Central Bank Bond Scam – மத்திய வங்கி ஊழல் : திருடாமல் திருடிய கதை

Spread the love

மத்திய வங்கி ஊழல் – Central Bank Bond Scam

 

நிறையப்பேரினால் மெல்லப்பட்டாலும், என்ன அது எனக்கேட்டால், பெரிதாக விபரம் வராது, சிதம்பரச் சக்கரத்தை பேய் பார்த்த கதைதான்!

மத்திய வங்கிக் கொள்ளை என அரசியல் தரப்பால் விழிக்கப்படும் இவ்வூழல் தொடர்பான கற்பிதங்கள் பெரும்பாலும் பிழையாகவே பொதுமக்களிடையே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இது நாட்டிற்கான இழப்புத்தான்! ஊழல்தான்! ஆனால் எப்படியான ஊழல் என்பதில நமக்கும் கொஞ்சம் தெளிவிருக்க வேண்டியது அவசியமாகின்றது. சாதாரண ஒரு வழிப்பறித் திருட்டோ, கத்தலோ அல்ல இது! அது போன்று யோசிக்கவும் முடியாத ஒரு வகையான நூதனமான கொள்ளையாகும்! சட்டரீதியாக இச்செயற்பாட்டினை நியாயப்படுத்தவும் வழிகள் உள்ளன என்பதும் இங்கு சுட்டிக்காட்ட தக்கது!

இது தொடர்பில் ஒரு தெளிவினை நாம் பெற வேண்டுமெனில், பிணை முறி ( Treasury Bond / T- Bond ) என்றால் என்ன என நோக்க வேண்டும்!

அரசாங்கங்கள் தமது நிதிப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய குடிமக்களிடமிருந்து நிதியினை கடனாக பெறுகின்ற ஒரு நடைமுறை என இலகுவாக சொல்லலாம்.

பிணை முறி என்றால் என்ன?

முதலீட்டு முறைகளில் மிகப்பாதுகாப்பானதும், உத்தரவாதத்துடன் கூடிய இலாபத்தினையும் திறைசேரிப் பிணை முறிகள் வழங்குவதால், இதில் முதலிட முதலீட்டாளர்கள் தயங்குவதில்லை. இதன் மூலம் அரசாங்கத்திற்கு தேவையான நிதி கிடைப்பதுடன் முதலீட்டாளர்களும் நன்மை பெறுகின்றனர்.

Image result for central bank bond scam

பிணை முறியானது 10 தொடக்கம் 30 வரையான வருடங்களை முதிர்வுக்காலமாக கொண்டிருக்கும்.

முகப்புப் பெறுமதி விற்பனைப் பெறுமதி என இரு பெறுமதிகளைக் கொண்டும் காணப்படும். அதாவது, அரசினால் விற்கத் தீர்மானிக்கப்படும் ஒரு பிணை முறியின் முகப்புப் பெறுமதி 100 ரூபாய்கள் என்றால், முதலிட விரும்பும் தரப்புக்களால், கோரப்படுகின்ற அதி உச்சத் தொகைக்கு அம்முறி விற்கப்படும்.

உதாரணமாக, A, B, C என மூன்று பேர் இப்பிணை முறியினை கொள்வனவு செய்ய, முறையே 90, 86, 92 என தமது  BID இனை முன்வைக்கின்றனர் என்றால், உச்சத் தொகையான 92 ரூபாய்களைக்கு கேட்ட C க்கு அம்முறி விற்கப்படும். உரிய முறிக்கான வருடாந்த வட்டிவீதம் 10% எனவும் முதிர்வுக்காலம் 30 வருடங்கள் எனவும் எடுத்துக்கொண்டால், வருடமொன்றிற்கு C வட்டியாக 10 ரூபாய்களைப் பெறுவார். முதிர்வின் பின்னர், தமது முறியின் முகப்புப் பெறுமதியான 100 ரூபாய்களை அரசிடமிருந்து அவர் மீளப் பெற்றுக் கொள்வார்.

இதுதான் திறைசேரிப் பிணை முறி தொடர்பான வழிமுறை!

இதில் இன்னொரு விடயமும் கவனிக்க வேண்டியது! அதாவது, ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய பிணை முறிகளின் அளவை மத்தியவங்கி தீர்மானித்தாலும், அதை கூட்டக் குறைக்க அதற்கு அதிகாரமும் உள்ளது!

அதாவது, மேற்கூறிய உதாரணத்தில், ஒரு பிணை முறியினை C இற்கு மட்டும் விற்காமல் A, B இற்கும் மத்தியவங்கி விற்கலாம்! அது மத்தியவங்கியின் தீர்மானம்!

