வேர்ச்சுவல் பிரச்சார மேடைகள்

Spread the love

வேர்ச்சுவல் பிரச்சார மேடைகள்அனைத்திலும் ஒரு அங்கமாகிவிட்ட சமூக வலைத்தளங்களின் பங்கு அரசியலையும் தீர்மானிக்கும் நிலை வரை வளர்ந்துவிட்டது! இச்சமூக ஊடகங்களை வேர்ச்சுவல் பிரச்சார மேடைகள் என கூறுவதிலும் தப்பில்லை.

டொனால்ட் ட்ரம்ப் தொடங்கி மோடி முதல் எமது கோத்தாபய வரை சமூக ஊடகங்கள் இவர்களின் வெற்றிக்கு பெரும் பங்கினை ஆற்றியுள்ளன.

(மோடியின் முதலாவது வெற்றி அதன் பின்னால் நின்றுழைத்த பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகவல்லுனர்களின் உழைப்பு போன்றன தொடர்பில் பல்வேறு கட்டுரைகளும் ஆய்வுகளும் விமர்சனங்களும் இணையமெங்கும் விரவிக் கிடக்கின்றன. முன்பு ஒரு தரம் எழுதிய எனது கட்டுரையின் இணைப்பு இங்குள்ளது.)

சமூக ஊடகங்களில்,மேற்குறித்த அரசியல் தலைமைகள் தொடர்பான Positive Image இனை மக்களிடையே உண்டு பண்ணுவதில் பாரிய பங்களிப்பினை ஆற்றின! அதெற்கென அவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சிகள் அத்துறை சார் வல்லுனர்களை பணிக்கமர்த்தி ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் ஊடாக தமது கட்சி தலைமைகளை ஒரு Brand ஆக முன்னிறுத்துவதில் முனைப்புடன் செயற்பட்டு அதில் வெற்றியும் பெற்றன.

இதே நடைமுறையினைப் பின்பற்றி தமது கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்ல பல கட்சிகள் முனைப்புக் காட்டுவதனையும் நாம் காணலாம்.

தலைமை மற்றும் கட்சியின் கொள்கை விளக்கங்கள் தொடங்கி, தேசிய முக்கியத்துவமிக்க அரசியல் சமூக நிகழ்வுகளில் உரிய தரப்பும் நிலைப்பாடுகள் போன்றன தெளிவாக மக்களை சென்றடைய இன்றைய நிலையில் பேஸ்புக் போன்ற இந்த வேர்ச்சுவல் பிரச்சார மேடைகள் ஆக செயற்படும் இச்சமூக ஊடகங்களின் பங்கு ஏனைய இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களை விட வினைத்திறன் மிக்கதாக உள்ளது. இதை இனங்கண்டு சரியாக பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் நபர்கள் தமது இலக்கை அடைவதில் சிரமங்களை குறைவாகவே எதிர்நோக்குகின்றனர்.

இந்தவகையில், தற்போதைய இலங்கையின் சிறுபான்மை அரசியல் சூழ்நிலை ஆரோக்கியமானதாக இல்லை. அதிலும் நமது பாடு என்னவாகும் என்பதை அனுமானிக்கக் கூட முடியவில்லை. அரசியல்ரீதியில் நாம் தனித்துவிடப்பட்ட ஒரு உணர்வினை இன்றைய சூழல் நமக்கு தந்துள்ளது.
ஆனால், உரிய இந்நிலையினை சுமூகமாக்கும் எந்தவொரு நடவடிக்கையினையும் வெற்றி பெற்ற தரப்பில் உள்ள முஸ்லிம் கட்சியோ தோற்ற தரப்போ மேற்கொள்ளவில்லை.

இவ் இக்கட்டான சூழ்நிலையில் வினைத்திறனாக பயன்படுத்த வேண்டிய வேர்ச்சுவல் பிரச்சார மேடைகள் இன்று வெறும் நையாண்டிகளுக்கும், தோற்றவர்களை கேலிக்குள்ளாக்கும் பதிவுகளுக்குமே நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதன்மூலம் உண்டாகும் எதிர் மறையான பிம்பம் வாக்காளர்களை கட்சியினை விட்டும் தூரமாக்குமே தவிர புதிய கட்சி ஆதரவாளர்களை உருவாக்காது.

எமதூருக்கான பிரதிநிதித்துவம் என்பதைத் தாண்டி கிழக்கிற்கான தலைமை நமது இலக்கு என்றால்,
– சமூக ஊடகங்களை வினைத்திறனுடன் கையாளக்கூடிய ஒரு குழு சரியான முன் ஆயத்தங்களுடன் களமிறங்க வேண்டியது அவசியம்.

– உரிய தரப்பு தொடர்பாக அதிகாரமளிக்கப்பட்ட ஒரு நபரோ குழுவோ சமூக ஊடகங்களை கையாளுவதை உறுதிப்படுத்த வேண்டியதும் அவசியம்.

– தமது ஆதரவாளர்களுக்கு சமூக ஊடகங்களை எப்படி கையாள்வது என்பது தொடர்பிலான ஒழுக்கக்கோவை ஒன்றினை தயரித்து அளிப்பதும் ஏற்புடையது.

– எதிராக உள்ளவர்களை மாற்றி இணக்கமாக்கக் கூடிய வகையில் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துப் பகிர்வுகளை தொடங்கி அதனை வழிநடாத்துவது பற்றிய அறிவினை தமது ஆதரவாளர்களுக்கு வழங்குவதும் அவசியமானது.

– மேம்போக்கான கருத்துக்கள், நிச்சயமற்ற எதிர்வுகூறல்கள் போன்றன இன்னும் நிலமையினை மோசமாக்கலாம்.

எனவே இவற்றினை கவனத்தில் கொண்டு எமது எதிர்கால அரசியல் இலக்கினை நோக்கி நாம் பயணித்து உரிய இடத்தினை அடைய முயற்சிப்போம்.

பகிர:

Leave a Reply