நிறுத்தல் குறியும் நிபாஸ் சேரும்

Spread the love

தமிழ்ப்பாடம் என்றால் வயிற்றில் புளி கரைக்கும் நாட்கள் என்றால் அது 10ம் ஆண்டுதான், அதுவும் நிபாஸ் சேர் வகுப்புக்கு வருவதை விட ஓ எல் Science Lap ற்குள் பாடம் நடாத்துவதைத்தான் விரும்புவார், தியேட்டர் இருக்கைகள் போல கீழிருந்து மேலாக உயர்ந்து செல்லும் அவ்வறைக்குள் நுழைகின்ற அனைவருக்கும் கண் கடைசி வரிசை இருக்கைகளிலிலே கண்ணாக இருக்கும். எல்லாம், தப்பிக்கத்தான். சிறிய எழுத்துப்பிழை முதற்கொண்டு புத்தகம் கொப்பி எடுத்துவராத பெரிய குற்றங்கள் வரை தண்டனை கிடைக்கும். அதுவும் அடி என்றால், மறுநாள் வரைக்கும் நின்று பேசும்.

சொன்னதை சரியாக கிரகிக்காமல் எதையாவது கிறுக்கி வைத்தால், அதற்கான அர்ச்சனை வேறுவிதமாக இருக்கும்.

ஒரு தடவை, அலுவலக கடிதம் எழுத விளக்கிவிட்டு, எழுத சொல்லி இருந்தார். யாரென்று ஞாபகம் இல்லை. 
” ஏன் மகன் நிறுத்தல் குறி போட்டிருக்காய்.. அவர கட்டிப் பிடிக்கணும் போல இருக்கா? ” என சத்தமாக கேட்ட கையோடு நாலு அடியும் வைத்தது இன்னும் நினைவில் உள்ளது. இன்றும் ஏதாவது கடிதம் எழுத ஆரம்பிக்கும் தருணங்கள் அவரை ஞாபகப் படுத்தாமல் இருந்ததில்லை.

அண்மையில் விடுமுறைக்கு ஊர் சென்றிருந்த போது, மகளையும் அழைத்துக் கொண்டு பேப்பர் வாங்கப் போன ஒரு சந்தர்ப்பத்தில் அவரைக் கண்டேன். சின்னப்பள்ளிக்கு முன் இன்னும் சிலருடன் கதைத்துக் கொண்டிருந்தார். எதுவும் பெரிதாய் மாறவில்லை. கொஞ்சம் மூப்பு தட்டி இருந்தது தாடியும் நரைத்திருந்தது. ஆனாலும் 15 வருடங்களுக்கு முன் இருந்த கம்பீரம் இன்னும் இருப்பதாய் உணர்ந்தேன். நான் கவனிப்பதை கண்டுவிட்டார். சிரித்தேன். மையமாக தலையசைத்து சிரித்தார். என்னை நினைவில் இல்லை என அவர் சிரிப்பு காட்டிக் கொடுத்திருந்தது. நெருங்கி கதைக்கும் அவகாசம் கிடைக்கவில்லை.

ஆனாலும், அவரது நிறுத்தல்குறி, ஒவ்வொரு அலுவலக கடிதத்தின் போதும் அவரை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்..

பகிர:

Leave a Reply