புதிய தொழில்முயற்சியாளர்களை தொழிலதிபர்களாக்க உதவும் Crowdfunding

தொழில் முயற்சி தொடர்பில் நிறைய புத்தாக்க சிந்தனைகள் உள்ளது.

செயற்படுத்தக்கூடிய திறன் மற்றும் நம்பிக்கை நிறைந்து கிடக்கின்றது.

தெளிவான திட்டமிடல் கூட உள்ளது.

முயற்சியினைத் தொடங்க இவை மட்டும் போதாதே!!!

நிதி!!!

இங்குதான், அனேகமான தொழில் முயற்சிக்கான இடர் ஆரம்பிக்கின்றது.  நிதி எனும் தடையினை வெற்றிகரமாக கடப்பதற்கு அனேகமானோரால் முடிவதில்லை என்பதே சோகம். அப்புள்ளியில் இருந்து நகர முடியாமல், தமது முயற்சியினை தூக்கி தூர எறிந்துவிட்டு, கிடைப்பதைக் கொண்டு வாழ்வதற்கு தொடங்கிவிடுகின்றான் இளைஞன்.

ஐரோப்பா , அமெரிக்கா போன்ற மேலைத்தேய நாடுகளில், புத்தாக்க சிந்தனையுடன் கூடிய இளம் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் அவர்களை நம்பி நிதி முதலீடுகளை மேற்கொள்ளவும் தனிப்பட்டரீதியிலும், நிறுவனரீதியாகவும் பல முதலீட்டாளர்கள் உள்ளனர்.

இவ்வாறான இளம் தொழில்முயற்சியாளர்களை இனங்கண்டு, அவர்களின் தொழில்முயற்சிகளின் மீது பண முதலீடுகளைச் செய்வதில் அவர்கள் என்றும் பின்நின்றதில்லை.

இன்று இணைய உலகின் ஜாம்பவானாக திகழும் கூகிள் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்களும் இது போன்ற முதலீட்டாளர்களின் உதவி மூலமே இன்றைய நிலையினை எய்துள்ளன. கூகிளின் நிறுவனர் பேஜ் ஜிடமோ (Larry Page ) பேஸ்புக்கின் Mark Zuckerberg இடமோ இருந்தது – நிதியல்ல! தமது தொழில்முயற்சி தொடர்பான தெளிவான இலக்கு மட்டுமே! அதை சரியாக இனங்கண்டு, அவர்களின் முயற்சிக்கான நிதிப்பங்களிப்புக்களை ஆரம்பத்தில் சில முதலீட்டாளர்கள் மேற்கொண்டனர்.  கூகிளின் ஆரம்ப முதலீட்டாளர்களில் Amazon.com இன் ஸ்தாபகர் – Jeff Bezos சும் ஒருவர். இவரோடு, அதே நிறுவனத்தின் ஸ்தாபக ஊழியரான Ram Shriram எனும் தமிழரும் கூகிளின் ஸ்தாபக முதலீட்டாளர்களில் ஒருவராக இருந்துள்ளார்.

இதே போல பேஸ்புக்கின் முதலாவது வெளி முதலீடாக Peter Thiel எனும் முதலீட்டாளரின் 5 லட்சம் டொலர்கள் அமைந்தது. 2004 இல் அவர் முதலீடு செய்த அந்த ஐந்து லட்சம் டொலர்களுக்கான 10.2% த பங்குகளினை 1 பில்லியன் அமெரிக்க்க டொலர்களாக எட்டு வருடங்கள் கழித்து பணமாக்கிக் கொண்டார்.

வெற்றிகரமான தொழில் முயற்சிகளை இனங்கண்டு இவர்கள் முதலீடுகளை மேற்கொண்டதால், இலாபம் இரு தரப்பிற்கும் கிடைப்பதோடு, சமூகமும் பல்வேறு பொருளாதார நன்மைகளை பெறுகின்றது. ஒரு வெற்றிகரமான தொழில்முயற்சி மூலம் வேலைவாய்ப்புக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாக்கப்படுவதால் சமூக முன்னேற்றம் சிறந்த ஒரு வேகத்தில் செல்லும் என்பதில் சந்தேகமில்லை!

