக்கும் 200 இற்கும் மேற்பட்டோர் தொற்றினை காவியுள்ளதாக டேனிஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை இந்த வைரஸ்கள், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு மாறும் Covid வைரஸ்களை விட வீரியம் குறைந்ததாகவும் கூறப்படுகின்றது. அதேவேளை மனிதர்களுக்கு தொற்றுகின்ற விகிதமும் மிக குறைந்தளவே காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். இருந்தும் இந்த விலங்குகள் Covid வைரஸ்களின் சேமிப்புக் கிடங்குகள் செயற்படும் அபாயம் காணப்படுவதையும் அவர்கள் குறிப்பிட தவறவில்லை.
அதோடு, Covid தொற்றுக்குள்ளாகும் அனைத்து விலங்குகளுக்கும் தடுப்புமருந்து கொடுப்பதற்கான பூர்வாங்க வேலைகளை ரஸ்யா ஆரம்பித்துள்ளதுடன், அமெரிக்கா – Mink களுக்கான Covid தடுப்பு மருந்துகளை தயாரிக்க, மிருகங்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்யும் மருந்துற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
COVID அச்சத்தினால் Mink களை அழித்த டென்மார்க்
ஏற்கனவே, பிராணிகள் நலன்புரி அமைப்புக்களால், பெரும் சவாலுக்குட்படுத்தப்பட்டிருந்த உரோம உற்பத்தித் துறைக்கு இன்னொரு பேரிடியாக COVID தொற்று அமைந்துவிட்டது. Mink களில் தொற்றிய COVID மனிதர்களை காவும் என்ற அச்சத்தில் உடனடி நடவடிக்கையாக டென்மார்க்கின் 1000 இற்கும் குறையாத பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த 17 மில்லியன் Mink களை கொன்று விடும் (Cull) கடினமான தீர்மானத்தை கடந்த நவம்பர் மாத ஆரம்பத்தில் டேனிஸ் அரசாங்கம் எடுத்ததுடன், 2021 இன் நடுப்பகுதி வரை Mink உரோம உற்பத்தியினையும் பண்ணைகளையும் மூடி விடவும் அரசாங்கம் தீர்மானத்தினை எடுத்துள்ளது.
இந்த முடிவுகள் தொடர்பாக, ஆட்சியாளர்கள் பெரும் அரசியல் அழுத்தத்தினையும், Mink உரோம உற்பத்தியாளர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பினையும் சந்தித்தனர். 17 மில்லியன் Mink களை கொல்ல எடுத்த முடிவு, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, டென்மார்க் அரசாங்கத்தின் விவசாயத்துறை அமைச்சர் இராஜினாமா செய்யும் வரை சென்றுள்ளது. Mink உரோம உற்பத்தியில் முதலிடத்தில் இருந்த டென்மார்க், இந்த முடிவினால், பொருளாதாரீதியில் உரோம உற்பத்தியில் ஈடுபட்ட பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக ஆபத்தில்லாத இந்த திரிபு வைரஸிற்காக ஏன் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்த எதிர்ப்பினால், அரசு ஏற்கனவே எடுத்த 17 மில்லியன் Mink கள் கொல்லும் முடிவில் இருந்து பின்வாங்கிய அரசாங்கம், பண்ணையாளர்கள் தாமாக Mink களை கொல்ல வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்திருந்தது. நவம்பர் 4 வரைக்கும் 15.4 மில்லியன் Mink கள் கொல்லப்பட்டதாக ஒரு தகவல் சொல்கின்றது.
கொல்லப்பட்ட Mink கள் மூலம் தோன்றிய சர்ச்சை
காபனீரொட்சைட்டு கொடுத்து கொத்து கொத்தாக கொல்லப்பட்ட Denmark Mink கள் அனைத்தும் ஒரு இட த்தில் புதைக்கப்பட்டது. 2.5 மீட்டர் ஆழத்திலும் 3 மீட்டர் அகலமுமான நீண்ட குழிகள் வெட்டப்பட்டு Mink கள் படைகளாக புதைக்கப்பட்டன. முதல் படைக்கும் இரண்டாம் படைக்கும் இடையில் 1 மீட்டர் தடிப்பில் சரளைக் கற்கள் இடப்பட்டு புதைக்கப்பட்ட தாக, அசோசியட் செய்திச் சேவைக்கு டென்மார்க்கின் கால்நடை மற்றும் உணவு நிர்வாகத்திற்கு பொறுப்பான அதிகாரி Jannike Elmegaard குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர் குறிப்பிடுகையில், மணற்பாங்கான மேற்படை என்பதால், இறந்த Mink களின் உடல்கள் ஊதிப் பெருத்து வெளியேறியுள்ளது. இதனால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை, வெளியேறிய உடலங்களை மீண்டும் களிப்பாங்கான இடங்களில் அடக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்றார்.
