உஸ்தாத் ஹோட்டல் : உப்புப்பாவின் முஹப்பத்

Spread the love

உப்புப்பாவின் உஸ்தாத் ஹோட்டல்

உஸ்தாத் ஹோட்டல்

தாத்தா பேரன் உறவு ஒருவித ரம்யத்தை தன்னுள்ளே கொண்ட ஒன்று! அதிலும் புத்தி தெரிந்த வயதில் பாட்டன்மாருடன் வாழக் கிடைப்பது ஓர் வரம்!

வயதான நண்பனாக, வழிகாட்டியாக பல பாத்திரங்கள் அவருக்கிருக்கும், பெற்றோரிடமிருக்கும் சில வரையறைகள் கூட அங்கிருக்காது. அது – அருமையான ஓர் உணர்வு! அதை வார்த்தைகளால் விபரிக்க முடியுமோ  தெரியாது!

அண்மையில் மீண்டும் ஒரு முறை உஸ்தாத் ஹொட்டேல் திரைப்படம் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வே மேற்சொன்னது. மலையாளத் திரைப்படங்கள் – நமது வாழ்க்கையினை மிக அண்மித்ததான அனுபவத்தினை பல சந்தர்ப்பங்களில் தந்திருக்கின்றது. சிறு வார்த்தைகள் தொடங்கி ஒரு க்‌ஷணப்பொழுதில் வெட்டி மறையும் காட்சிகள் என அது ஒருவித அலாதி அனுபவத்தினை தர என்றும் பின்நின்றதில்லை.

உஸ்தாத் ஹோட்டல் திரைப்படமும் அப்படித்தான்! பலவித உணர்வுகளின் கலவை அது! ஒவ்வொருமுறையும் ஒவ்வொன்றை நமக்குச் சொல்லித் தரும்!

பாட்டன் பேரன் உறவிலுள்ள சுவாரசியங்களை ; ஓர் வாழ்ந்து கழித்த கிழவன் – தன்னிடமிருக்கும் வாழ்வின் அனுபவங்களை இளையவனுக்கு கொட்டிக் கொடுத்துவிட வேண்டும் என்ற அவசரம்; அதில் உள்ள அழகு என்பவற்றை நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

இவ்விருவருக்குமான சம்பவங்கள் – மழைக்கால அதிகாலையினை ஒத்த சிறுகதைகள் போல இருக்கும்.

சமையற்காரரான உப்புப்பாவுக்கும் ( இவ்வார்த்தையில் உள்ள அழகு இன்னும் நம்மை நெருக்கமாக்குகின்றது! ) பேரனுக்கும் இடையில் சுலைமானி (தேநீர்) தொடர்பில் ஆரம்பிக்கும் உரையாடல், காதலில் வந்து நிற்கின்றது.

பேரன்: உப்புப்பா! நிங்கட முஹப்பதுட கத பறஞ்சு தரோ?

உப்புப்பா : உப்புப்பா க்கு முஹப்பத்துண்டாகிருந்துன்னு  நினக்கெங்கன ஒறப்பு?

பேரன் : அது… சுலைமானி குடிச்சாட்களல்லே அதின்ட ருசி அறியாயுள்ளு!

Ustad Hotel Malayalam DVD English Subtitles, All Regions by ...

உப்புப்பா சிரிக்கின்றார்…

வாதிலில் ஆ வாதிலில் காதோர்த்து நீ நின்னீலே …..

என ஆரம்பிக்கும் மெல்லிசையுடன் உப்புப்பா ,

தனது 18 வயதில் ஊர்ப் பெரியவர் ( மௌலவி ) வீட்டு திருமணத்திற்கு (நிக்கஹ்) பிரியாணி சமைக்க சென்ற போது, கண்ட தேவதையில் (ஹூர்ளீன்!) தான் கொண்ட காதலை பேரனுக்கு சொல்கின்றார். அத் தேவதையினை கண்டதும் உண்டான காதலை கவிதையாக விபரிக்கிறார் உப்புப்பா!

… பாதியில் பாடாதொரா தேனூறிடும் இஹ்ஸலாய் ஞான்…. என பின்னணியில் மெல்லிசை போக..

காதல் தொடர்கின்றது.