இது மேர்குலகில் என்றால், கீழைத்தேய நாடுகளில் நிலமை கொஞ்சம் நலிவுதான் இருந்தும், இந்தியா போன்ற நாடுகளில் தற்போது, புத்தாக்க தொழில்முயற்சிகளுக்கு முதலீடுகளை செய்வதில் அங்குள்ள செல்வந்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். Anupam Mittal போன்ற முதலீட்டாளர்கள் பல தொழில்முயற்சிகளில் தற்போது முதலிட தொடங்கியுள்ளனர்.  இதன் மூலம் பல இளம் தொழிலதிபர்களை இக்காலகட்டத்தில் இந்தியா பெற்றுள்ளதைக் காணலாம். இதற்கு உதாரணமாக OlaCab நிறுவனத்தினையும் அதன் உரிமையாளர் Bhavish Aggarwal ( 33 வயது ) னையும் குறிப்பிடலாம்.

இது தொடர்பில் நமது இலங்கையில் ஏதாவது முனைப்புகள் இடம்பெறுகின்றனவா? என்று தேடுகின்ற போது, சில காத்திரமான முன்னெடுப்புக்கள் இடம்பெறுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. அரிதாக இலங்கையில் நடைபெறுகின்ற சில தொழில்முயற்சிகளுக்கு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டுள்ள சந்தர்ப்பங்களும் நடைபெற்றுள்ளது அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அந்தவகையில் இலங்கையில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் Pickme நிறுவனத்திற்கு தனியார் தொழில்முயற்சிகளில் முதலீடுகளை மேற்கொள்ளும் உலகவங்கியின் ஒரு அங்கமாக திகழும் The International Finance Corporation (IFC) நிறுவகம் 4 மில்லியன் அமேரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது.  இது போன்ற முதலீடுகளும் நிறுவன விரிவாக்கங்களும் வெற்றிகரமான தொழில் முயற்சிகளில் நடைபெறுவது மகிழ்ச்சிக்குரியதே.

இது போன்ற முதலீடுகளின் மூலம், மேலே கூறியவாறு இருதரப்புகளும் நன்மையடைவதால், நிதி வளம் உள்ள செல்வந்தர்கள் சிறந்த தொழில்முயற்சிகளின் மீது நம்பிக்கை வைத்து தமது முதலீடுகளை மேற்கொள்ளலாம். 

இவ்வாறான தொழில்முயற்சிகளுக்கு நேரடியாக முதலிட தயங்குகின்ற அல்லது மொத்தமாக நிதி அளிக்க தயாரில்லாத முதலீட்டாளர்களை பின்வாங்கவிடாமல், தொடர்ந்தும் தொழில்முயற்சிகளில் முதலிட வைக்க தற்போது பயன்படுத்தப்படுகின்ற ஒரு முறை Crowdfunding எனப்படுகின்றது.  

அதாவது,  சிறந்த ஓர் வியாபார முயற்சிக்கு குழுரீதியாக அவர்கள் முதலீடுகளை செய்கின்றனர். அதாவது, நிறுவனத்தின் பங்குகள் முதலீடுகளின் அளவுக்கேற்ற வகையில், உரிமையாளர்களை பெறுகின்றன. இதன்மூலம், தமது முதலீட்டின் பெறுமதிக்கு ஏற்ற வகையில் அவர்கள் உரிய நிறுவனத்திலிருந்து இலாபத்தினை பெற்றுக் கொள்கின்றனர். மறுதலையாக, வெற்றிகரமான அத்தொழில் முயற்சி ஒருவேளை தோல்வியுறுகின்ற பட்சத்தில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுகின்ற நிதி இழப்பும் பெரிதாக அவரைப் பாதிக்காது. இதன் காரணமாக, முதலீட்டுத் துறையில் Crowdfunding தற்போது வெற்றிகரமான ஒரு தந்திரோபாயமாக மாறிவருகின்றது.

