நிறைவேற்றதிகார ஒழிப்பில் மனம் தளரா விக்கிரமாதித்தன் – ஜேவிபி

20வது தனிநபர் பிரேரணையும் JVP யும்  

தனிநபர் பிரேரணையாக நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான யாப்புச் சீர்திருத்தத்தினை கோரி JVP 20 வது திருத்தத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.

நிறைவேற்றதிகாரமும் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் ஜேவிபியும்

மற்றொரு புறம். நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்போம் எனக் கூறி ஆட்சிக் கட்டில் ஏறும் அனைத்து ஜனாதிபதிகளும் அதிகாரம் கைகளிற்கு வந்ததும் அதைக் கிடப்பில் போடும் வரலாறே இலங்கை அரசியலில் காணக் கிடைத்துள்ளது. அதன் நீட்சியாக, JVP இன் இவ்விருபதாவது திருத்தத்தினை ஆதரிக்கப் போவதில்லை என சுதந்திரக் கட்சி

JVP

அறிவித்துள்ளதை குறிப்பிடலாம்!

புதிய அரசியல் யாப்பிற்கான சாத்தியங்கள் குறைந்து கொண்டு செல்வதால் இத்திருத்ததினை தாம் சமர்ப்பித்துள்ளதாக ஜேவிபி கூறுகின்றது. திருத்தத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பிலான திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜேவிபி. இது தொடர்பான தெளிவூட்டல்களையும் ஆரம்பித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

நிறைவேற்றதிகார ஒழிப்புக்கெதிரான ஜேவிபியினது தொங்கோட்டம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. அதன் ஆரம்பம் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலுடன் தொடங்கிய ஒன்றாகும்.  1994 இல் நடைபெற்ற தேர்தலில் சந்திரிக்கா அவர்கள் நிறைவேற்றதிகார ஒழிப்பினை பதவியேற்றதும் நடைமுறைப்படுத்துவதாகவும் அதற்கான வேலைத்திட்டங்களை ஜூலை 15 1995 க்கு முன்னர் முடிப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கு வாக்குறுதியளித்தே தேர்தலில் நின்றார். அவரின் வாக்குறுதிக்கு மதிப்பளித்து ஜேவிபி தனது ஜனாதிபதி அபேட்சகரான நிஹால் கலப்பதி அவர்களை போட்டியிலிருந்தும் விலக்கி இருந்தது.

ஆனால், பதவிக்கு வந்ததும் சந்திரிக்கா அம்மையார் – நிறைவேற்றதிகாரம் தொடர்பில் ஒரு சிறுதுரும்பைக்கூட நகர்த்தவில்லை. போதாததற்கு அவர் இரண்டாவது முறையும் தேர்தலில் நின்றார். தனது பதவிக்காலத்தை ஒருவருடத்தால் நீட்டிக்க கூட முயற்சித்து உச்சநீதிமன்றத்தால் தடுக்கப்பட்டிருந்தார்.

இதன்பின்னர், ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ஸ அவர்களின் “மகிந்த சிந்தனை” கூட நிறைவேற்றதிகார ஒழிப்புக்கு உத்தரவாதமளித்திருந்தது. ஆனால், நடந்ததோ வேறாக இருந்தது, நிறைவேற்றதிகாரத்தினை இன்னும் பலப்படுத்தும் வகையில் 18வது திருத்தத்தினை மகிந்த கொண்டு வந்திருந்தார். அதிலும் ஜேவிபியின் நிறைவேற்றதிகார ஒழிப்பிற்கான போராட்டம் தோல்வியையே கண்டது.

பின்னர் தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கம், அதே பல்லவியான நிறைவேற்றதிகார ஒழிப்பினையும், புதிய அரசியலமைப்பு ஒன்றிற்கான உத்தரவாதத்தினையும் முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்தாலும் 18வது திருத்தத்தினை இரத்துச் செய்து கொணரப்பட்ட 19வது திருத்தம் தவிர எந்த ஒரு முன்னெடுப்பினையும் இதுவரை செய்யவில்லை. தனது இறுதிக்காலத்தை எட்டியுள்ள தற்போதைய பாராளுமன்றம் – புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் நோக்கில் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டிருந்தும், அது நடைபெறுமா என்ற ஐயம் கூட தற்போது எழுந்துள்ளது. ஏனெனில், இன்னும் மீதமுள்ள காலம் ஒன்றரை வருடங்களுக்கும் குறைவானதே.

தனிநபர் பிரேரணை

அதனால், ஜேவிபி – நிறைவேற்றதிகார ஒழிப்பினை புதிய யாப்பிற்கான சாத்தியப்பாடுகள் அருகிவருகின்ற நிலையில் தனிநபர் பிரேரணையாக கொண்டு வந்திருக்கின்றது. கடந்த 24 வருடங்களாக நிறைவேற்று அதிகார ஒழிப்பு என்ற பயணத்தில் தொடங்கிய புள்ளியினை விட்டு நகராத ஒரு நிலையே மக்கள் விடுதலை முன்னணிக்கு காணப்படுகின்றது.

