உணவு விரயம் : சுருக்கக் குறிப்பு

Spread the love
உணவு விரயம்!

1.3 பில்லியன் டொன்’ ஆண்டொன்றில் விரயமாகும் உணவின் அளவு!

680 பில்லியன் டொலர் பெறுமதியான உணவு கைத்தொழில் மய நாடுகளில் இருந்தும் 310 பில்லியன் டொலர் பெறுமதியான உணவுகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இருந்தும் உணவு விரயம் ஆகின்றன.

பழங்கள், மரக்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளே அதிக விரயத்திற்கு உள்ளாகும் உணவுகளாகும்.

 

இவை ஐநாவிற்கான உணவு மற்றும் விவசாயத்திற்கான முகவர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள்!

 

இதில் நமது பங்களிப்பும் நிச்சயமாக இருக்கும்.

சிறிய அளவென்றாலும் நாமும் இந்த விரயத்தின் பங்குதாரர்களாக இருக்கின்றோம்.!
உணவகங்களில் தொடங்கி திருமண வலிமாக்கள் வரை நமது பங்களிப்பு சிறிதும் பெரிதுமாக நீண்டு கொண்டே செல்கின்றது. விரயத்தை விரும்பி நாம் செய்வது உணவில் மட்டும்தான் போல… அதுவும், என்ன நினைப்பார்களோ என்ற எண்ணமே பல இடங்களில் உணவை விரயமாக்க நம்மவர்களை தூண்டுகின்றது.

நம்மில் எத்தனை பேர் உண்டபின் உணவகங்களில் மீந்து போகின்ற உணவை பார்சல் கட்டிக் கேட்கும் துணிவுள்ளவர்கள்? நமக்குள்ளே கேள்வி கேடு பார்த்தால் நிலவரம் புரியும், உணவு பரிமாறும் ஊழியர் முதல் கூட வந்தவன் வரை என்ன நினைப்பார்களோ என்ற கவலையில் விரயத்தை அனுமதித்துவிட்டு சென்றுவிடுகின்றோம்.

இதே நிலைதான் ஊரில் நடைபெறும் வலீமா மற்றும் அகீகா விருந்துகளிலும் நடைபெறுகின்றது.!

விரயமாகும் உணவுகள் பற்றி வெளிப்படையாக பேசத் தயங்குகின்ற நிலை! வெளிப்படையாக பேசத் தொடங்கினால், பெயர் கெட்டுவிடும்.! அவப்பெயர், கௌரவத்திற்கு பங்கம் என பல்வேறு சதத்திற்கும் பெறாத காரணங்கள்.!

இவை எல்லாவற்றையும் புறம் ஒதுக்கி வைத்துவிட்டு, கௌரவத்திற்காகவும் ஆடம்பரத்திற்காகவும் நடைபெறும் கொண்டாட்டங்கள் விருந்துபசாரங்கள் மூலம் ஏற்படும் உணவு விரயங்களை தடுத்து அதை தேவையுடையோருக்கு கொண்டு செல்வது தொடர்பில் ஏன் நாம் ஒரு முன்னெடுப்பினை மேற்கொள்ள முயலக்கூடாது?

தற்போது, ஊரில் நிறைய திருமணங்கள் நடைபெறுவதால், இது சரியான சந்தர்ப்பமாக இருக்கும் என எண்ணுகின்றேன்.

அண்மையில், இது போன்ற ஒரு செயற்திட்டம் தொடர்பான ஆவணப்படம் ஒன்றினை காண நேரிட்டது. தமிழ்நாட்டினைச் சேர்ந்த சில இளைஞர்கள் இணைந்து, திருமண மண்டபங்களில் மீதமாகும் உணவுகளை கேட்டுப் பெற்று அதே தினத்தில் தேவையுடையவர்களுக்கு கொண்டு சேர்க்கின்ற பணியினை மேற்கொள்கின்றனர். மிதமிஞ்சி வீண்விரயமாகப் போகின்ற உணவு ஒரு பக்கம் என்றால், அரை வயிற்றுடன் காலம் தள்ளும் நிலமை இன்னொரு புறம். இவை இரண்டுக்குமிடையிலான பாலமாக அத் தனார்வலர்கள் செயற்படுகின்றனர். இதன் மூலம் மூன்று தரப்புக்கும் நன்மையே!

நமது ஊரிலும் திருமணக் காலங்களில் நடைபெறுகின்ற வலீமா விருந்துகளிலும் இது போன்ற ஒரு நடவடிக்கையினை தன்னார்வல இளைஞர்கள் இணைந்தோ அல்லது ஏற்கனவே களத்தில் உள்ள றோயல் யூத்ஸ் போன்ற அமைப்புக்களோ நடைமுறைப்படுத்தலாம்.

உடனடியாக உணவு கிடைக்கக் கூடிய தூரத்தில் உள்ள‌ தேவையுடையவர்களின் தகவல்கள் மற்றும் விருந்து வழங்குபவர்களை தொடர்பு கொள்ளக்கூடிய ஏதாவதொரு ஊடகம், கொண்டு செல்லக்கூடிய வகையிலான வாகனம் ( எண்ணிக்கையினை பொறுத்து ) மற்றும் தன்னார்வலர்களாக பணியாற்றக்கூடிய தொண்டர்கள். என்பன இருந்தால் இதனை வெற்றிகரமாக செய்யலாம்.!

வீண்விரயத்தை மட்டுமல்லாது, தேவையுடையோருக்கு உணவளித்த நன்மையினை உணவளித்த நண்பர்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதோடு, நம்மால் முடிந்த ஒன்றை செய்த திருப்தியும் நமக்கு கிடைக்கும்.

 

பகிர:

Leave a Reply