 

ஊழல்!

 

நாம் தற்போது நமது வங்கிக் கொள்ளைக்கு வருவோம்!

மேற்கூறிய பிணை முறிக் கொடுக்கல்வாங்கல் நடைமுறைகள் தெளிவாக விளங்குமானால், இலங்கையில் நடந்த ஊழல் இலகுவாக புரியும்.

Perpetual Treasuries  என்றொரு நிறுவனம்! இதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் – அர்ஜூன் அலோஸியஸ். இவர்  – அப்போதைய மத்திய வங்கி ஆளுனரான அர்ஜூன் மகேந்திரனின் மருமகன்!  தொடக்கப்புள்ளி இந்த உறவில்தான் உண்டாகின்றது.

 

Central Bank Bond Scam இல் நடந்தது என்ன?

 

“நல்லாட்சி” ஆட்சிக்கு வந்தவுடன் திறைசேரியின் நிதிப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய திறைசேரி பிணைமுறிகளை விற்க அரசாங்கம் தீர்மானிக்கின்றது. முறிகளின் மொத்த முகப்பு பெறுமதி 1 பில்லியன் இலங்கை ரூபாய்கள். 30 வருட முதிர்வுக் காலத்தினைக் கொண்ட இம்முறிகளை வாங்க முதலீட்டாளர்களை கோருகின்றது மத்திய வங்கி. இலங்கை வங்கி மற்றும் ஏனைய அரச வங்கிகள் தொடங்கி ஏனைய அரச வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் தமது ஏலத்தொகையினை முன் வைக்கின்றன.  ஏலம் நடைபெற்ற 27 பெப்ரவரி 2015 இல் ஒரு பில்லியனுக்கான பிணைமுறிக்கான விலை கோரல் 20.7 பில்லியனாக காணப்பட்டது.   ஒருநாளும் இல்லாத திருநாளாக இவ்வளவு பெரிய ஏலம் இலங்கையின் நிதிச் சந்தையில் இதுவரை நடைபெறவே இல்லை என்பது ஆரம்ப நெருடலாக தொடங்கியது துறை சார்ந்தோரிடம்.

அதிலும் உச்சபட்ச ஏலத் தொகையினை  Perpetual Treasuries  நிறுவனமே முன் வைத்திருந்ததும் 5 பில்லியனுக்கு மேலான பிணை முறி அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதும் இன்னும் சந்தேகத்தை கூட்டின. இதில் இன்னொரு விசேடம் என்னவென்றால், இலங்கை வங்கி மூலமாக Perpetual Treasuries மேற்கொண்ட கொள்வனவாகும். 3 பில்லியன் ரூபாய்களை இலங்கை வங்கியானது Perpetual Treasuries  க்கு நிதிக்கடனாக அளிக்க முன்வந்திருந்தது. நிதிச் சந்தையில் உள்ள இடர்கள் (Risk) தொடர்பாக கருத்தில் கொள்ளும் எந்தவொரு கடன்கொடுனரும் இவ்வளவு பாரிய தொகையினை ஒரு புதிய நிதி நிறுவனத்திற்கு அளிக்க முன்வரமாட்டார்கள்! அவ்வாறு அளிக்கப்படுகின்றதென்றால், நடைபெறவுள்ள பேரங்கள் பற்றிய தகவல்கள் ஏற்கனவே பரிமாறப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரக் கூடியதாக இருக்கும். அதுதான் உண்மையும் கூட!

இவ்வாறு மத்திய வங்கியின்  அங்கிகரிக்கப்பட்ட 1 பில்லியன் பிணை முறிகளின் தொகையினை 10 மடங்காக்கி அதில் அரைவாசிக்கு அதிகமான தொகையினை Perpetual Treasuries நேரடியாகவும் மறைமுகமாகவும் வாங்கிக் கொண்டது.  இது வரை அவர்களின் நடவடிக்கை மீது ஓரளவு சமாதானமடையக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தாலும் இதன் பின்னர் நடந்த விடயங்களே அவர்களின் மீதான சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்த ஏதுவாக அமைந்தது.

அதற்கு காரணம் ஊழியர் சேமலாப நிதியம் ( EPF & ETF )!

