இன்று நண்பகலில் எனது அலுவலகத்திற்கு முன்னுள்ள நெடுஞ்சாலையில் ஒரு விபத்து. அனேகமாக பாகிஸ்தானிய பெண்ணாக இருக்க வேண்டும். வீதியினை கடக்க முயற்சிக்கும் போது, வேகமாக வந்த காரினால் அடிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டுள்ளார். சுமார் 15 அடி வரைக்கும் அவரது உடல் தூக்கி எறியப்பட்டுள்ளது. பிழை அப்பெண்மணி மீதுதான். வீதியினை பாதுகப்பற்ற முறையில் கடக்க முற்பட்ட போது நிகழ்ந்த அவலம் இது.
வழமையாகிப் போன விபத்துச் செய்திகள்
இங்கு இவ்வாறான விபத்துக்கள் வழமையாகி விட்டது.
பெரும்பான்மையான விபத்துக்கள் இவ்வாறானவையாகத்தான் இருக்கின்றன. அவசர அவசரமாக வீதியினை கடக்க முற்படுவதால் ஏற்படும் அவலம். அவ்வளவு அவசரம் எமக்கு. சற்று
காத்திருந்து, பொறுமையுடன் வீதியினை கடப்போம் எனும் எண்ணம் அனேகருக்கு இல்லை. அவசரம்……….. அவசரம்………..
இங்கு வரும் அனைவரும் தனி மனிதர்கள் அல்ல. அவர்களினை நம்பி ஒவ்வொரு குடும்பங்கள் உள்ளன. அதனால் இம்மரணங்கள் ஒருவருடன் முடிகின்ற ஒன்றில்லை. அதன் தாக்கம் எங்கெல்லாமோ விரவி நிற்கின்றன என்பது அம்மரணங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அறிவர். இப்பாதிப்பு விபத்தில் இறந்தவர் சார்ந்தோருடன் மட்டும் முடிகின்ற ஒன்றல்ல. அது வாகன ஓட்டு
னரின் எதிர்காலத்தினையும் பாதிக்கின்றது. சரியோ தவறோ, வாகன ஓட்டுனருக்கும் தண்டனை உண்டு.
Jaywalker களை கட்டுப்படுத்த அரசுகள் தீவிரம்
வீதியினை பாதுகாப்பற்ற வகையில் கடக்கும் நபர்களை Jaywalker எனக் குறிப்பிடுவர். Jaywalker களுக்கெதிரான சட்ட திட்டங்களை எவ்வளவு கடுமையாக்கினாலும் அது கட்டுப்படுவதாக அபுதாபி போன்ற பெருநகரங்களில் காணக்கிடைப்பதில்லை.
மேம்பாலங்களையோ சுரங்க வழி கடவைகளையோ தேடி கடந்து வர சுற்ற வேண்டும்! முன்னே உள்ள கடையினை அடைய 500 மீட்டர் சுற்றுவதிலும் பார்க்க பாதையின் குறுக்காக பாய்வதையே பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக நமது தெற்காசியர்கள்! இது அமீரகத்தில் அபுதாபியில் அதிகம்! எலக்றா., ஹம்தான் வீதிகளில் காரினை ஓட்டும் போது கண்ணுக்குள் எண்ணை விட்டு பார்க்க வேண்டும். வேகத்திலும் அதிக கவனம் தேவை!
மோதி பாதசாரியின் உயிர்பிரிந்தால் முடிந்தது!! தியா எனும் மரண இழப்பீட்டு தொகை செலுத்தித்தான் வெளியே வரமுடியும். அதுவும் அந்தத் தொகைக்கு வரையறை எதுவும் இல்லை! இறந்தவரின் நெருங்கிய சொந்தங்கள் எதை கோருகின்றனரோ அதை அளிக்க வேண்டும்!
ஆனால், எவ்வளவுதான் கட்டண உயர்வு, மற்றும் விழிப்புணர்வினை ஏற்படுத்தினாலும் Jaywalker களை கட்டுப்படுத்துவதில் சிரமத்தையே அரசுகள் எதிர்கொள்கின்றன.
இங்குள்ள இன்னொரு பரிதாபம்.. விபத்தில் அடிபட்டு உயிர்க்கு போராடிக்கொண்டு கிடந்தாலும் யாரும் அவருக்கு உதவ முனவரமாட்டார்கள். அப்படி ஒரு கையாலாகத தனத்தினை இங்குள்ள சட்டதிட்டங்கள் ஊக்குவிக்கின்றன. அம்புலன்ஸ் / போலிஸ் வரும்வரை அடிபட்டவர் அங்கேயே கிடக்க வேண்டியதுதான்.
இதை என்னவென்று சொல்வது??
இங்குள்ள வாழ்க்கை மிக அபாயகரமானது. எம்மை நாம் மட்டுமே காத்துக்கொள்ள வேண்டிய தேவை. என்னில் மிக்க அக்கறை உள்ளவனாக நான் மட்டுமே இருக்க வேண்டிய நிலமையினை இங்குள்ள சூழல் கற்றுத்தந்துள்ளது. சில வேளைகளில் இது அக்கறை என்பதை தாண்டி, சுயநலமாக மாறுகின்ற சந்தர்ப்பங்களும் பலப்பல..
என்னவென்றாலும் கொங்கிரீட் காடுகளில் சீவிக்க இங்குள்ள நாங்கள் பழகிவிட்டோம் – மனிதம் தொலைத்து மிருகங்களாக…