முறையற்ற கணக்கீட்டு முறை : வியாபாரமுயற்சியின் தோல்வியில் பெரும் பங்கினை வகிக்கும் காரணி

Spread the love

சிறு மற்றும் நடுத்தர வியாபார முயற்சிகள்

 

பொருளாதார வளார்ச்சி, அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் இலங்கை போன்ற வளர்முக நாடுகள் தற்போது கவனத்தினைக் குவித்திருப்பது சிறிய மற்றும் நடுத்தர வணிகத் துறைகளின் மீதே. இலங்கையினைப் பொறுத்தவரையில், SME எனப்படும் இத்துறையானது, மொத்த வணிகத்தில் 75% சதவீத்தினையும் வேலைவாய்ப்பில் 52% னையும் பங்களிப்பாக இலங்கைப் பொருளாதாரத்திற்கு அளிப்பதோடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52% னை தமது பங்களிப்பாக வழங்குவதாகவும் கைத்தொழில் வாணிப அமைச்சின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

பாரம்பரிய விவசாயப் பொருளாதாரத்தினை மட்டும் நம்பி தங்கி இராமல் இலங்கை போன்ற வளர்முக நாடுகள் வணிகம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் தமது பார்வையினைச் செலுத்தி அவற்றினை தமது பொருளாதாரத்தில் பெரும் பங்காளராக மாற்றுவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இலங்கையில் SME இன் நிலை

 

இலங்கையினைப் பொறுத்தவரையில் SME இனை மேலும் வலுப்படுத்த அரசு எத்தனிப்பதற்கு மற்றுமொரு காரணம் இலங்கையில் காணப்படுகின்ற வேலையின்மையும் முக்கிய காரணமாகும். இதன் மூலம் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துவதோடு நில்லாமல், இளைஞர்களை தொழில்முயற்சியாளர்களாக மாற்றுவதற்கான முயற்சிகளினையும் அரசாங்கம் மேற்கொள்கின்றது.

நடைமுறையில் அரசாங்கம் இதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதும், இம்முயற்சிகளில் ஈடுபடுகின்ற முயற்சியாளர்களின் எதிர்மறையான நடவடிக்கைகள் அவர்களை அதைரியப்படுத்துவதனையும் காணக்கூடியதாக உள்ளது. இதில் மிக முக்கியமானது – சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் முறையான கணக்குகளைப் பேணுவதில்லை!!

கணக்குப் பேணலில் தொழில்முயற்சியாளர்கள் காட்டும் அசட்டுத்தனம் அவர்களின் வியாபாரப் பயணத்தினை இடைநடுவில் விட்டுவிடுவதற்கான பிரதான காரணியாக உள்ளது.

 • போதிய கணக்கீட்டு முறை அறிவின்மை
 • தமது கணக்குகளை பேண ஒருவரை நியமிப்பதற்கான செலவு.
 • தமது வியாபாரம் மற்றும் நிதி தகவல்களை மூன்றாம் நபருக்கு வழங்குவதில் தயக்கம்
 • கணக்கீட்டு செயற்பாட்டிற்கு முக்கியமளிக்காமை.

போன்ற காரணங்களால் தொழில் முயற்சியாளர்கள் தமது வியாபார கணக்கீடுகளை மேற்கொள்ளப் பின் நிற்கின்றனர்.

கணக்கீட்டு முறை

ஆனால், கணக்கினை முறையாக பேணாமல் விடுகின்ற போது ஏற்படுகின்ற பாதகங்கள் மேற்கூறிய காரணங்களால் ஏற்படுகின்ற எதிர்விளைவுகளை விடவும் அதிகமானது.

அதில் பிரதானமானது , காசுப் பாதீடு தொடர்பில் ஏற்படுகின்ற குழப்பம்! தமது தொழில் புரள்கின்ற நிதியினை சரியாக முகாமை செய்ய முறைப்படுத்தப்பட்ட கணக்குகள் அவசியமாகின்றது. அமேரிக்க வங்கி ஒன்றின் கணக்கெடுப்பின் படி 82% ஆன தொழில்முயற்சிகள் மற்றும் சிறிய நிறுவனங்கள் சரியான நிதி முகாமைத்துவம் மற்றும் கணக்கீட்டு முறை இல்லாத காரணத்தினால் தோல்வியினைச் சந்திக்கின்றன என அறியவருகின்றது.

மற்றொரு விடயமாக, செலவுகளைச் சரியாக கண்காணிப்பதில் முறைப்படுத்தப்பட்ட கணக்கீட்டு முறையானது மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது. நிறுவனம் ஒன்றின் எதிர்காலத் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கு அதன் செலவுகள் தொடர்பான தெளிவான கண்காணிப்பு அவசியமாகும். அவ்வாறில்லாத பட்சத்தில் நெடுங்காலம் நிலைத்து நிற்பதில் அந்நிறுவனம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கும்.

அதேபோன்று, விற்பனை மற்றும் கொள்முதல் தொடர்பான பதிவுகள், கொடுப்பனவுகள் போன்றன, எதிர்கால வியாபார நடவடிக்கைகளுக்கு அவசியமானவை. எந்தவொரு பதிவுகளும் முறைப்படுத்தப்பட்ட கணக்கீட்டு முறையில் காணப்படாத வேளையில் நிறுவனத்தின் வளர்ச்சி தேக்கமடைவதை தடுக்கவே முடியாது.

ஒரு முறையான கணக்குப் பதிவர்,

 • சரியான நிதி முகாமைத்துவத்திற்கு தேவையான தகவல்களை தருவார்.
 • தொழில்முயற்சி / நிறுவனம் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளுக்கு தேவையான தகவல்களை அளிப்பார்.
 • உபரியாக ஏற்படுகின்ற செலவீன ங்களை தவிர்ப்பதற்குரிய தகவல்களை வழங்குவார்.

இதன் மூலம் நிறுவனம் சரியாக இயங்க முடியும்.

ஆகவே, சிறிய வியாபார முயற்சியானாலும், முறைப்படுத்தப்பட்ட கணக்குப் பதிவுகளை பேணுதல் கட்டாயப்படுத்தப்பட வேண்டும். அதுவே ஒரு வியாபார முயற்சியின் ஆரம்ப வெற்றி என்றே கருத இடமுண்டு.

முடியுமானால், முறைப்படுத்தப்பட்ட கணக்கீட்டு முறை க்கு , கணனிமயப்படுத்தப்பட்ட சிறிய கணக்கீட்டு மென்பொருட்களை பயன்படுத்த முடியுமென்றால் நிச்சயமாக அம்முயற்சி நம்பிக்கை அளிப்பதாக காணப்படும்.

இது தொடர்பில் இன்னும் அதிகமான விழிப்புணர்வு நமது வியாபாரச் சமூகத்திற்குள் ஏற்படவேண்டியது காலத்தின் தேவை என்பதும் கவனிக்கத் தக்கது.

மேலதிகமாக இது தொடர்பில் தகவல்கள் / உதவிகள் வேண்டுமெனில் தொடர்புகளை மேற்கொள்ளுங்கள்.

 

  பகிர:

  Leave a Reply