பரிசுத்த ஆத்மாக்களின் அறச்சீற்றம்..

Spread the love

பொது தளத்தில் இயங்கத் தொடங்குகின்ற போது, வருகின்ற விமர்சனங்களை இரண்டு வகையில் மட்டுமே கையாள முடியும். ஒன்று அதை புறந்தள்ளிவிட்டு தமது பயணத்தை தொடரலாம். மற்றொன்று தமது நிலையினை தெளிவுபடுத்தும் வகையில் உவத்தல் காய்தல் என ஏதுமின்றி நேரடியான விளக்கத்தினை அளிக்கலாம். இவ்விரண்டு தவிர வேறேதும் மார்க்கமும் இருக்கலாம். ஆனால், அதில் சாடைமாடையான சீண்டல்களுக்கு இடமில்லை என்றே கொள்ளலாம். அவ்வாறு ஒரு எதிர்வினையினை ஒருவர் ஆற்றுகின்றார் என்றால்… ஏதோ பிசகுள்ளது என்றே எண்ணத் தோன்றும்.

சீர்திருத்தம், மாற்றம் என்பது அனைவரதும் அவா என்றாலும், அதற்கான தயார்படுத்தல்களில் மற்றவர்களை நாம் தீவிரமாக இயங்கச் செய்ய வேண்டுமெனில், அதில் தன்முனைப்புடன் ஈடுபடும் சமூக ஆர்வலர்களிடம் இருக்க வேண்டியது அகங்காரம் அல்ல! பணிவு. தான் சமூக மாற்றத்தைப் பற்றி கதைப்பதால் தன்னை கேள்விகளுக்கு அப்பால் உள்ள ஒருவனாக உருவகப்படுத்துகின்ற போது ஏற்படுகின்ற இடைவெளி – அவர் வேண்டி நிற்கும் மாற்றத்தையோ சீர்திருத்தையோ ஒரு போதும் தராது.

தான் பேசுகின்ற விடயம் தொடர்பான ஆரோக்கியமான‌ மாற்றுக் கருத்துக்களுக்கு (விதண்டாவாதங்களுக்கல்ல!) ஜனநாயக முறையில் பதிலினை தருவதன் மூலமே உரிய கருத்துக்கள் ஜனரஞ்சகப்படுத்தப்படும். மாறாக, உபதேசிக்கும் பாங்கில் தொடங்குகின்ற எந்த ஒரு விடயமும் உரிய இலக்கினை அடையப்போவதில்லை. அது எவ்வளவு பெறுமதியான விடயமாக இருந்த போதிலும். அதற்கு நிறைய உதாரணங்கள் இக்குழுமத்திலேயே உள்ளன.

அறச்சீற்றம் சமூக அக்கறை அதிகம் உள்ளதால் நான் மற்றவர்களை விட ஒரு படி மேலே உள்ளேன் எனக் கருதிக் கொண்டு விமர்சனங்களுக்கெல்லாம் அகங்காரமாகவோ ( உரியவருக்கு அப்படி இல்லாதிருக்கலாம்.. ) ஆணையிடும் தொனியிலோ கூறப்படும் எந்தவொரு கருத்தும் மற்றவர்களிடையே தமது நோக்கம் தொடர்பில் எதிர்மறையான விளைவை உண்டு பண்ணுவதோடு, சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்படுவதற்கும் இடமுண்டு.

பகிர:

Leave a Reply