 

ஊழியர் சேமலாப நிதியம் ( EPF & ETF ) இன் பங்கு

 

 

தொழில் வழங்குனர் மற்றும் தொழிலாளர்களால் அளிக்கப்படுகின்ற நிதியினை அரசு சார்பில் பல்வேறு முதலீடுகளில் இடுவதில் மிக முக்கிய பங்காற்றுகின்ற தாபனமான இது பல்வேறு ஊழல்களிலும் நிதிக் கையாடல்களிலும் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. அந்த வகையில் மத்திய வங்கி கொள்ளை எனக்கூறப்படும் இச்சமவத்திலும் பிரதான சூத்திர தாரிகளில் ஒன்றாக ஊழியர் சேமலாப நிதியம் உள்ளது.

அதாவது நேரடியான பிணை முறி ஏலத்தின் மூலம் பெறக்கூடிய முறிகளை Perpetual Treasuries மூலம் இவர்கள் கொள்வனவு செய்கின்றனர். அதாவது, குறைவான விலைக்கு பெறக்கூடிய முறிகளை, செயற்கையாக விலை கூட்டப்பட்ட பின்னர் அரசாங்கம் கொள்வனவு செய்கின்றது அன்றாடங்காய்ச்சிகளான நமது பணத்தின் மூலம் ! அதாவது ஊழியர் சேம லாப நிதியத்தின் மூலம்!

நேரடியாக இலாபத்தில் கொள்வனவு செய்யவேண்டிய பிணை முறிகளை சுற்றி வளைத்து Perpetual Treasuries இலாபம் உழைக்க வேண்டும் என்ற ஒரே நல்ல நோக்கத்திற்காக (!@!!??) ஊழியர் சேம லாப நிதியம் Switching முறையில் பேன் ஏசியா வங்கி மூலம் அன்றாடங்க்காய்ச்சிகளான அரச ஊழியர்களின் நிதியிலிருந்து பிணை முறிகளை கொள்வனவு செய்திருந்தது.

இவை அனைத்தும் வெளியிலிருந்து நோக்குகின்ற போது உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே அனைத்து கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் செயற்பாடுகள் நடைபெற்றது போலத் தோன்றினாலும், நடந்துள்ள அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் நூதன ஊழல் என்பன கொஞ்சம் ஆழமாக நோக்குகின்ற போது தெளிவாகப் புரியும்.

 

Perpetual Treasuries இதன் மூலம் பெற்ற இலாபம் எவ்வளவு?

 

இப்பிணைமுறி கொள்வனவு மூலம் Perpetual Treasuries யானது உழைத்த இலாபத்தின் அளவு தொடர்பில் பல்வேறுபட்ட மாற்றுக் கருத்துக்கள் காணப்படுகின்றன. 10 பில்லியனுக்கு மேற்பட்ட தொகை என்பது உறுதி!

இத்தொகையினை அவர்கள் இலாபமாக பெற அவர்களுக்கு அரச தரப்பிலிருந்தும் ஏனைய தரப்புக்களும் பல்வேறு உதவிகளை மறைமுகமாக வழங்கி இருந்தன. அவ்வுதவிகளுக்கு முழு மூலமும் முன்னாள் மத்தியவங்கி ஆளுனரின் கைங்கரியமே.

இதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்ட பண இழப்பே இங்கு பிரதான அம்சமாகும். அதாவது நேரடியாக – உரிய நடைமுறைகளைப் பின்பற்றி இப்பிணைமுறிகளை அரச ஸ்தாபனமான ஊழியர் சேமலாப நிதியம் கொள்வனவு செய்திருக்குமாயின் இங்கு கூறப்படும் நிதியிழப்பானது அரசுக்கு ஏற்பட்டிருக்காது. இப்பிணைமுறி மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உழைக்கும் இலாபம் அரசுக்கு சென்றிருக்கும். ஆனால், தமது பதிவிநிலை மூலம், தனிப்பட்ட லாபங்களை கருத்தில் கொண்டு அதிகாரிகளும் சில அரசியல்வாதிகளும் மேற்கொண்ட இந்நடவடிக்கையினால் ஏற்பட்ட நிதியிழப்பானது மிகவும் பாரதூரமானதாகும்.

மூன்றாம் உலக நாடுகளில் இது போன்ற பல்வேறு ஊழல்கள் சரவசாதாரணமாக மக்களை கடந்து சென்றாலும், இலங்கையில் இடம்பெற்ற இந்த Central Bank Bond Scam ஆனது அரசியல்மயப்படுத்தப்பட்டு மக்களிடையே பிரச்சாரத்திற்காக மட்டும் பாவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்ட நிதி மற்றும் பொருளாதார இழப்புக்களை மீட்டெடுப்பது தொடர்பில் உண்மையான கரிசனை கொண்ட தரப்பினை காணக் கிடைக்கவில்லை.

பகிர:

Tags: , , ,

Leave a Reply