பேலியோ!

பேலியோ!

பேலியோ

நீரிழிவு மற்றும் கொலொஸ்ரோல் நோய் என்பதைத்தாண்டி நம்மவர்களின் வாழ்க்கை முறை போலாகிவிட்ட காலகட்டம். இதற்கு காரணம் நமது உணவு முறைகளே என வைத்தியர்களும் சுட்டிக் காட்டுகின்றனர். அதற்கென கூறும் உணவுக்கட்டுப்பாடுகளையும் நாம் கடைப்பிடிப்பதுமில்லை. அவ்வாறு கடைப்பிடித்தாலும் இந்நீரிழிவினை கட்டுப்படுத்தலாமே ஒழிய அறவே இல்லாதொழிக்க முடியாது எனவும் கூறப்படுகின்றது.

ஆனால், தற்போது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி மனிதர்கள் உட்கொண்ட உணவு முறை எனக்கூறப்படும் கொழுப்புணவுகள் மூலமாக நமது ஊழைச் சதைகளை குறைக்க முடிவதோடு, நீரிழிவு கொலொஸ்ரோல் பிரச்சனைகள் போன்றவற்றையும் இல்லாதொழிக்கலாம் என கூறுகின்றர். கொழுப்பை கொழுப்பால் குறைப்போம் என கூறும் இவ்வுணவு முறைக்கு பேலியோ ( Paleo Diet ) என அழைக்கின்றனர்.

மேலைத்தேய நாடுகளில் வாதப்பிரதிவாதங்களுடன் பரவி வருகின்ற இவ்வுணவு முறைமை தற்போது தமிழ்நாட்டில் – ஆரோக்கியம் & நல்வாழ்வு என்ற பேஸ்புக் குழுமம் மூலம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இவ்வுணவு முறைமையினை பின்பற்றுவதன் மூலம், நிறையப் பேர் மூன்று மாத இடைவெளிக்குள் தங்களது எடையினை 30 கிலோ வரைக்கும் குறைத்துள்ளனர். பலருக்கும் நீரிழிவிலிருந்து விடுதலை கிடைத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது. இது மட்டுமல்லாது, உடல் சார்ந்த பல பிரச்சனைகளில் இருந்து விடுபட்டுள்ளதாகவும் அவர்களின் அனுபவ பகிர்வுகள் கூறுகின்றன.

பேலியோ உணவு முறையில், அரிசி மற்றும் மாவு உணவுகள் மற்றும் சிறு தானியங்கள், இனிப்பு என்பவற்றுக்கு அனுமதி இல்லை. ஆனால், கொழுப்புணவுகள், பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்படாத இறைச்சி வகைகள், முட்டை அதோடு விதைகள் என்பவற்றை பசியாறும் வரை உண்ண அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு உண்பதால் ஒரு மனிதனுக்கு தேவையான புரதம் மற்றும் கொழுப்புச் சக்திகள் நேரடியாக கிடைப்பதோடு, மேலதிகமாக கிடைக்கும் சக்திகள் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படும் செயற்பாடும் தடுக்கப்படுவதாக கூறுகின்றனர். அதாவது, அதிகளவான‌ கார்போஹைட்ரேட் பண்டங்கள் மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் சக்தியினை உடல் கொழுப்பாக சேமித்து வைப்பதனாலேயே தொப்பை உடற்பருமன் ஏற்படுகின்றது. இதனை தவிர்க்க வேண்டுமானால், கார்ப் உணவுகளை தவிர்க்க இவ்வுணவு முறை அறிவுறுத்துக்கின்றது.

மேலும், அதிகமான கொழுப்புணவுகளை உட்கொள்ளுவதால் கொழுப்பின் அளவு கூடாதா என்ற விமர்சனத்திற்கு பேலியோ கூறும் பதில் – கூடும்! ஆனால், அது நல்ல கொழுப்பு. கெட்ட கொழுப்புக் குறையும் என கூறுகின்றது.

இலங்கையிலும் தற்போது இப்பேலியோ தொடர்பாக பலரும் ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றனர். இங்கும் – “யாம் பெற்ற இன்பம்” என்ற பெயரில் ஒரு பேஸ்புக் குழுமம் இயங்குகின்றது. அதிலும் நிறையப்பேர், உடல் எடைக்குறைப்பினை இப்பேலியோ மூலம் சாதித்துள்ளனர்.

ஆகவே – இன்று நம்மவர்களிடையே பெரும் பிரச்சனையாக உள்ள நீரிழிவு மாரடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு ஏன் இந்த பேலியோ உணவுமுறை தொடர்பான தெளிவூட்டல் செய்யப்படக்கூடாது? இவ்வுணவு முறை சரியானதுதானா?

எமது பகுதியினைப் பொறுத்தவரையில், உணவு தொடர்பான தெளிவான அறிவூட்டல் இப்பேலியோ முறைக்கு எதிர்த்திசையிலேயே உள்ளது. நம்மவர்களிடம் நேரடியாக அரிசியினை குறைத்து இறைச்சியினை அதிகம் உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தவும் இயலாது. அதற்கு முன்னர். இம்முறைமையில் உள்ள சாதக பாதகங்கள் பற்றி வைத்தியத்துறை சார்ந்தவர்கள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவேண்டும். அதற்கான ஒரு ஆரம்பமாக இப்பதிவினை இங்கு நான் இடுகின்றேன்.

இது தொடர்பில் வைத்திய துறை சார்ந்தவர்கள் பதில் தாருங்களேன்..!

பகிர:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன