உயர்தர கலைப்பிரிவு :தெரிந்தே வீணடிக்கப்படும் வாய்ப்புக்கள்

Spread the love

கலைப்பிரிவு : வாழ்ந்து கெட்ட எஜமான்

 

கலைப்பிரிவு மாணவர்களும் உயர்தரப் பரீட்சை முடிவுக்காலத்தில் ஏனைய விஞ்ஞான பௌதீக துறை போல  பெறுபேறுகளை பெற்றிருப்பர்.

அனைவருக்கும் அவலாகிப் போன முடிவுகளில் வாய்க்கு ருசியாக இருப்பதென்னவோ பௌதீக, உயிரியல் விஞ்ஞானப் பிரிவுகள் மட்டும்தான். மற்றத் துறைகள் சீந்துவாரில்லாமல் போய்விட்டது!! கல்வி முன்னேற்றம் என்பது தெரிவாகும் நான்கைந்து வைத்திய மற்றும் பொறியியல் துறை மாத்திரமே தங்கியுள்ளதென்பது நீண்டகாலத்திற்கும் நாம் நம்பிக் கொண்டும் நம்பவைத்துக் கொண்டிருக்கும் ஒரு கருத்து!

நமது கற்றறிந்த (!) சமூகம் கூட அதைத்தான் நம்பச் சொல்லி நம்மைப் பணிக்கின்றது. சாதாரண தரத்தில் நல்ல பெறுபேறுகள் கிடைத்தால் விஞ்ஞானம்! இல்லை என்றால் கலையோ வணிகமோ! இதிலிருந்து ஆரம்பிக்கும் இக்கற்பிதங்கள் உயர்தரப் பெறுபேறு வரை தொடர்கின்ற நிலைதான் இப்போதுள்ளது.

அதிலும், இக்கலைப் பிரிவு!! ரொம்ப்ப்ப்ப பாவம்!! அதுவும் இந்த தொழில்நுட்பப் பிரிவின் வருகையின் பின்னர் இன்னும் நலிவடைந்து வாழ்ந்து கெட்ட ஜமீந்தார் போலாகிவிட்டது! உயர்தரம் கற்க வேண்டும்! என்ற காரணத்திற்காக, வேறு செய்ய வழியில்

லை என்பதற்காக கலைப் பிரிவு இன்று பாவிக்கப்படுகின்றது. அதிலும் ஆண்கள் இன்று அதை சீண்டுவதில்லை! “தொண்ணூறே நாட்களில் ஆங்கிலம் பழக” வகையறா கற்கைநெறிகள் இருக்க ஏன் இரு வருடங்களுக்கு மல்லுக்கட்ட வேண்டும் என்ற உய

ரிய(!) சிந்தனை! கலை என்றால் பெண்களுக்கு என்றே ஆகிப் போனது.

நமது பிரதேசங்களில் கலைப் பிரிவினை விரும்பி தேர்ந்தெடுத்த யாராவது இருப்பார்களா என்பது சந்தேகமே!! அதற்கு காரணங்கள் இல்லாமலும் இல்லை!

அதில் மிக முக்கியமானது இன்னும் நமது பிரதேசத்தில் உயர்தரக் கலைப்பிரிவிற்கான பாடங்கள் தொடர்பான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. ஆசிரியர் சமூகம் தொடங்கி பாடசாலை தொடர்பான அனைத்து தரப்பினரும் இதில் அசிரத்தையுடனே உள்ளனர். சுற்றிச் சுற்றி அதே இஸ்லாமும், இஸ்லாமிய நாகரீகமும், தமிழும், அரசியலும் என நான்கோ ஐந்தோ பாடங்களை மட்டுமே மாணவர்களுக்கும் பழக்கப்படுத்தி வைத்துள்ளனர். Z Score முறைமை மூலமான பல்கலைக் கழகத் தெரிவு ஒரு புறமிருக்க, அரசாங்கத்தினால், புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பல்வேறு கற்கை நெறிகளுக்கான ஆளணிகளை பெறுவதற்கும் ஏதுவான ஒரே துறை – கலைத் துறையே!! உண்மையில் ஏனைய துறைகளை விட பரந்தளவில் பல்கலைக்கழக நுழைவுக்கு பரந்து பட்ட வாய்ப்பினை கலைத்துறை அளிக்கின்றது. அதிலும் சில விஷேடமான கற்கை நெறிகள் வேண்டி நிற்கும் ஆளணிகளின் தேவை மிக அபரிதமானது.

