எரிபொருள் விலைச் சூத்திரம் : சிதம்பரச் சக்கரத்தை பேய் பார்த்த கதை

Spread the love

எரிபொருள் விலைப் பொறிமுறை என்று எதை மறைத்து வைத்திருக்கின்றனர்?

முந்தி எல்லாம் சும்மா ஏத்திக்கி இருந்தானுகள்!  இப்ப விலைச் சூத்திரமாம்! என்ன கருமமோ? அதச் சொல்லி ஏத்துறானுகள்!! போன்ற புலம்பல்களை சமூக வலைத்தளங்கள் தொடங்கி, தெருமுனைகளில் கூட கேட்கக்கூடியதாக இருக்கின்றது.

அந்த சூத்திரத்திற்கு அமைவாக, தற்போது எரிபொருள்களுக்கான விலை மீண்டும் ஏற்றப்பட்டுள்ளது. ஆனாலும் விலைச்சூத்திரத்திற்கு அமைவாக லீற்றருக்கு 11 ரூபாவால் அதிகரிக்க வேண்டிய பொதுப்போக்குவரத்து மற்றும் மீன்பிடிப் படகுகளுக்கு பயன்படுத்தப்படும் வாகன டீசலுக்கான விலையினை மட்டும் உயர்த்தாமல் வைத்துள்ளதாக நிதி அமைச்சு கூறியுள்ளது. ( அதாவது நல்லது செய்றாங்களாமா!! )

அச் சூத்திரத்திற்கு அமைவான விலை நிர்ணயிப்புக்கு காரணியாக, ஈரான் மீது அமெரிக்கா கொடுக்கின்ற அழுத்தங்கள், சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர் , மாரிக்காலங்களில் எண்ணைக்கு ஏற்படும் மேலதிக கேள்வி போன்றவற்றினை – ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசாயநாயக்க கேட்டிருந்த கேள்விக்கு விடையாக தந்திருந்தார் நமது பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

மே 11 ல் அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விலைச் சூத்திரத்திற்கென ஒரு குழுவினை அமைச்சரவை அப்போது அமைத்திருந்தது. அதன்படி முதலாவது விலைத்திருத்தம் ஜூன் 10 இல் நடந்தேறியது. அன்றிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஏற்படுத்தப்படுகின்ற விலைத்திருத்தமானது, ஏறுமுகமாக இருக்கின்றதே தவிர, இறங்கியபாட்டைக் காணோம்.

சரி! ஏத்துறதுதான் ஏத்துறீங்க, நீங்க சொல்ற விலைச் சூத்திரத்தின் என்ன உள்ளது? எப்படி விலை நிர்ணயிக்கப்படுகின்றது என்ற கேள்விக் கெல்லாம் பதில் ஒன்றும் தெளிவானதாக இல்லை. இவ்விலைநிர்ணயப் பொறிமுறைக்கான சூத்திரங்கள் ஏன் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்படுவதில்லை? என்று பாராளுமன்ற உறுப்பினர் திசாயநாயக்கவும் கேள்வி எழுப்பி இருந்தார். அதோடு, இப்பொறிமுறை தொடர்பில், தகவலறியும் சட்டம் மூலம் அறிய முற்பட்டும், அது நிராகரிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்,

நிதியமைச்சர் கூட இச்சூத்திரம் தொடர்பில் கையைவிரித்துவிட்டு, பொத்தாம் பொதுவாக, இப்பொறிமுறை மூலம் ஏற்படுகின்ற விலைத்தளம்பல்களை மக்கள் அனுபவிக்கலாம் என வழுக்குவது இன்னும் இது தொடர்பில் ஒரு மயக்க நிலையினையே உண்டுபண்ணுகின்றது. மேலும் அவர் கூறுவது போன்ற விலைத்தளம்பல்கள் கடந்த நான்கு மாதங்களாக நடக்கவே இல்லை!

ஜூன் 10ல் 148.00 ரூபாய்களாக இருந்த Lanka Petrol (Octane 95) ஒக்டோபர் 10ல் 169.00 ரூபாய்களாக அதிகரித்துள்ளது. அதாவது 21.00 ரூபாய் விலையேற்றம்! அதே போல, Lanka Petrol (Octane 92) ஜூன் 10ல் 137.00 ஆக இருந்து 155.00 ஆக 18.00 ரூபாய்கள்,  கடந்த நான்கு மாதங்களுக்குள் அதிகரித்துள்ளன. குறைந்தபாட்டைக்காணவில்லை. ஆனாலும் அமைச்சர்களும், ஆளும் தரப்பும், அவ்விலைச் சூத்திரத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு , அது மக்களுக்கு நன்மை தரும் என்ற பல்லவியையே திரும்பத் திரும்ப பாடுகின்றனர்.

ஆனால் விலைப் பொறிமுறை எப்படி கணிக்கப்படுகின்றது என்ற கேள்விக்கு எந்தவொரு பக்கத்திலிருந்தும் சரியான பதிலைத்தான் பெறமுடியவில்லை. சிதம்பரச் சக்கரத்தை பேய் பார்த்த கதைதான் பெற்ற்றோல் விலைச் சூத்திரம் போல!!

இருந்தும் இப்படித்தான் இவ்விலைச்சூத்திரம் இருக்கும் என்ற அனுமானங்களை சில வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அதாவது, இறுதியாக கிடைத்த 2016 புள்ளிவிபரங்களின்படி, இலங்கை சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியத்தின் ( Refined Petrolium ) பெரும்பகுதியினை சிங்கப்பூரிடமிருந்தே இறக்குமதி செய்கின்றது. மொத்த இறக்குமதியில் இது – 42% ஆகும். அடுத்த இடம், இந்தியாவுக்கு – 27%

இதன்படி, இலங்கையின் விலைச் சூத்திரத்திற்கு சிங்கப்பூரிலிருந்து கொள்வனவு செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணையின் கொள்வனவு விலையே Benchmark ஆக தீர்மானிக்கப்படுகின்றது.  ஒரு பீப்பாய் மசகு எண்ணை 160 லீற்றர் கொள்ளளவு கொண்டது.

அதன்படி, ஒரு லீற்றருக்கான விலையினை நிர்ணயிக்க, 1 Barrel மசகு எண்ணைக்கான டொலர் பெறுமதியானது இலங்கை ரூபாய்க்கு மாற்றப்பட்டு பின்னர் 160 லிற்றர்களால் பிரிக்கப்படுகின்றது.

(1 Barrel மசகு எண்ணைக்கான டொலர் பெறுமதி X டொலருக்கெதிரான இலங்கை ரூபாய்) / 160 லிற்றர்

 ஒரு லீற்றருக்கான எண்ணையின் கொள்விலையுடன் உட்சுமைக் கூலியாக (Landed Cost) – Jetty pipeline charges, + Port Development Levy + Letter of Credit Charge என்பன சேர்க்கப்படுகின்றது. பின்னர் சுங்கத்தீர்வை மற்றும் பெறுமதி சேர் வரி மற்றும் கலால் வரி (Excise Duty) போன்ற இன்ன பிற வரிகள் சேர்க்கப்பட்டு பின் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் / இந்திய ஒயில் கம்பனி களின் நிதிக்கட்டணங்கள் மற்றும் அவற்றின் மொத்தக் கொள்வனவு செலவினங்கள் போன்றவற்றுடன். இரு நிறுவனங்களதும் லாபம் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் கழிவுகள் என்பனவும் இணைக்கப்படுகின்றன. இதன் பின்னர் அரசாங்கம் ஒரு சிறிய லாபத் தொகையினை வைத்து நுகர்வோருக்கான விலை நிர்ணயிக்கப்படுகின்றது.

இதன்படி, இறுதியாக விலை நிர்ணயிக்கப்பட்ட 10 ஒக்டோபரில் ஒரு பெரல் மசகெண்ணையின் பெறுமதி அண்ணளவாக 75 டொலர்கள் அதன் படி,

1 Barrel Crude Oil $ Price As On 10/10/2018 ( Aprox . ) $          75.00
Exchange Rate  ( Aprox. ) Rs 171.00
1 Barrel Crude Oil Rupees Price As On 10/10/2018 ( Aprox . ) Rs 12,825.00
Per Liter ( 160 Ltr / BBL )   Rs 80.16

இந்த 80.16 சதத்திலிருந்து தற்போதுள்ள 169.00 ரூபா விலைக்கான உள்ளடக்கங்கள் அனைத்தும் வரிகள் மற்றும் இரு பெற்றோலிய நிறுவனங்களின் இலாபம் மற்றும் அரசாங்கம் வைத்துள்ள இலாபம் ( இது அண்ணளவாக 4% என அறிய முடிகின்றது ) என்பனவாகும்.

ரூபாய் 80.16 இலிருந்து 169.00 ரூபாய்களுக்கு நுகர்வோரை சென்றடையும் எரிபொருளுக்கான விலைப் பங்கீட்டில் பெரும்பகுதி அரசுக்கே வரிகளாகவும் அதோடு சேர்ந்து இலாபமாகவும் செல்கின்றது. ஆனாலும் அவர்கள் பஞ்சம் பாடுவதை விடுவதாயில்லை.

அரசவருமானங்கள் நேரடியாக அரச கஜானாவிற்கு செல்லாமல் பலரின் வாய்களுக்குள் சென்று சக்கை மட்டும் அங்கு துப்பப்படுவதால், அவர்கள் பாசாங்கிற்கு பஞ்சம் பாட, நாம் பழகிய பஞ்சத்தை முதல் வாரத்தில் மட்டும் பாடிவிட்டு அதற்கு நம்மை பழக்கப்படுத்திக் கொள்கின்றோம்.

பகிர:

Leave a Reply