Qalby Etmaan : ஏதிலிகளை மலரச் செய்யும் ஒரு மாயாவி

Spread the love

இருப்பதை கொடுத்து மகிழும் மனம் கிடைப்பது – ஒரு வரம்! இருந்தும் ஈயாமல் வாழும் மனங்கள் என்றும் அமைதி பெறாது. சாந்தி கொள்ளும் மனத்தினை (Qalby Etmaan)  பெற வாரி வழங்க வேண்டும்.

இதை,

மரணம் எனும் பெருந்துன்பத்தை விட கொடியது, வறியோர்க்கு ஏதும் வழங்க இயலாத மனத்துயர் எனபொருள்பட,

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை

என்கின்றான் வள்ளுவன்.

ஆனால் துயரம் – இன்று பலரும், தர்மத்தை விளம்பரத்திற்காகவே செய்கின்றனர். ஒரு கையால் வழங்குவது மறு கைக்கு தெரியக்கூடாது என்பதை மறந்து, தெரியவேண்டும் என்பதற்காகவே வழங்கும் காலம் இது! மறுதலையாக தம்மை மறைத்து அள்ளிவழங்கும் கொடையாளர்களும் இல்லாமல் இல்லை. அதில் சிலரது அணுகுமுறை இன்னும் வித்தியாசமாக உள்ளது. அப்படியான ஒருநபரைப்பற்றித்தான் இங்கு விபரிக்கவுள்ளேன்.

 

Qalby Etmaan – உறுதியான உள்ளம்

 

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுதான் அது! பெயர் – Qalby Etmaan ( இந்த அரபுச் சொல்லை – உறுதியான உள்ளம் என மொழிபெயர்க்கின்றது கூகிள்) ஒவ்வொரு ரமழான் காலத்திலும் Youtube இலும் அமீரகத் தொலைக்காட்சி சேவை ஒன்றிலும் ஒளிபரபப்படும் இந்நிகழ்ச்சி – பொருள் இல்லாதவர்களுக்கு, தேவை உள்ளோருக்கு உதவி செய்கின்ற Youtuber களிடையே பிரபல்யமான Social Experiment வகையான நிகழ்ச்சி போல தோன்றினாலும் இது முற்றிலும் வேறாக காணப்படுகின்றது.

பொருளாதாரீதியில் நலிவடைந்து காணப்படுகின்ற ஏமன், சிரியா, லெபனான், ஜோர்தான், துனீஸியா, சோமாலியா, எகிப்து போன்ற வட ஆபிரிக்க  மற்றும் அராபிய தீப கற்பக நாடுகளிற்கு சென்று இவர் உரிய பயனாளிகளை சொல்லாமல் கொள்ளாமல் போய் உதவுவது  இன்னொரு சிறப்பு

அது மட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சி வேறுபட இன்னும் பல காரணங்கள் காணப்படுகின்றன. அதில் முக்கியமான இரு காரணங்கள்,

  1. அதில் இல்லாதவர்களை சென்று சந்தித்து உதவுகின்ற நபர் தனது அடையாளத்தை மறைத்து அதை செய்வது.
  2. மற்றது, வழங்கப்படும் உதவிகளின் பிரம்மாண்டம்!

அவர் தன்னை Ghaith ( غيث ) என அழைத்துக் கொள்கின்றார். அதற்குப் பொருள் மழை! மிகப் பொருள் பொதிந்த பெயர்தான் அது. தலையினை மறைத்து Hoodie வகையான டீ சேர்ட்டும், முதுகுப் பையுமே இவரது அடையாளம். மூன்று வருடமாக ஒளிபரப்படும் இந்நிகழ்ச்சியில் இதுவரை இவரது முக அடையாளத்தினை யாரும் கண்டதில்லை. பேச்சில் உள்ள கம்பீரமும் வசீகரமும் ஒருதடவையாவது இவரைக் காணக்கூடாதா என அனைவரையும் அவாவுறச் செய்யும்.

தனது அடையாளத்தினை மறைத்து வைப்பதற்கு அவர் சொல்லும் காரணம் இங்கு மிக முக்கியமான ஒரு செய்தி கூட!

Ghaith ஒரு தனிமனிதனல்ல! அது ஒரு சமூகப் பொறுப்பு/ ஒரு சமூக உணர்வு! அது உள்ள அனைவரும் ஒவ்வொரு Ghaith! இச்செய்தி அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும். எனது அடையாளம், எனது நோக்கத்தினை மாற்றி மழுங்கடித்துவிடக்கூடும் என அச்சப்படுகின்றேன்.

என்கிறார்.

அமீரக செம்பிறைச் சங்கம் (Emirates Red Crescent) மற்றும் தனிநபர்களின் நிதிப்பங்களிப்புகளுடன் இவரால் அளிக்கப்படும் உதவிகள் மிகப்பிரமாண்டமாக உள்ளன.

முதல் சீஸனில் தனிநபராக இவரால் அளிக்கப்பட்ட நிதிப்பங்களிப்பினையும் கிடைத்த வரவேற்பினையும் தொடர்ந்து  அமீரக செம்பிறைச் சங்கம் (Emirates Red Crescent) இவரது முயற்சிக்கு இன்னும் வலுச் சேர்க்க இணைந்து கொண்டது.

இந்த ரமழானில்  மூன்றாவது சீஸனாக ஒளிபரப்பாகும் இத்தொடருக்கு முன்பய இரு தொடர்களிலும் இவரால் பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்த பணத் தொகை 1 கோடி டொலர்கள்!! என ஒரு இணையத் தளம் கூறுகின்றது. அதற்கு மேலாகவும் இருக்கலாம்.

அன்றாட பொழுதைக் கழிக்க அல்லல்படுகின்ற மக்களிடம், வாழ்நாளில் அவர்கள் எண்ணியும் பார்த்திராத உதவிகள் கிடைக்கின்ற போது, அவர்களின் உணர்ச்சி வெளிப்பாடுகள் காணுகின்ற நம்மையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றது. இதனால், இந்நிகழ்ச்சிக்கென தனியான ஒரு ரசிகர் கூட்டமே சேர்ந்துள்ளதையும் இங்கு கூற வேண்டும்.

27 ஏப்ரல் 2020 இல் பத்தாயிரத்துக்கும் அதிகமான தடவைகள் தேடப்பட்ட வார்த்தையாக Qalby Etmaan காணப்படுவதோடு  Google Trend இல் Qalby Etmaan எனும் Keywords மூன்றாவது இடத்திலும் காணப்பட்டதோடு ஐந்து லட்சத்துக்கதிகமான Impressions களை Twitter இல் பெற்றுள்ளதும், இந்நிகழ்ச்சி எந்தளவுக்கு மக்களிடையே சென்று சேர்ந்திருக்கின்றது என்பதை உதாரணமாக சொல்லலாம்.

உணர்வுபூர்மான நெருக்கமொன்றை Ghaith நமக்கு தருவதால் என்னவோ, நமக்கும் அவருக்குமிடையில் ஒரு மனநெருக்கம் உண்டாவதை நீங்கள் அறிவீர்கள். அவரின் கொடுக்கும் குணம் கூட நமக்குள் இருக்கும் வள்ளலை இன்னும் இன்னும் கொடுக்கக் கூட தூண்டலாம்.

நிகழ்ச்சியை காண : Qalby Etmaan

பகிர:

Tags: , , ,

Leave a Reply