குறுக்கிடும் பேரன் யாரது? என ஆர்வமாக கேட்க,

“மௌலவின்ட  மோளே, அவளின்ட நிக்கஹ்கல்லே ஞான் பிரியாணி வைக்காம் போயிருந்து…” என்ற உப்புப்பாவின் பதில், பேரனை வெடிபடச் சிரிப்புக்குள்ளாக்குகின்றது.

மணநாளன்று, மணப்பெண்ணின் மீது கொள்கின்ற காதலுக்கு ஆயுள் எத்தனை மணித்தியாலங்களாக இருக்கப் போகின்றது? அதுவும்  ஒரு சமையலறை உதவியாளின் காதல்? யாரென்றாலும் சிரிப்பார்கள்தான்!

சிரிப்பிற்கிடையில், “இந்திட்டு.. எந்துண்டாயி?” எனக் கேட்கும் பேரனிடம், “எந்துண்டாவணும்” என தொடங்கும் உப்புப்பாவை இடைமறித்து, “நிங்களின்ட பிரியாணியும் தீர்ந்து.. நிக்காஹ்ஹும் களிச்சுப் போயி..” என பேரனே அதே ஹாஸ்ய சிரிப்புடன் முடிவுரை எழுதிவிடுகின்றான்.

உப்புப்பா சிரித்துக் கொண்டே, “ நினக்காரொடொன்னும் முஹப்பத் தொன்டுமில்ல?” என பேரனைக் கேட்க,”ஞெனக்கங்கென ஒன்னுமில்ல…. முஹப்பத்து!!” எனும் பேரனை நமுட்டுச் சிரிப்புடன் அகல்கின்றார் உப்புப்பா!

பின்னணியில்,

காணானொரு வழி தேடி..

காணும் நேரம் மிழி மூடி….

ஓமலே நின்னீலையோ…

நாணமாய் வழுதீலையோ..

என மெல்லிசைக்கின்றது பாடல்!

உப்புப்பா கொடுக்கும் அதிர்ச்சி

 

உறங்கத் தயாராகும் உப்புப்பாவை பகிடி பண்ண எண்ணுகின்றான் பேரன்!

“உப்புப்பா ஏதான, ஆ! ஹூர்ளின மனசிந்து விட்டுட்டில்லா” என்கின்றான். படுத்தவாறே உப்புப்பா பேரனை விளிக்கிறார்…. “ மோனே பைஸி!”

“எந்தா உப்புப்பா?”

“ஆ! ஹூர்ளி ஆரானு அறியோ? நின்ட உம்மும்மா!” என்ற உப்புப்பாவின் வார்த்தை What??? என்ற அதிர்ச்சியுடன் துள்ளி எழ வைக்கின்றது.

சுவரில் மாட்டியிருக்கும் அவர்களின் திருமணப் புகைப்படத்தை வாஞ்சையுடனும் பிரியத்துடனும் பார்க்கின்றான். கைகளில் அதை எடுத்துக் கொண்டே உப்புப்பாவை நோக்கி வருகின்றான்.

உப்புப்பா நிம்மதியாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கின்றார்.

ஹார்மோனியத்தின் வருடுகின்ற இசை இழை ஒன்றுடன் காட்சி முடிகின்றது.

ஒரு சிறுகதை போல முடிகின்ற இக்காட்சியினை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதே இல்லை! பேரனாக துல்கர் சல்மானும் உப்புப்பாவாக திலகனும் நடித்திருப்பார்கள். உப்புப்பாவிற்கு திலகனை விட சரியான தேர்வு இருந்திருக்க வாய்ப்பே இல்லை! அப்படி ஒரு தத்ரூபமான நடிப்பு!

இக்காட்சியில் பின்னணியில் ஒலிக்கும் பாடல்! இச்சிறுகதையின் இன்னொரு சுவை! காதல் ரசம் சொட்ட சொட்ட மதுர மொழியாம் மலையாளத்தில் அப்பாடல் ஒரு அலாதி அனுபவம்!

அனுபவித்துப் பாருங்கள்!

இன்னொன்று – பொருள் விளங்க பெரிதாக முயற்சிக்க வேண்டியதில்லை! மலையாளம் தமிழின் மருவிய வடிவமே.. கொஞ்சம் முயற்சித்தால், மலையாளம் கைவரப்பெறும்!

பகிர:

Leave a Reply