நடுக்கடலில் இருக்கும் அமெரிக்க கடற்படை கப்பலுக்குள் கொரோனா வாம்! அப்படின்னா இந்த கொரோனா வைரஸ், சமூக இடைவெளி எல்லாம் புருடா! இது அதையெல்லாம் தாண்டி வேறு ஏதோ! என செவி வழி கேட்ட தகவல்களையும் சேர்த்து உள்ளூர் Conspiracy பிரியர்களுக்கு மெல்ல இதைவிட அவல் வேறெதுவும் வேண்டுமா?
ஆனால், தேடியதில் கிடைத்த தகவல்கள் நேர் எதிராக உள்ளன
அவற்றினை சுருக்கமாக,
- அமெரிக்காவின் Theodore Roosevelt (CVN 71, or TR) எனும் விமானந்தாங்கிக் கப்பல்தான் அது!
- Guam எனும் அமெரிக்காவின் கடற்படைத் தளத்தினை (தீவு) தரிப்பிடமாக கொண்ட இக்கப்பல் – கொரோனாவினை அமெரிக்கா பெரிதாக கண்டு கொள்ளாத ஜனவரி நடுப்பகுதியில் அதாவது 17 இல் அமெரிக்காவின் சான்டியாகோ துறைமுகத்திலிருந்து COVID Test Kits எதுவுமின்றி, Guam இனை நோக்கி Capt. Brett Crozier இன் தலைமையில் 4,865 கடற்படை வீரர்களுடன் புறப்படுகின்றது. திட்டமிட்டபடி பெப்ரவரி 7 இல் Guam இனை அடைகின்றது அவ்விமானம் தாங்கி!
- முன்பு திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாக, அமெரிக்காவுக்கும் வியட்னாமுக்குமிடையிலான ராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து 25 ஆண்டுகள் நிறைவினை கௌரவிக்கும் முகமாக Theodore Roosevelt விமானம் தாங்கி மார்ச் 5 ஆம் திகதி வியட்னாமின் Da Nang துறைமுகத்தை – வியட்னாம் யுத்தத்திற்கு பின் – 40 ஆண்டுகளுக்கு பின்னர் வியட்னாமில் தரிக்கும் இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பல் எனும் வரலாற்று பதிவுடன் தரை தட்டுகின்றது.
- மார்ச் 5 இல் வியட்னாமில் எந்தவொரு சிகிச்சை பெறுகின்ற கொரோனா தொற்றாளர்களும் இருக்கவில்லை. அதற்கு முன்னர் 16 பேர் தொற்றிலிருந்து குணமாகி இருந்தனர்.
- ஆனால், மார்ச் 8 இல் இரு பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் உட்பட பலருக்கு கொரோனா தொற்று இருப்பது வியட்னாமிய சுகாதாரத் துறையால் உறுதிப்படுத்தப்படுகின்றது.
- இது இவ்வாறிருக்க, மார்ச் 9 இல் Theodore Roosevelt விமானம் தாங்கி வியட்னாமிலிருந்து புறப்படுகின்றது.
- இதேவேளை, சான்டியாகோ வில் தரித்து நின்ற அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான நாசகாரி கப்பலான USS Boxer (LHD-4)இல் அமெரிக்க கடற்படையினைச் சேர்ந்த முதலாவது Covid 19 தொற்றாளர் – மார்ச் 15 இல் கண்டுபிடிக்கப்படுகின்றார்.
- இதைத் தொடர்ந்து இரு வேறு கப்பல்களில் இரு கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றுடன் மார்ச் 18 இல் கண்டுபிடிக்கப்
படுகின்றனர். இவற்றுக்கு பின்னால் வேறு சம்பவங்கள் உள்ளன.
- பின்னர் மார்ச் 22 இல் Theodore Roosevelt விமானம் தாங்கியில் முதலாவது கொரோனா தொற்றுடன் முதலாவது கடற்படை வீரர் கண்டுபிடிக்கப்படுகின்றார். தொடர்ச்சியாக மார்ச் 24 இல் இருவர் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சைக்காக கப்பலை விட்டு அகற்றப்பட்டனர் (medevaced). தொடர்ந்து மார்ச் 25 இல் ஐவரும் இதே பாணியில் அகற்றப்பட்டனர்.
- மார்ச் 26 இல் Theodore Roosevelt விமானம் தாங்கியில் இருந்த அனைவருக்கும் Covid 19 தொற்றுப்பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
- இவ்வாறு தொடங்கி எப்ரல் 11 வரை மொத்த கப்பலில் இருந்த 4865 பேரில் 550 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன் 3696 பேர் கப்பலில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏப்ரல் 13 இல் முதலாவது மரணமும் பதிவாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை மேல் சர்ச்சை
கொரோனா தொற்று தொடர்பாக வெளிநாடுகளில் சேவையில் இருக்கும் படையினருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களையும் தமது மேலதிகாரிகளின் வழிப்படுத்தல்களையும் சரியாக பின்பற்றவில்லை என்று கூறி கப்டன் Brett Crozier பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவமும் அமெரிக்க அரசியல் பரப்பில் ஒரு சர்ச்சையினை தோற்றுவித்துள்ளதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.
மேலே தொகுக்கப்பட்ட விடயங்கள் இணையத் தேடலில் கிடைக்கப்பெற்றவை. இத்அன் மூலம் தெளிவாகின்ற விடயம், நமது Conspiracy பிரியர்கள் கூறுவது போன்று, மனித த் தொடர்புகள் எதுவுமில்லாத கப்பலுக்குள் கொரோனா வருவதற்கான சாத்தியம் எப்படி? என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. மேலே தொகுக்கப்பட்டுள்ள விடயங்களை மேலோட்டமாக நோக்கினாலே, கப்பலுக்குள் கொரோனா நுழைந்த வழிகளை இலகுவாக நாம் கூறிவிடலாம்.
எந்தவொரு Conspiracy க்கு பின்னாலும் இப்படி ஒரு நிஜமான கதை இருக்கும். அதைத் தேடிப்பார்க்க நாம் தயாரில்லை அல்லது, Conspiracy களின் மீதுள்ள ஈர்ப்பு- அவற்றினை நம்புவதோடு நம்மை சுய திருப்திப்படுத்துவதால், அதோடு நின்றுவிடுகின்றது.