மேலும், தொழில் முயற்சியாளர்களையும், முதலீட்டாளர்களையும் இணைக்கும் வகையில் Kickstarter , Fundly போன்ற பல்வேறு இணையத்தளங்கள் Crowdfunding சேவையினை மேற்கொள்கின்றன. இது போன்ற இணையங்களுக்கு சென்று பார்வையிட்டால், எத்தனை வகையான தொழில்முயற்சிகள் எத்தனை வித்தியாசமான சிந்தனைகள் என தகவல்களும் புதிய புதிய யோசனைகளும் கொட்டிக் கிடக்கின்றன.

இலங்கையிலும் இது போன்ற Crowdfunding முயற்சிகள் crowdisland மற்றும் Lankan Angel Network போன்ற நிறுவனங்கள் ஊடாக நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளன என்றாலும், இச்சேவைகள் தொடர்பில் நமது இளைஞர்கள் எவ்வளவுக்கு ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது கேள்வியே! மேலும் இது போன்ற விடயங்கள் தொடர்பில் மக்களுக்கான தெளிவூட்டலும் மிக மட்டுப்படுத்தப்பட்டே உள்ளது.

இலங்கை விடுத்து, எமது பிராந்தியத்தை எடுத்து நோக்கினால், வெளிநாடுவாழ் அதிகளவான இளம் செல்வந்தர்கள் தங்களது திறமை மூலம் நிதிவளங்களை கொண்டுள்ளனர். தமது, உழைப்பின் மூலம் பெறப்பட்ட இச்செல்வத்தினை மீள் முதலீடு செய்வதற்கான வழிவகைகளாக அவர்கள் பெரும்பாலும் தேர்வு செய்வது காணிக் கொள்வனவு மட்டுமே. இதன் மூலம், அவர்கள் எதிர்மறையான பொருளாதார விளைவொன்றுக்கு துணைபோகின்றனர் என்பதைக் கவனிக்கத் தவறுகின்றனர். அது – செயற்கையாக அதிகரிக்கப்படும் காணிக்கான கேள்வியாகும்! இச்செயற்கை அதிகரிப்பானது – காணிக்கான விலையினை பலமடங்காக்க உதவுவதோடு, இச்செயற்பாடு ஒரு நீர்க்குமுழி போல ஊதிப் பெருத்து ஒரு கட்டத்தில் உடையும் நிலைக்கு வந்து சேரும் ( Economy Bubble Burst என பொருளியலாளர்கள் இதைக் கூறுகின்றனர் ) இந்நிலமை ஏற்படுமாக இருந்தால், காணிகளுக்கான விலையில் ஒரு பாரிய சரிவு ஏற்படுவதோடு, முதலீட்டு நோக்கத்துடன் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளிற்கான பெறுமதியில் ஏற்படுகின்ற பாதிப்பு உரிய முதலீட்டாளருக்கு தீமையினையே கொண்டு சேர்க்கும்.

எனவே, நமது முதலீட்டாளர்கள் கூட இந்த Crowdfunding தொடர்பில் தமது கவனத்தினை செலுத்தலாம். இதன் மூலம் நமது சமூகத்தில் பல இளம் தொழில் முயற்சி யாளர்களை உருவாக்குவதில் பங்களிப்பு செய்வதோடு, தமது முதலீட்டிற்கான இலாபத்தினை கூட குறுகிய காலத்தில் பெறுவதற்கான வாய்ப்புக்களையும் பெறலாம்.

உண்மையில் இது போன்ற விடயங்களை தொடர்ந்து உரையாடுவதன் மூலம் ஒத்த சிந்தனையுள்ள ஒரு தரப்பு உருவாகலாம், அதன் மூலம் ஒரு திட்டமிடப்பட்ட Crowdfunding குழுவொன்று ஏற்படுத்தப்பட்டு நமது இளைஞர்களின் புத்தாக்க சிந்தனைக்கு உயிர்கொடுக்கும் சந்தர்ப்பங்கள் அமையலாம்.

இன்னும் பேசுவோம்! இளம் தொழிலதிபர்களை உருவாக்கி நமது முதலீடுகளையும் அர்த்தமுள்ளதாக்குவோம்!

பகிர:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன