அமெரிக்கா தொடங்கி இந்தியா வரை பெரு வணிக நிறுவனங்கள்தான் அரசியலை மறைமுகமாக செய்கின்றன. யார் ஆட்சிக்கு வந்தால் நமக்கு சாதகம் என்பதை கணித்து உரிய கட்சிகளுக்கு நிதியினை வாரி வழங்குவதில் இப்பெரு வணிக நிறுவனங்கள் ஒரு போதும் பின் நிற்பதில்லை.
அமெரிக்க அரசியல்
இரு கட்சிமுறை உள்ள அமெரிக்காவில் பகிரங்கமாக கட்சிகள் நிதி சேகரிப்பதற்கான வழிமுறைகள் காணப்படுகின்றது. அங்கு சேகரிக்கப்படும் நிதி தொடர்பிலான தணிக்கைச் சட்டங்கள் நடைமுறைகள் காணப்படுகின்றன. இருந்தும் அங்குள்ள சட்ட திட்டங்களையும் தாண்டி மறைமுக நிதிதிரட்டல்கள் தொடர்பிலும் பல குற்றச்சாட்டுக்களும் பரஸ்பர கட்சிகளால் மேற்கொள்ளப்படுவதும் உண்டு.
அங்கு நடந்து முடிந்த ஜனாதிபதி மற்றும் செனட் சபைத் தேர்தலுக்காக கட்சிகளால் திரட்டப்பட்ட மொத்த நிதி – $1,576,648,443.00 ( 1.5 பில்லியன்கள்)! இத்தொகையில் பெரும்பகுதிப் பங்களிப்பு பெரு வணிக நிறுவனங்களினாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
மக்களுக்காக சேவை செய்யவென வரும் அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் கட்சிகளுக்கும் பெரு வணிக நிறுவனங்களின் நிதி எதற்கு? அந்நிறுவனங்களுக்கு மக்கள் மேலுள்ள அக்கறையா? நிச்சயமாக இல்லை! பணம்! அது மட்டுமே குறிக்கோள்!
தாம் நிதியளிக்கின்ற கட்சி ஆட்சிக்கு வருகின்ற போது, தமது வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் அரச எந்திரத்தை இயக்க, இந்நிதிப்பங்களிப்பு அந்நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். பாரிய நிதிப்பங்களிப்பு செய்த கொடையாளருக்கு எதிராக ஆட்சிக்கு வருகின்ற கட்சியும் எதையும் செய்ய முடியாத கையறுநிலை ஒன்றினை அந்நிறுவனங்கள் இந்நிதிப்பங்களிப்பு மூலம் செய்துவிடுகின்றன.
போட்டியாளர்களை இல்லாது செய்தல், உள்ளூர் சட்டங்களை தமக்கேற்ற வகையில் மாற்றுதல், மானியம் / வரிவிலக்கு எனும் பெயரில் அரசின் மூலம் அனுகூலங்களைப் பெறுதல் போன்ற பல உள்ளடி வேலைகளுக்கு இந்நிதியளிப்பு துணை போகின்றது.
இந்திய அரசியலில் பெரு வணிக நிறுவனங்கள்
இது போன்றே, இந்தியாவிலும் தேசியக்கட்சிகளுக்கு இப்பெருவணிக நிறுவனங்கள் பணத்தினை வாரி வழங்குகின்றன. 2016 காலப்பகுதியில் 956 கோடி இந்திய ரூபாய்கள் இரு பெரும் பிரதான கட்சிகளுக்கும் நிதியாக பெரு வணிக நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளதாக Association for Democratic Reforms எனும் அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
இதில், தற்போது ஆட்சியிலுள்ள பீஜேபி ஆட்சி அமைப்பதற்கும், மோடி எனும் தனிமனிதரை இந்தியாவின் ஆபத்பாந்தவராக மக்களின் முன் உருவகப்படுத்த விளம்பரங்களுக்காக அதானிகுழுமம் அள்ளி இறைத்த நிதி தொடர்பிலான சர்ச்சைகள் ஒரு பக்கம். அதைத் தாண்டி, தமது சுரங்கத் தொழிலுக்காகவும், நிலக்கரி மின்சாரத் தொழிலுக்கும் அமைவாக மோடி அரசாங்கம் பல்வேறு வகையில் நாட்டின் சட்டங்களை வளைத்து உதவுவதாகவும் குற்றச்சாட்டுக்களும் எழுந்த வண்ணம் உள்ளன. அதற்கு வலு சேர்க்கும் வகையில், மோடியுடனானா அதானியின் நெருக்கமும் அவருடன் இணைந்து அதானி மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களும் சான்று பகர்கின்றன.
இவ்வாறான அதிகார மையங்களுக்கான நிதியளிப்பு தங்களது வணிக நடவடிக்கைகளுக்கான முதலீடு ஒரு வகையென்றால், மற்றொரு பரிமாணம் – Lobbying! அதிகார மையங்களை அணுகுவதற்கான ஒரு நடைமுறை எனச் சொல்லலாம். அதாவது, உரிய அதிகார மையங்களுக்கு நெருங்கியவர்களை அவர்களுக்கு நெருங்கிய இன்னொரு தரப்பின் மூலம் தொடர்பு கொண்டு அதன் மூலம் காரியங்களை சாதிக்கப்படுகின்ற முறையையே Lobbying என்கின்றனர். இதற்கும் இந்நிதியளிப்பு உரிய பெரு வணிக நிறுவனங்களுக்கு உதவியாக உள்ளது.
இரண்டும் ஒன்றுதான்!
மிக ஆழமாகவும், தோண்டத் தோண்ட பல அழுக்குகளையும் கொண்டிருக்கும் அரசியலுக்கும் பெருவணிகப் பணமுதலைகளுக்குமிடையிலான கள்ள உறவினை ஓரளவுக்காவது நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்!
ஏனெனில், அரசியல் அதிகாரம் என்பது, பணமுதலைகளுக்கு கைகட்டி சேவகம் செய்கின்ற பணியாளாக மாறி காலங்களாகிவிட்டன. அதை வெளிக்காட்டுவதில் இரு தரப்பும் ஒரு போதும் உடன்படுவதில்லை. காரணம் – மக்களுக்கான சேவகர்கள் எனும் முகமூடியினை அரசியல்வாதிகள் கிழியாமல் காப்பாற்றும் வரைக்கும் தான். பெருவணிக பணமுதலைகள், அரசியல் அதிகாரத்தினை தேடி அரசியல் தலைமைகளிடம் வருவர். எனவே சமூகம், மக்கள் நலன் எனக் கண்ணீர்விடும் அரசியல் தலைவர்களுக்குப் பின்னாலும் இது போன்ற பணமுதலைகளின் மறைகரங்கள் இருக்கலாம்! யாரறிவார்!!