கற்ற சமூகமே விழித்துக் கொள்

Spread the love

இளம்பெண்ணின் படத்துடன், ‘எனது நட்பு வேண்டுமெனில், இதை செயார் செய்துவிட்டு இன்பொக்ஸ்ஸினை பாருங்கள் எனது தொலைபேசி எண் இருக்கும்’ என ஒரு விளக்கம்!

நமது ஆசான்களில் ஒருவர் இதைப் பகிர்ந்திருந்தார். அவருக்கு – போன் நம்பர் கிடைத்ததா இல்லையா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

 

நமது இளம் தலைமுறை ஆசிரியர்கள்

 

நமது இளம் தலைமுறை ஆசிரியர்களின் மனநிலை அனேகமாக இப்படித்தான் இருக்கின்றது. ஆசிரியம் எனும் சேவையினை அதன் உன்னதத்திலிருந்து சாக்கடைக்குள் அமிழ்த்துவதில் எந்த உறுத்தலும் இன்றி கர்ம சிரத்தையாக பணி செய்து கொண்டிருக்கின்றனர்.

மேலே நான் சொன்ன சம்பவத்துடன் தொடர்புடைய அன்பர் தொடர்பில் எத்தனையோ முன்முடிவுகளை அவரின் ஒரு நடவடிக்கை மூலம் நாம் எடுக்கமுடியும். அது அத்தனையும் நமது இளம் தலைமுறை தொடர்பில் கவலை கொள்ளக்கூடியதாகவே இருக்கும். நிச்சயமாக, ஒரு தந்தையாக எனது முதல் எண்ணம் – இவனை நம்பி எனது குழந்தையை எப்படி படிக்க அனுப்புவேன் என்றே தோன்றும். இதுதான் இன்றைய இளவயது ஆசிரியத் தொழிலில் உள்ள மன்மதர்களின் நிலை. ( அனைவரையும் நான் பொதுமைப்படுத்தவில்லை. ). இத்தொழில் அவர்களைப் பொறுத்தவரையில் சேவை அல்ல. அதை தனது கேவலமான பிறழ் நடத்தைகளுக்கான போர்வையாக பயன்படுத்துகின்றனர்.

இதே போல ஓர் பாடசாலையில் ஆசிரியர் தினக்கொண்டாட்டம் ஒன்றில் சில ஆசிரியர்கள் சேர்ந்து நடனம் எனும் பெயரில் வாசல் தெளித்து கோலம் போட்ட கண்றாவியினையும் அண்மையில் கண்டு களித்திருந்தோம். பாடசாலை நமது பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தினை செலுத்துகின்ற ஒரு தாபனம். அதில் ஆசிரியர்களின் பங்கானது அளப்பெரியது. ஆனால், இன்றுள்ள நிலமை அவ்வளவாக சொல்லிக் கொள்ளும் படியாக தோன்றவில்லை. ஓர் பெண்ணின் அலைபேசி எண்ணிற்காக அலைகின்ற, தன்னை ஒரு சினிமா ஹீரோவாக முன்னிறுத்த துடிக்கின்ற இப்படியானவர்களிடமிருந்து எமது குழந்தைகள் எதைப் பெறப்போகின்றனர்?

இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலே போய் தற்போது, நமது ஊரில் இரவுநேர வகுப்புக்கள் எனும் கூத்து அரங்கேறுகின்றதாம்! பாடசாலை முடிகின்ற 2 மணிக்கும் பின்னிரவைத் தாண்டிய 10 க்கும் இடைப்பட்ட 8 மணித்தியாலங்களில் தேடமுடியாத கல்வியினை குறித்த ஆசிரியர்கள் ஏன் அதற்குப் பின்னர் சொல்லிக் கொடுக்க இவ்வளவு சிரத்தை எடுக்க வேண்டும். இது மாணவர்களின் மீதான கல்வி மீது கொண்ட அக்கறையாக யாராவது நியாயப்படுத்தலாமா? இன்னொரு ஆச்சரியம் – பதின்ம வயதில் உள்ள தமது பெண் பிள்ளைகளை என்ன உத்தரவாதத்தின் அடிப்படையில் இப்பெற்றோர் இந்தக் கூத்துக்கெல்லாம் அனுமதிக்கின்றனர்?

 

இரவு நேர வகுப்புக்கள்

 

இரவு நேர வகுப்புக்கள் என்ற பெயரில் “எதையாவது” தேற்ற துடிக்கின்ற வகையறாக்கள் மேற் சொன்ன ஹீரோக்கள் தவிர வேறு யாருமாக இருக்க வாய்ப்பே இல்லை. தனது கண்ணியம் மற்றும் பிள்ளைகள் மீதான அக்கறை என்பவற்றில் எந்த ஒரு சமரசமும் செய்யாத ஆசிரியர்கள் இது போன்ற ஈனச் செயல்களை செய்ய துணியமாட்டார்கள்.

ஆனாலும், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மன்மதர்களை ஓரளவுக்கேனும் கண்காணிப்புக்கள் கொண்டுவராமல், நமது பாடசாலைச் சமூகம் வாளாவிருப்பது கொஞ்சம் நெருடுகின்றது. மன்மதர்கள் எல்லை மீறி ஏதாவது ஒரு “பெரிய” சம்பவம் நிகழும் வரை காத்திருக்கின்றார்களோ என்னவோ!! ஆரம்பத்தில் இவற்றுக்கொரு முற்றுப்புள்ளியிட நாம் ஏதாவது செய்தாக வேண்டிய அவசரத்தில் இருக்கின்றோம்.

மேலும் இது போன்ற எச்சைகள் ஆசிரிய சேவைக்கே களங்கம். நமது மண் எத்தனையோ உன்னதமான ஆசிரியர்களை நமக்குத் தந்துள்ளது. என்றும் நினைவுகூரத்தக்க ஆசான்கள் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். சில ஆசிரியர்களின் பெயர்கள் எங்காவது உச்சரிக்கப்படுமிடத்து இயல்பாகவே எழுந்து நிற்கும் உணர்வு ஏற்படும் சந்தர்ப்பங்கள் கூட எனக்கு ஏற்பட்டதுண்டு. அந்தளாவுக்கு அவர்களின் மீதான மரியாதை, அவர்களின் ஆளுமை மீதான பிரமிப்பு இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.

இவ்வாறு ஆசிரியம் மீதான ஒரு பிரமிப்பும் மரியாதையும் இது போன்ற அரைகுறைகளின் கலப்பால், கொஞ்சம் கொஞ்சமாக நமது இளைய சமுதாயத்திடமிருந்து விலகிச் செல்கின்ற நிலையே காணப்படுகின்றது. இது நமது அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான ஒன்றல்ல. சிறந்த ஆசிரியர்கள் இல்லாத மாணவச் சமூகம் மேய்ப்பர்களில்லாத மந்தைகள் போலாகிவிடும். அதற்கு மாணவர்கள் – ஆசிரியர்கள் மீது வைத்திருக்கும் கண்ணியமும் மரியாதையும் சிறிதும் குறையாமல் பாதுகாக்க வேண்டியதும் அதை கண்காணிக்க வேண்டியதும் நமது கடமையாகின்றது. இதற்கு ஒரே வழி, ஆசிரியத் தொழிலில் வயிறு வளர்க்கவும், கிளுகிளுப்பு தேடியும் அலைகின்ற அவ் அரைகுறைகளை அடக்குவது ஒன்றே..

கற்ற சமூகமே விழித்துக் கொள் !

பகிர:

Leave a Reply