மக்கள் சேவைக்காக .. உங்கள் நண்பன்

Spread the love

மழை பெய்தால் வீதியே வெள்ளக்காடாகும் பகுதி என்பதால், மாரி என்பது எப்போதும் எங்களுக்கு பிரச்சனைதான், ஏதாவது செய்யமுடியுமா என ஒரு மாரியில் தெரு பெரியவர்கள் சேர்ந்து ஆலோசித்து இறுதியில் அப்போது ஆட்சியில் இருந்த குறுநில மன்னரை சந்திக்கலாம் என முடிவெடுத்துப் பார்க்க சென்றிருந்தோம்.

ஏக கெடுபிடிகளுக்கு பிறகு, மன்னரின் தரிசனம் கிடைத்தது, சிம்மாசனத்தில் மன்னர் கம்பீரமாக ஒருக்களித்தவாறு உட்கார்ந்திருந்தார், வந்திருந்த குடிமக்களை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் கருமமே கண்ணாக இருந்தார். ஒரு கையில் சிகரட் புகைந்து கொண்டிருந்தது. சலாத்திற்கு ஏறெடுத்துப் பார்த்தவர், சைகையால் இருக்க சொன்னார்.

சிகரட்டினை ஒரு இழுப்பு இழுத்து புகையினை குடி மக்களாகிய எங்களுக்கும் அவரது மேசைக்கும் இடையில் இட்டவாறு என்ன என பார்வையிலேயே வினவ, கூட வந்திருந்த எங்களில் தலைமை ஏற்றிருந்த‌ எங்கள் பகுதி ஓய்வு பெற்ற அதிபர் பவ்யமாக மன்னரிடம் பிரச்சனை பற்றிய மனுவினை நீட்ட, ஏதோ அருவருக்கத்தக்க எதையோ அவர் கொடுத்தது போல , இரு விரல்களால் கிள்ளியவாறு, சிகரட்டினை இழுத்தவாறு மன்னர் மனுவினை ஆரயத் தொடங்கி இருந்தார், சிகரட் புகை மன்னரின் ராஜ சபையினை நிறைத்தவாறு இருக்க, மன்னர், நிமிர்ந்து சிம்மாசனத்தில் இன்னும் சௌகரியமாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டார், இருக்கையில், அவர் இருக்கவும் இல்லை படுக்கவும் இல்லை. அது இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு “ஜென் நிலை “.

மன்னரின், சிகரட் வாசத்தோடு, மன்னரின் ஜென் நிலையும். அவரது சேவையுள்ளத்தை அப்பட்டமாக எங்களுக்கு தெரிவிக்க‌, ஒரு விதமான அசூசையும் அசௌகரியமும் எம்மை சூழ்ந்து கொண்டது.

திடீரென போனை கையில் எடுத்தவாறு, மன்னரைக் கூட கவனிக்காமல் வெளியேறி வீதியினை நோக்கி நடக்க தொடங்கினேன். முன் மதிலில், மன்னர் போஸ் கொடுத்தவாறு , போஸ்டரில் சிரித்துக் கொண்டிருந்தார்.. கீழே,

“மக்கள் சேவைக்காக .. உங்கள் நண்பன்”

என்ற வாசகம் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது.

—————————————————————————————-
( பி.கு 1 : முஸ்லிம் தேசியம், சேவை,, அது இது என அந்த முன்னாள் குறுநில மன்னர் நடத்தும் அறிக்கை போரினால் பழைய ஞாபகங்கள் மேலெழுந்துவிட்டன. )

( பி.கு 2 : மன்னர் மாறினாலும் வீதியின் நிலை அப்படியேதான் இருக்கின்றது. இப்போதுள்ளவர், சிம்மாசனத்தில் இருக்கும் போது புகைக்காமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் பக்க மக்களின் பிரார்த்தனை)

பகிர:

Leave a Reply