படித்தவர்கள் என்ற நிலை சமூகத்தில் ஒரு அங்கீகாரத்தை வழங்குகின்றது. அது இயல்பாக ஒருவரை அடைவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அந்நிலையினை அடைய எடுக்கின்ற முயற்சிகள், சிரமங்கள் என்பவற்றை எல்லாம் இலகுவாக கடந்து அதை பெற ஆசைப்படுபவர்கள் சமூகத்தில் இல்லாமல் இல்லை. அவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களின் ஆசையினை தமக்கான வருமான வழியாக மாற்ற ஒரு தரப்பு செய்யும் மோசடியே இந்த Diploma Mills சமாச்சாரம்.
Diploma Mills என்றால் என்ன?
இந்த வார்த்தை கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று. இன்று நம்மவர்கள் மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்பினை பெறவும் இருக்கின்ற தொழிலில் தமக்கான வேதனங்களை அதிகரிக்கவும், நிறைய பேர் கல்வித் தகமைகளை இன்னும் கொஞ்சம் கூட்டிக்கொள்ள பல்வேறு வழிமுறைகளையும் தேடி ஓடுகின்றனர்.
அதில் பெரும்பாலும் நாம் தேர்ந்தெடுப்பது- கஸ்டம் இல்லாமல் காசு கொடுத்தேனும் ஒரு தகைமை! ஏனெனில், உரிய முறையில் படித்து பரீட்சைகளூடாக ஒரு கல்வித் தகைமையினை பெறுவதற்கு நமக்கு நேரமில்லை என நம்மை நாமே சமாதானம் செய்து கொள்கின்றோம். ஆனால், உண்மையில் நமக்குள்ள பிரச்சனை – அவசரம், அதோடு, நம்பிக்கையீனம்.
இதோ , இவற்றினை மூலதனமாக கொண்டு, ஒரு கூட்டம் பணம் பண்ணிக் கொண்டு இருக்கின்றது.
உலகில், முறையான அங்கீகாரம் எதுவும் இல்லாமலும், கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை முறைப்படுத்தப்பட்ட வழிகளில் பின்பற்றாமலும் பணத்திற்காக மட்டும் கல்வித் தகைமைகளினை விற்கின்ற கல்வித் தாபனங்களே – Diploma-Mills என அழைக்கப்படுகின்றன. அதாவது ஒரு ஆலை – Mill எப்படி தொழிற்படுகின்றதோ அதே பணியினை இவ்வாறான கல்வித் தாபனங்களும் மேற்கொள்வதால் இதற்கு இப்பெயர்.
இவை உலகில் இன்று இணையத்தின் மூலமாக எங்கும் வியாபித்துள்ளதோடு, இலகுவாக வாடிக்கையாளர்களையும் கவர்ந்திழுக்கின்றது. பரீட்சையோ, முறையான மதிப்பீடுகளோ எதுவும் இன்றி, ஒரு தொகைப் பணத்தினை செலுத்துவதன் மூலம் குறுகிய காலத்திற்குள் பட்டமொன்றை பெற முடியும் என்றால், யார்தான் பெறமாட்டார்கள்.
பட்டங்களின் அங்கீகாரம்
ஆனால், இதன் மூலம் பெறப்படுகின்ற பட்டங்களோ, வேறு கல்வித் தகைமைகளோ எந்தவொரு இடத்திலும் உரியவருக்கு பலனளிக்காதென்பது வேறு விடயம். தொழில் சார் தகைமைகளுக்காக இவ்வாறான கல்வி நிறுவனங்கள் மூலம் பெறப்படும் பட்டங்களை நிறுவனங்களுக்கு சமர்ப்பிகின்ற போது, பல வேளைகளில் அவை அங்கீகாரமற்ற (unaccredited institutions) கல்வி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்டவை என அறியப்படுகின்றன. அவ்வேளைகளில் உரியவர் தொழிலினை இழப்பதோடு , அத்தொழிலுக்கு அவர் இழைத்த அகௌரவம் (disrespect) எனவும் கருதப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக, சட்ட நடவடிக்கைகளும் உரிய நபருக்கு எதிராக எடுப்பதற்கான முகாந்திரமும் காணப்படுவதாக சுட்டிக் காட்டப்படுகின்றது.
உதாரணமாக, அமீரகத்தை குறிப்பிடலாம். இங்கு – UAE ல் தொழிலுக்காக சமர்ப்பிக்கப்படுகின்ற கல்வித் தகைமைகள் போலியானாதாகவோ, அல்லது அங்கீகரிக்கப்படாத கல்வித் தாபனங்களிலோ இருந்து பெறப்பட்டால், உரிய நபருக்கு குறிப்பிட்ட கால சிறைத்தண்டனையின் பின்னர் நாடுகடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.
கவனமாக இருங்கள்
எனவே நண்பர்களே! தொழில் தகைமைகளை பெருக்கிக் கொள்வது மிகச்சிறந்தே! ஆனாலும் குறுக்கு வழிகளை பற்றிச் சிந்திக்காமல், முறைப்படி எமது தகைமைகளை பெருக்க முயற்சிப்போம். முறையானகல்வி, பயிற்சி மூலம் கிடைக்கின்ற மனிதவள அபிவிருத்தி எப்போதும் நிலைத்து நிற்பதோடு, தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும்.
கீழே உள்ள விக்கிபீடியா லின்க் மூலமாக உலகில் உள்ள பிரபலமான Diploma Mills களின் பட்டியல் உள்ளது. இது தவிர்த்து மேலும் பல Diploma Mills களும் இணையத்தில் உள்ளது. எனவே விழிப்புடன் இருங்கள்! இப்பட்டியலில் உள்ள ஏதாவது, Diploma Mills உடன் தொடர்பில் இருந்தால், இத்தோடு, அதை முடித்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நீங்கள் செலுத்த இருந்த பணமாவது மிச்சமாகும்.
Diploma Mills தொடர்பான மேலதிக விபரங்களுக்கு இங்கு கிளிக்குக.