இலங்கை : அரசியல் பகடையாட்டம்

Spread the love

கொடுங்கோல் மன்னன் ஒருவனுக்கு தனது இறுதிகாலத்தில் ஒரு ஆசை!

“எப்படா இவன் ஒழிவான் எனக் காத்திருக்கும் தன் மக்கள் தான் இறந்த பிறகு தன்னையும் தனது ஆட்சியினையும் புகழ வேண்டும்! “

நடக்கிற காரியமா?? செத்ததும் வெடி வெடித்து கொண்டாட காத்திருக்கும் மக்கள் எப்படி இவனை நல்லவன் என்பர்? நப்பாசைதான்! இருந்தும் மரணத் தறுவாயில் தனக்கு அடுத்து அரியணை ஏறக் காத்திருக்கும் தனது மகனிடம் சொல்லிவிட்டு கண்ணை மூடிவிட்டான்!

இப்படி ஒரு சோதனையா? ஏழு கடல் ஏழு மலை தாண்டச் சொன்னாலும் பரவாயில்லை! மக்களுக்கு செய்த கொடுமைக்கும், துயரங்களுக்கும், எப்படிச் சாத்தியம்! தந்தை இறந்ததைக் கொண்டாட்ட மனநிலையில் பார்க்கும் மக்களின் மனதில் தனது தந்தை நல்லவர் , அவரது ஆட்சி நல்லாட்சி (!) எனப் பதியவைப்பது எங்கணம் சாத்தியம்??

தலையைப் பிய்த்துக்கொண்டான்.! ஒன்றும் புலப்படவில்லை!

கற்றறிந்தோர் பலரிடமும் ஆலோசனைகள் கேட்டான்! சொல்லிக் கொள்ளும்படி எதுவும் அவர்கள் யோசனையாக சொல்லவில்லை!

இதே யோசனையுடன் அவனது நாட்கள் நகர்ந்தது.

ஒரு நாள்! சந்நியாசி ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு அவனுக்கமைந்தது.  தன் மனக்குறையை அவரிடம் கொட்டினான். சிரித்தபடி சந்நியாசி, அவனிடம் ஒரு கயிற்றினைக் கொடுத்தார்! இதை, வெட்டாமல் மடிக்காமல் , வேறு எந்த மாற்றமும் இக்கயிற்றில் செய்யாமல் எப்படி இதை சிறிதாக்கு உன் மனக்குறைக்கு விடை கிடைக்கும் என்றுவிட்டு கிளம்பிவிட்டார்.

முதலில் புரியாமல் விளித்த மன்னனுக்கு பின்னர் புரிந்தது!!  

சந்நியாசி சொல்லவந்த இருகோட்டு தத்துவம் புரிந்தது.. ஒன்றைச் சிறிதாக்க அதைவிட பெரிதை சேர்..!! கொடுங்கோல் தந்தையின் பெயரை மாற்ற அவனை விட மோசமாக கொடுங்கோலாட்சி செயயத் தொடங்கினான் மகன்! மக்கள் – இவனுக்க்கு, இவன் அப்பனே தேவலை! எனப் புலம்பத் தொடங்கி இருந்தனர்.

இப்படி தந்தையின் பெயரினை வெள்ளையாக்குவதில் வெற்றி பெற்றான் அவன்!

இதே விடயம்தான் இன்று நமது நாட்டிலும் நடக்கின்றது.

முக்கியமாக சிறுபான்மையினரின் மனநிலை இன்று இப்படித்தான் உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ வின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கெதிரான பல கலவரங்கள் அடக்குமுறைகள், அவர்களை இன்னொரு தரப்புக்கு மாற்றிவிட்டிருந்தது. நல்லாட்சி என்ற நாமத்தை நம்பி ஆட்சிக் கட்டிலில் அவர்களை அமர்த்த! நினைத்தது நடக்கவில்லை! மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடங்கி திகண கலவரம் வரை பல ஓட்டைகளும் ஏமாற்றங்களும்! எதை எதிர்பார்த்து மக்கள் வாக்களித்தார்களோ அது எதுவும் நிறைவேறக் காணோம்.

குறிப்பாக, முஸ்லிம்களுக்கெதிரான இனவாதச் செயற்பாடுகளுக்கு இந்நல்லாட்சி அரசாங்கம் முடிவொன்றைக் கட்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது! சென்ற ஆட்சியில் அழுத்கமை கலவரம் என்றால், அதற்கு மேலாக இவர்கள் திகண கலவரத்தினை அரங்கேற்றி இருந்தனர். அதே போல அம்பாறைப் பள்ளிவாசல் உடைப்புச் சம்பவம் கூட ஓரு கறையாகிப் போனது. யார் இவற்றைச் செய்தார்கள் என்பதை விட, இதை தடுப்பதற்கு இவ்வரசு தவறி விட்டது என்பது மக்களை இன்னும் வெறுப்படையச் செய்திருந்தது. எதிர்பார்த்திருந்த மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே! 

பெரும்பான்மை இன ஆட்சியில் எவர் அதிகாரத்தில் இருந்தாலும் இது மாறப் போவதில்லை என்பது மக்கள் கண்ட அனுபவம்!

நல்லாட்சிக் கூட்டினை விட்டு வெளியேறி, யாரைக் குறை கூறி ஆட்சிக்கு வந்தாரோ அவர்களிடமே மீண்டும் அடைக்கலாமாகி உள்ளார். நமது ஜனாதிபதி! அது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு நன்மையா இல்லை அவரே அவருக்கு பறித்த குழியா என்பது ஒருபுறமிருக்க,

தற்போது நிகழுகின்ற அரசியல் குழப்பநிலை தொடர்பில் முன்னைய ஆட்சி மீதான அதிருப்தி எதிர்பார்ப்பாக தற்போது திரும்பியுள்ளது.  அதை அறுவடை செய்யும் வழிவகைகளை நன்கு அறிந்த மகிந்த அவர்கள் மக்களுக்கு பல்வேறு சலுகைகளையும் விலைக்குறைப்புக்களையும் அறிவிக்கத் தொடங்கியுள்ளார். அத்தியவசியப் பண்டங்களான சீனி, பருப்பு, எரிபொருள் போன்றவற்றுக்கான விலைக்குறைப்புக்கள்! 25 சதவீதமாக இருந்த தொலைபேசிப்பாவனைக்கான வரி 15% ஆக குறைக்கப்பட்டமை. மூடு மந்திரமாக இருந்து சென்ற வாரம்தான் போன அமைச்சரவையினால் வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட எரிபொருள் சூத்திரம் நீக்கப்பட்டமை! போன்ற அறிவிப்புக்கள் மக்களை ( வாக்காளர்களை!! ) குளிர்விக்க தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்தவொரு ஆட்சி மாற்றமும் இது போன்ற குறைப்புக்களை ஆரம்பித்து பின் பழைய இடத்திற்கு வந்து சேர்வதொன்றும் புதிதாக நடப்பதில்லை! அதற்கு நம்மவர்கள் பழகியும்விட்டார்கள்.

19th amendment sri lanka

அது ஒருபுறம் இருக்க, 19வது திருத்தம் ( 19th amendment sri lanka ) மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமரை நீக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை எனவும் தானே பிரதமர் என்று ரணில் கூறிவரும் இந்நிலையில் பாராளுமன்றப் பெரும்பான்மையினை நிரூபிக்க பாராளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்ற அழுத்தம் – 16 வரை ஒத்தி வைக்கப்பட்ட பாராளுமன்றை 7 ம் திகதி கூட்ட ஜனாதிபதியினை ஒத்துக் கொள்ள வைத்துள்ளது. இக்கால அவகாசம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற இரு தரப்பினருக்கும் பேரம் பேசக் கிடைத்துள்ள கால அவகாசமாகவே பார்க்கப்படுகின்றது. அமைச்சுப்பதவிகளை காட்டி தமது தரப்பிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை இழுக்கும் பணியினை கனகச்சிதமாக மகிந்த தரப்பு மேற்கொண்டு வருகின்றது.

எது எப்படியோ. நடைமுறை யாப்பின் படி அதிகாரம் குவிக்கப்பட்ட ஜனாதிபதி மக்களதிகாரம் மற்றும் அபிப்பிராயம் என்பவற்றைப் புறந்தள்ளி வேறு முடிவுகளையும் அமுல்படுத்த வழிகள் பலவற்றைக் கொண்டுதான் இருக்கின்றது. அதன்படி 7 ஆம் திகதி கூடவிருக்கின்ற பாராளுமன்றத்தின் அலுவல்களைப் பொறுத்து அடுத்த கட்ட நகர்வை மைத்திரி மகிந்த கூட்டணி தீர்மானிக்கலாம். வாக்காளர்களான நாம், அடுத்த தேர்தலில் வாக்களிக்கும் வரைக்கும் தேமே!! என புதினம் மட்டும் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

19வது திருத்தம் (19th amendment sri lanka ) தொடங்கி இனிவரப்போகும் இருபதோ இருபத்தொன்றோ அவரவர் வசதிக்கேற்றவாறு வளைக்கும் வித்தைகளை பிரயோகித்து அதிகாரத்தை தக்க வைப்பதில் பிஸியாகிவிடுவர். நாமும் வழமை போல 19வது திருத்தம் ( 9th amendment sri lanka )எப்படி மெல்லக் கிடைத்த அவலோ அதே பாணியில் கிடைப்பதை மென்று கொண்டு பராக்கில் காலம் தள்ளுவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

பகிர:

Leave a Reply