ஆனால், நம் பிரதேசங்களில் கலைத்துறையில் கற்கும் மாணவர்களால், அவற்றைத் தெரிவு செய்ய முடியாது! காரணம் – பாடத் தேர்வு!!

 

பாடத் தேர்வுகள்

 

இலங்கையின் உயர்தரப் பிரிவுகளில் அதிகப் பாடத் தேர்

உயர்தர கலைப்பிரிவு

வினைக் கொண்ட பிரிவு எதுவென்றால் அது கலைப்பிரிவு மட்டுமே! மொத்தம் 25 பாடங்கள் உள்ளன! நம்ப முடிகின்றதா?? இப்பாடங்களை,

 • சமூக விஞ்ஞானம்
 • சமயமும் நாகரீகங்களும்
 • அழகியல் (Aesthetics)
 • மொழிகள்

என நான்கு பெரும் பிரிவுகளாக பிரித்துள்ளனர்.

சமூக விஞ்ஞானப்பாடங்களாக,

 • பொருளியல்
 • புவியியல்
 • வரலாறு ( இலங்கை இந்திய வரலாறு அல்லது ஐரோப்பிய வரலாறு அல்லது உலக வரலாறு )
 • மனைப் பொருளியல்
 • அரசியல் விஞ்ஞானம்
 • அளவையியலும் விஞ்ஞான முறைமையும்
 • கணக்கீடு அல்லது வியாபாரப் புள்ளிவிபரவியல்
 • விவசாயம் அல்லது கணிதம்
 • கீழுள்ள தொழில்நுட்ப பாடங்களிலிருந்து ஒரு பாடம்
  • குடிசார் தொழில்நுட்பம்
  • மின், இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
  • விவசாயத் தொழில்நுட்பம்
  • பொறிமுறை தொழில்நுட்பம்
  • உணவுத் தொழில்நுட்பம்
  • உயிர் வள தொழில்நுட்பம்
 • தொடர்பாடலும் ஊடககற்கையும்
 • தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்

ஆகிய 11 பாடங்கள் உள்ளன.

 • சித்திரம்
 • நடனம் ( இலங்கை / இந்திய )
 • சங்கீதம் ( கர்நாடக /  மேற்கத்தைய )
 • நாடகமும் அரங்கியலும் ( தமிழ் / சிங்கள / ஆங்கில )

ஆகிய பாடங்கள் அழகியல் பிரிவில் உள்ளன.

அதேபோல, சமயமும் நாகரீகமும் பிரிவில்,

 • பௌத்த சமயம்
 • பௌத்த நாகரீகம்
 • இந்து சமயம்
 • இந்து நாகரீகம்
 • இஸ்லாம்
 • இஸ்லாமிய நாகரீகம்
 • கிரேக்க மற்றும் ரோம நாகரீகங்கள்

போன்ற பாடங்கள் காணப்படுகின்றன. இப்பிரிவில் – சமயம் மற்றும் நாகரீகம் இணைந்த வகையில் பாடங்களை தேர்வு செய்ய முடியாது என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

 

மொழி பாடங்களாக கீழ்வரும் பிரிவுகளை கல்வியமைச்சு முன்வைக்கின்றது,

 

 • தேசிய மொழிகள் :-  தமிழ், சிங்களம், ஆங்கிலம்
 • சாத்திரிய மொழிகள்  : – அரபு, பாளி, சமஸ்கிருதம்
 • வெளிநாட்டு மொழிகள் : – சீனமொழி, பிரெஞ்சு, ஜேர்மன், ஹிந்தி, மலாய், ரசியன், ஜப்பானிய மொழி

மொழிப்பாடங்களைப் பொறுத்த வரையில் மூன்று வெவ்வேறு மொழிகளினை பாடங்களாக எடுத்துக் கற்க முடியும்.

இவ்வாறு கலைத்துறையானது பரந்துபட்ட பாடத்தேர்வுகளை மாணவர்களுக்கு முன்வைக்கின்றது. இதன்மூலம் பல்கலைக்கழக நுழைவுக்கான பல்வேறு வாய்ப்புக்களை வேறுபட்ட பல துறைகளில் வழங்கவும் கலைப்பிரிவானது உதவுகின்றது.

கலைப்பிரிவு மாணவர்கள் தங்களின் பாடத்தேர்வுக்கு அமைவாக கீழ்வரும் 19 கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வெண்ணிக்கை இனிவரும் காலங்களில் அதிகரிக்கும் வாய்ப்பும் ஏற்படலாம்.

01. பட்டினமும் நாடும் திட்டமிடல் (Town & Country Planning) – B.Sc
02. கட்டடக்கலை (Architecture)
03. நிலத்தோற்ற கட்டடக்கலை
04. நவநாகரீக வடிவமைப்பும் உற்பத்தி அபிவிருத்தியும் – B.Des Hons
05. வடிவமைப்பு – B.Des Hons
06. சட்டம் – LLB
07. முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும் – B.Sc
08. கணக்கிடலும் முகாமைத்துவமும்  – B.Sc
09. தொழில்முயற்சியும் முகாமைத்துவமும் – BBM
10. கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம் – BIIT
11. விருந்தோம்பல், சுற்றுலா மற்றும நிகழ்ச்சி முகாமை – BBM
12. உடற்தொழிற் கல்வி  (Physical Education) – B.Sc
13. விளையாட்டு விஞ்ஞானமும் முகைமைத்துவமும் – B.Sc
14. பேச்சும் செவிமடுத்தல் விஞ்ஞானம் – B.Sc
15. தகவல் முறைமைகள் (Information System) – B.Sc
16. மொழிபெயர்ப்புக் கற்கைகள்  – B.A
17. திரைப்படம், தொலைக்காட்சி கற்கைகள் – B.A
18. செயற்திட்ட முகாமைத்துவம் (Project Managment) – BBM
19. தகவல் தொழில்நுட்பம்  (Information and Communication Techonlogy)

 

பாடசாலைச் சமூகம் செய்ய வேண்டியது

 

கலைப்பிரிவில் இவ்வறான பாடத்தேர்வுகள் உள்ளது தொடர்பான விழிப்புணர்வினை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையில் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. அதோடு, புதிய பாடங்களை அறிம்கப்படுத்துவதற்கான ஆசிரிய வளங்களை ஏற்பாடு செய்வதன் மூலம், மாணவர்களுக்கு கலைப்பிரிவின் மீதான நம்பிக்கையினை கட்டி எழுப்பலாம்.

கட்டடக்கலை போன்ற பட்டப்படிப்புகளுக்கு அமைவான பாடங்களினை தேர்வு செய்வதில் மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலம் கலைப்பிரிவு தொடர்பான தப்பான எண்ணப்பதிவினை மாணவர்களிடமிருந்து மாற்ற முடியும்.

கலைப்பிரிவில் கணக்கியல் , கணிதம் புள்ளிவிபரவியல் போன்ற பாடங்களும் தேர்வாக உள்ளதை நாம் கவனிக்க வேண்டும். அதன்படி, மேலதிக ஆசிரியர்கள் இல்லாமல், இது போன்ற பாடங்களை ஆரம்பிக்க பாடசாலை நிருவாகம் முன்வர வேண்டும். அவ்வாறு நடைமுறைப்படுத்தும் போது, மாணவர்களுக்கு கலைப்பிரிவு தொடர்பான ஈர்ப்பு அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படும்.

