உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமை!

Spread the love

கலப்புத் தேர்தல் முறையின் நோக்கமே! விகிதாசார தேர்தல் முறை , தொகுதிவாரி தேர்தல் முறை என்பனவற்றில் காணப்படுகின்ற குறையினை ஓரளவுக்கவது நிவர்த்தி செய்து ஜனநாயகத் தன்மையினை பேணுவதும், வாக்குரிமைக்கு மதிப்பளித்தலுமாகும்.

கலப்புத் தேர்தல் முறைமை – வாக்காளர்களின் தெரிவுகளை துல்லியமாக இல்லாவிட்டாலும் விகிதாசார மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறையினை விட கூடுதலாக தேர்வு செய்ய உதவுகின்றது.

உள்ளூராட்சி முறையில் தற்போது அறிமுகமாகியுள்ள இம்முறை 60:40 என்ற அடிப்படையில் நடைபெற்ற ஒரு தேர்தல் முறை! அதாவது தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளில் 60 சதவீதமானோர் தொகுதிவாரி முறையிலும் 40 வீதமானோர் விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். அனைவரின் தேர்வும் மக்களின் வாக்குகளுக்கமைவாகவே நிகழ்ந்துள்ளது எனினும் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் வித்தியாசம் உள்ளது.

இத்தேர்தல்முறை ஓரளவுக்கு தேர்வில் திருப்தியையும் வாக்காளர்களின் வாக்குகள் வீணாகும் விகிதத்தினையும் குறைப்பதால் வரவேற்பினைப் பெற்றாலும், இரு வகையான தேர்தல் முறையினைக் கொண்டிருப்பதால், இரட்டை வாக்களிப்பு முறை அவசியம் எனச் சுட்டிக்காட்டப்பட்டாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

உள்ளூராட்சித் தேர்தல் முறையில் இக்கலப்பு முறை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டதற்கான காரணம் – பரீட்சார்த்தமே! யாப்பு மாற்றத்திற்கான அரசியலமைப்பு சபை இத்தேர்தல் முறை தொடர்பில் அதிக கவனம் செலுத்துகின்றது. இதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் சாதக பாதகங்கள் போன்றன ஆராயப்பட்டு, புதிய யாப்பின் போது அனைத்துவகையான தேர்தலுக்கும் இம்முறையே பின்பற்றவும் படலாம்!

இத்தேர்தல் முறைமையினை முன்வைத்து “மக்கள் அங்கீகரிக்காத பட்டியல் உறுப்பினர்கள்” என்று இங்கு கருத்துப் பகிர்வோர் – ஒன்று , இத்தேர்தல் முறை தொடர்பான தெளிவினை பெறாதவராக இருக்க வேண்டும், அல்லது இது போன்ற ஒரு கருத்துருவாக்கத்தின் மூலம் அரசியல் இலாபம் எதையாவது அடையும் நோக்கமுடையவராக இருக்க வேண்டும்!

மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே!! அதுதான் ஜனநாயகம் என நாம் நம்பும் நடைமுறையின் ஆணிவேர்!

பகிர:

Leave a Reply