மறந்து போன கடிதங்கள்!

Spread the love

96, 97 களில் கூட தகவல் தொழில் நுட்பம் மனிதர்களை ஆளத் தொடங்கவில்லை. ஒரு வீட்டில் தொலை பேசி இருக்கின்றது என்பதே – ஒரு வகையான பணக்காரத்தனத்தின் குறியீடு போலத்தான் பார்க்கப்பட்டது. தொலைபேசிக்கான தேவைகள் அப்போது அவ்வளவாக வலியுறுத்தப்படவில்லை. அவசரம் என்றால், தந்தி. அல்லது கடிதம். இதையும் தாண்டினால்த்தான் தொலைபேசி. 
தொலைபேசினால் அது பற்றிய கதையாடல்கள் குடும்பம் பூராகவும் ஓரிரண்டு வாரங்களுக்கு உலா வரும். அதோடு அது ஒரு ஆடம்பரம் எனும் தோற்றப்பாடும், பெருமையாகவும் வர்ணிக்கப்படுவதுண்டு.


தொலைதூர உறவுகளுக்கிடையிலான பாலமாக- கடிதங்களே பயணப்பட்டன. அவற்றை எதிர்பார்த்து காத்திருக்கும் நாட்கள் ஒரு வித பரபரப்புடன் கழியும். உறவுகளின் கடிதம் தவிர வேறு எந்த ஒரு தொடர்புகளும் இல்லை. அவர்களின் கடிதம் மட்டுமே, அவர் அங்கு இன்னும் இருக்கின்றார் என்பதற்கான ஒரே சாட்சி என்பதை இப்போது எண்ணிப்பாருங்கள்- அதில் ஒரு அசாத்தியம் அல்லது அசாதரணம் தொக்குகின்றதல்லவா?? ஆனால், இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன்பு வரை அப்படித்தான் வாழ்ந்திருக்கின்றோம். அக்காலங்களில் தூர உறவுகளின் அருமை, உறவின் வலிமை என்பன மிக்க உறுதியாக இருந்திருக்கின்றது. இன்று அது கொஞ்சம் குறைவு போல எனக்குத் தோன்றுகின்றது.
கணவனின் கடிதம் காண, காகத்திடம் விவரம் கேட்கும் மனைவி. தபால்காரனை எங்கு கண்டாலும் மகனின் கடிதம் கேட்கும் தந்தை என அனைத்தும் வலிதான உறவொன்றினையே வேண்டி நின்றன.


இன்று நிலமை மாறிவிட்டது. வீட்டிற்குள் அலைபேசிகள், இணையம் என உலகம் சுருங்கிப்போய்விட்டது. முகம் பார்த்து கதக்கின்றனர். நினைத்த மாத்திரத்தில் தொடர்பினை ஏற்படுத்த முடிகின்றது. தொலைதூரம் என்பது இப்போது போலியாகிவிட்டது. நவீன தகவல் தொழில்நுட்பம் அனைத்தையும் சுருக்கிவிட்டது. அதனால் இப்போது கடிதங்களுக்கோ, காகங்களுக்கோ வேலை இன்றிப்போய்விட்டது.


இதை ஒரு வகையில் நன்மை என நோக்கினாலும், கடிதம் எதிர்பார்த்து, எழுத்தில் உறவுகளின் முகம் பார்த்து, நினைவுகள் தோன்றும் போது மீண்டும் மீண்டும் … என .. இப்படியான சுவாரசியங்கள் இன்றைய நவீனத்தில் இல்லாமல் போய் விட்டது. ஒலியினை விட வார்த்தைகளுக்குள்ள வீரியத்தினை இன்றைய நவீனம் கபளீகரம் செய்து விட்டது.

பகிர:

Leave a Reply