பொதுவாக, கலைப்பிரிவில் கற்கும் மாணவர்கள் தோற்றுகின்ற பாடங்களுக்க்கான Z-Score மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினாலும் கீழிறங்க வாய்ப்புகள் உள்ளன. அதுவே சமயம் மற்றும் மொழிப்பாடங்களுக்கு ஏற்படுகின்ற நிலையுமாகும். இதைத்தவிர்த்து Z-Score அதிகமுள்ள பாடங்களான சமூக விஞ்ஞானப்பாடங்களை – அதிக பட்டப்படிப்பு தேர்வுகளை மேற்கொள்ளக் கூடிய பாடச் சேர்மானங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டியது பாடசாலைச் சமூகத்தின் கடமையாகும்.

இன்றைய வர்த்தக உலகில், தொடர்பாடலுக்கான அவசியம் என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்படுகின்றது. அதன்படி, வெளிநாட்டு மொழிகளை கற்க எமது மாணவர்களை இக்கலைப்பிரிவின் மூலம் ஊக்கப்படுத்தலாம். வெளிநாட்டு மொழி என்றால், ஆங்கிலம் மட்டுமே என்ற எண்ணத்தினை மாற்றி, சீன , பிரேஞ்சு மொழிகளை கற்பதற்கான விழிப்புணர்வுகளையும் மாணவர் மத்தியில் உண்டாக்கலாம்.

 

முத்தாய்ப்பாக,

 

கலைப்பிரிவு தொடர்பான தப்பபிப்பிராயங்களும் பிழையான கற்பிதங்களும் நம்மால் உண்டாக்கப்பட்டதே அன்றி வேறு யாராலும் அல்ல. அதைக்கழைய வேண்டிய பொறுப்பு பாடசாலைச் சமூகமான நம்மிடம் உள்ளது.

மேற்குறிப்பிட்ட பாடங்கள் இலங்கையில் உள்ள பாடசாலைகளில்தான் கற்பிக்கப்படுகின்றன. அனைத்துப் பாடங்களையும் ஒரு பாடசாலையில் கற்பிப்பதற்கான சாத்தியங்கள் மிக அரிது எனினும், குறிப்பிட்டளவான பாடங்களை அறிமுகப்படுத்த முடியும் அதுவும் இருக்கின்ற ஆசிரியர்களைக் கொண்டே ஆரம்பிக்கலாம். இது தொடர்பில் பாடசாலை நிருவாகம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

கலைப்பிரிவில் பிரபல பாடசாலைகள் எவ்வாறான பாடங்களை அளிக்கின்றன எனத் தேடிய போது, விசாகா மகளிர் கல்லூரி – 18 பாடங்களை ( வணிகக் கல்வி உட்பட ) வழங்குகின்றது. அதில் பிரெஞ்ச், ஜப்பானிய மொழி போன்றனவும் அடங்குகின்றன.

இவ்வாறுதான் ஏனைய பாடசாலைகளும் வழங்கும் என நம்பலாம்.

நமது எதிர்காலச் சந்ததியினருக்கு இது போன்ற வாய்ப்புக்களை தெரிந்தும் வழங்காமலிருப்பது நாம் அவர்களுக்கு செய்கின்ற துரோகமாகும். எனவே பாடசாலைச் சமூகம் இது தொடர்பில் கரிசனை செலுத்துவது காலத்தின் கட்டாயம்

பகிர:

 • புவியியல்
  Ict
  ஊடகம்
  ஆகிய 3பாடங்களையும் ஒரெதவையில் தெரிவு செய்யலாமா

  • நிச்சயமாக!
   சிறந்த தேர்வு இது! முடியுமென்றால் இவற்றினையே தேர்வு செய்து படியுங்கள்.

  • Law படிக்க என்ன பாடங்கள் தெரிவு செய்யலாம்

Leave a Reply