மனங்களின் விகாரங்கள்!

Spread the love

பாலர் வகுப்பிலிருந்து படித்து வந்த வாழ்க்கை சமூகம் பற்றிய கற்பிதங்கள், நிஜமான உலகில் பிரவேசித்ததில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டே வருகின்றது. அதிலும் இன்றிருக்கும் நிலை இன்னும் பயமாக இருக்கின்றது. மனங்களின் விகாரங்கள் காலையில் கண் விழித்ததில் இருந்து பல்வேறு வடிவங்களில் உலவிக்கொண்டே இருக்கின்றன.

செய்திகளை புரட்டினால், மனசு இன்னும் சுருங்கிப் போய் இருக்கும் கவலைகளுடன் உலகம் பற்றிய சிறிய ஒரு வருத்தமும் தொற்றுவதை தவிர்க்க இயலவில்லை. அந்த வருத்தமும் சொந்த கவலை ஒன்று வரும்போது இல்லாமலே போய் விடும்.
மரணம் பற்றிய எமது நிலை இன்று வியப்பளிப்பதாகவே இருக்கின்றது. நான் சாவிற்கு அஞ்சுபவனில்லை என்பது வீரமா என்பது பற்றி எனக்கு மாற்று கருத்துக்கள் நிறைய உண்டு. மரணத்திற்கு நீ அஞ்ச வேண்டும். நித்தியமாக நாம் யாரும் வாழ வரவில்லை. நாள் குறிப்பிடாமல் நிச்சயிக்கப்பட்ட மரணம் எங்கோ எமது வழிப்பயணத்தில் எம்மை சந்திக்கலாம். நமக்கும் அதற்குமான தூரம் பற்றி எந்த ஒரு தகவலும் எம்மிடம் இல்லை. இதோ நான் கூட அதை அண்மித்திருக்கலாம். யாரறிவார்?     “ என் மரண நாட்காட்டியில் இன்றொரு நாள் கிழிக்கப்படுகின்றது”

என்று ஒரு கவிஞன் சொல்கின்றான். 
இதுதான் எமக்குள்ள வாழ்வு, எமது பயணம் நேராக செல்வது அதை நோக்கித்தான். செல்லுகின்ற வழிகளில் நாம் இறைத்துச் செல்வது நல்லவையாக இருக்கட்டுமே! அது நல்லவையாக இருக்க வேண்டும் என்றால் எமக்கு மரணம் பற்றிய பயம் இருக்க வேண்டும். என்றாவது அதை நான் சந்திப்பேன் என்ற நினைவு படுத்தல் இன்னும் நம்மை சீராக்கும் என்பது எனது எண்ணம்.
மரணத்திற்கான மரியாதையினை எப்போதும் நாம் கொடுக்க வேண்டியது அவசியம். அது – ஒரு சிறந்த ஆசான். ஒவ்வொரு மரணச் செய்திகளும் எமக்கான எச்சரிக்கை. இருக்கும் காலங்களில் நாம் செய்ய வேண்டிய சமூக கடமைகள் தொடர்பான அலாரம்.  
இன்றைய எமது இளம் தலைமுறையோ இது தொடர்பில் எவ்வகையான பார்வையினை கொண்டிருக்கின்றது என்பது அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தில் இருந்து புரிய கூடியதாக இருந்தது. அக்கரைப்பற்றில் நடந்த ஒரு கோர விபத்து ஒன்றில் பலியான சகோதரர் ஒருவரின் உடலினை விபத்து நடந்த இடத்தில் வைத்து படம் பிடித்து சமூக வலைத்தளங்கள் முழுவதும் நமது சகோதரர்கள் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். எத்தனை கவலைக்குரிய விசயம்? மரணித்தவர் யாராக இருக்கட்டும். எப்படியாவது இருக்கட்டும். அதை படம் பிடித்து இணையத் தளங்களில் பரப்புகின்ற அளவிற்கு மனிதம் தொலைந்து விட்டதா? மார்க்கத்தை விடுங்கள் ஒரு மரணத்தினை எப்படி உள்வாங்க வேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாத சமூகமாக நாங்கள் மாறிக் கொண்டிருக்கின்றோமா? இது எத்தனை பயங்கரமான ஒரு சமிக்ஞை.
எங்கு என்ன நடந்தாலும் வேடிக்கை பார்ப்பது எமது உதிரத்தில் ஒட்டிய என்றாலும். இது போன்ற நிகழ்வுகளின் போது எம்மை நாமே கேள்வி கேட்டு கொள்ளாமல், புகைப்படம் எடுத்து இணையத்தில் பரப்புகின்ற காரியங்களில் ஈடுபடுகின்றோமே! நம்மை என்ன பெயர் கொண்டு அழைப்பது நண்பர்களே?
மரணம் பற்றிய நினைவு நம்மிடத்தில் இல்லாமலே போய்விட்டது. அதற்கான ஊர்ஜிதங்களை இது போன்ற சம்பவங்களும் நமக்கு சொல்லிக் காட்டுகின்றன. இதற்காக ஒவ்வொரு நாளும் மரணத்தை எண்ணி அஞ்சி வாழ வேண்டியதில்லை. எனக்கும் உண்டு என்ற எண்ணத்தில் வாழ்ந்தாலே போதுமானது.
அந்த விபத்து தொடர்பான படங்களை இடுகின்ற போது, அதற்கு பேஸ்புக் போன்ற இணையத்தளங்களில் LIKE இடுகின்ற நண்பர்களின் மனநிலை பற்றி எண்ணுகின்ற போது இன்னும் ஒருவித அசூசை வந்து ஒட்டிக் கொள்கின்றது.
நண்பர்களே பயந்து கொள்ளுங்கள், வாழ்க்கை தருகின்ற பாடங்களுக்கான பரீட்சைத் தாள்களும் விடைகளும் மரணம் எனும் ஆசிரியர் கையிலேயே உள்ளது.

பகிர:

Leave a Reply