Zombie Mink எனக் குறிப்பிடப்படும் இப்பிரச்சனையானது, புதைத்துள்ளதால் Covid பரவும் என்ற வாதத்தினை ஓரிடத்திலும் முன் வைக்கவில்லை. அவற்றின் உடல்கள் அழுகும் செயற்பாடுகள் காரணமாக, Mink கள் புதைக்கப்பட்டுள்ள இராட்சத சவக் குழிக்கு அண்மையில் காணப்படுகின்ற ஏரி மாசடைய வாய்ப்புள்ளதாக பிரதேச வாசிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது சூழல் மாசடைவு தொடர்பான அவர்களது அக்கறையே அன்றி, கொரோனா தொற்று தொடர்பானது அல்ல.
மேலும், புதைக்கப்பட்ட mink களில் 4 மில்லியன் உடலங்களை தோண்டி எடுத்து முறைப்படி எரித்துவிடுவதற்கான அனுமதியை டென்மார்க் சட்டமன்றம் இந்த வார இறுதியில் வழங்க உள்ளது. இந்த செயற்பாடு வரும் வருட மே மாதமளவில் நடைபெற உள்ளதாகவும் அறியமுடிகின்றது.
பெரும் எண்ணிக்கையில் புதைக்கப்பட்ட இந்த விலங்குகளின் உடல் அழுகுகின்ற செயற்பாடானது, நிலத்தடி நீரினையும் சூழலையும் பாதிக்கச் செய்யலாம் என்ற அச்சமே இந்த நடவடிக்கையினை மேற்கொள்ள காரணம். இறந்த உடலிலிருந்து கொரோனா வைரஸ்கள் தம்மை மீளுருவாக்காது எனவும் டென்மார்க் விவசாய அமைச்சு மக்களுக்கு தெளிவு படுத்தியுள்ளது.
மனம் வருந்தும் செயற்பாடு
Mink களை அழிக்க எடுத்த நடவடிக்கை தொடர்பில் பிரதமருக்குள்ள சட்ட இயலுமை தொடர்பில் அங்கு சர்ச்சை இன்னும் ஓய்ந்துவிடவில்லை, அது தொடர்பான விசாரணைகள் அவசியம் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றதும் கவனிக்க வேண்டியது.
அதே வேளை, Mink களை (Cull) கொல்லுவது தொடர்பில் தான் எடுத்த முடிவு தொடர்பில் டென்மார்க்கின் பிரதமர் Mette Frederiksen தனது கவலையினை ஊடகங்கள் முன் தெரிவித்த போது அழுதிருந்தார். தமது மக்களை காப்பாற்றுவதற்கு எடுத்த ஒரு கடினமான முடிவு இது எனத் தெரிவித்திருந்ததுடன், இதனால் நஸ்டமடைந்த பண்ணையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
முடிவாக,
கொரோனா தொற்றுடன் மரணிப்பவர்களை எரிப்பதற்கு எமது நாட்டு விஞ்ஞானி(?) முன்வைத்த இந்த டென்மார்க் கதை மேம்போக்காக பார்க்கின்ற போது, எரிப்பதற்கு சாதகமான வாதம் போலத் தோற்றமளித்தாலும், அப்பிரச்சனையின் பின்புலமும் அதில் உள்ள சிக்கல்களும் வேறு. அதை
கண்டும் காணாமல் விட்டுவிட்டு புதைத் தை தோண்டி எரிக்கப் போகின்றனர். அதற்கு காரணம் கொரோனா என பொத்தாம் பொதுவாக சொல்லுவது வேடிக்கையானது.
- கொரோனா தொடர்பான அச்சம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் புதைத்த 15 மில்லியன் Mink களும் எரிக்கப்பட வேண்டும். இங்கு அவ்வாறு நடைபெறவில்லை.
- எரிக்கும் நடவடிக்கையும் இன்னும் 5 மாதங்களின் பின்பே நடைபெறப் போகின்றது. கொரோனா ஆபத்துள்ளதாயின் இவ்வளவு காலம் எடுக்க முடியாது.
- ஏரி, மற்றும் புதைக்கப்பட்டுள்ள பகுதி நிலத்தடி நீர் என்பன பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு, பொதுவான சூழல் பிரச்சனையாகவே அங்கு நோக்கப்படுகின்றது.
- நிலத்தடி நீர் தொடர்பான ஆய்வுகளை தற்போது அரசு குறித்த பகுதியில் நடாத்திக் கொண்டிருக்கின்றது.
போன்ற காரணங்களால், டென்மார்க்கின் Mink எலிகளின் கொரோனா தொடர்பான பிரச்சனைக்கும் எமது நாட்டின் ஜனாசா எரிப்புக்கும் தொடர்பில்லை என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
எப்படி என்றாலும், கருத்தடை மாத்திரை கலந்த கொத்துரொட்டியில் தொடங்கி கொரோனா பாணியில் வந்து நிற்கும் நாட்டின் பிரஜைகளுக்கு இவை முறையான விஞ்ஞானிகள் சொல்லி ஒருநாளும் புரியப்போவதில்லை. வைரஸ்களைப் பற்றி பாடமெடுக்க புவியியல் படித்திருந்தால் மட்டுமே அரசும் நம் மக்களும் கேட்டுக் கொள்வர் போலத் தோன்றுகின்றது.