நிறைவேற்றுமுறை ஒழிப்பென்பது தனிநபர் பிரேரணை மூலம் சாத்தியமா என்பதில் சில பல வாதப்பிரதிவாதங்களும் காண்ப்படுகின்றன.

அதாவது, தனிநபர் திருத்தப் பிரேரணை ஒன்றானது, உரிய அமைச்சின் ஊடாக, அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அமைச்சரவை அங்கீகாரத்துடன் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும். அதுவும் உரிய பாராளுமன்ற கூட்டத்தொடருக்குள் இது நடைபெறவில்லை எனில் அத் தனிநபர் பிரேரணை காலாவதியாகிவிடும்.

எனவே, நிறைவேற்று அதிகாரத்தினை ஒழிக்கும் நோக்கம் நமது அரசியல்வாதிகளுக்கு உண்மையில் இருக்குமானால், JVPயின் இத் திருத்தப் பிரேரணை பாராளுமன்றத்தை சந்திக்கலாம்.

20வது திருத்தம் தொடர்பில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

அதையும்தாண்டி, 20வது திருத்தம் உச்சநீதிமன்றின் வியாக்கியானம் மற்றும் தீர்ப்புடன் மீண்டும் பாராளுமன்றிற்கே வந்து சேர்ந்துள்ளது.

அதன்படி, இப்பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டுமெனில், திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துக்கள் 2-16, 19-23, 26-30,32 மற்றும் 34-37 என்பனவற்றை நிறைவேற்ற வேண்டுமெனில் தற்போதுள்ள யாப்பின் 84(2) சரத்தின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் 2/3 பெரும்பான்மையுடன் பொதுசன வாக்கெடுப்பும் (Referendum) அவசியம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் திருத்தத்தில் உள்ள சரத்துக்களான 17,18,24,25,31,33 என்பனவற்றினை நிறைவேற்ற பாராளுமன்றின் 2/3 பெரும்பான்மை அவசியம் என தற்போதைய யாப்பின் 82(5) சரத்தினை மேற்கோள்காட்டியுள்ளது உச்சநீதிமன்றம்.

கூட்டு எதிர்க்கட்சி

இந்நிலையில் இத்திருத்தச் சட்டமூலம் தற்போது, அரசியல் அரங்கில் ஒரு சூடுபிடிக்கும் விடயமாக மாறியுள்ளது. உச்சநீதிமன்றின் தீர்ப்பை வரவேற்றுள்ள கூட்டு எதிர்க்கட்சி, அரசாங்கம் – சர்வசன வாக்கெடுப்புக்கு செல்லுமா? எனச் சவால்விடுத்துள்ளது. மகிந்த கூடாரமான பொது எதிரணிக்கு, தற்போதுள்ள நிலையில் நிறைவேற்றதிகார ஒழிப்பென்பது அவசியமான ஒன்றாகவே உள்ளது.

நிறைவேற்றதிகாரமுறை ஒழிப்பின் மூலம் பாராளுமன்ற அதிகார ஆட்சிமுறை அமுலுக்கு வருமெனில், மீண்டும் ஆட்சிக் கட்டிலினை பிடிக்க ஏதுவாக இருக்கும் என்பது ராஜபக்ஸ தரப்பினரின் எதிர்பார்ப்பாகும். அதற்காக ஜேவிபியின் இவ்விருபதாவது திருத்ததினை உன்னிப்புடன் அவர்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றனர்.

20வது திருத்தமும் முஸ்லிம் அரசியல்வாதிகளும்

இவை ஒரு புறமிருக்க, நிறைவேற்றதிகாரம் – சிறுபான்மையினருக்கு எதைச் செய்யும், அதன் சாதக பாதகங்கள் என்ன? என்பது தொடர்பில் இன்னும் நமது அரசியல் தலைமைகள் வாளாவிருக்கின்ற நிலையே காணப்படுகின்றது.

18வது திருத்தத்திற்கு ஆதரவளித்துவிட்டு அதற்கு மன்னிப்புக் கோரிய சமப்வங்களும், பின்னர் 19 இனை ஆதரித்ததன் மூலம் அதற்கு பிராயச்சித்தம் தேடியதாக சால்ஜாப்பு செய்ததைத் தவிர நமது தலைவர்கள் எதையும் இது தொடர்பில் வெட்டிமுறித்ததைக் காணோம்!

இவ்வாறு ஒரு திருத்தம் JVP யினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது தொடர்பில் அவர்கள் அறிவார்களா என்பதும் சந்தேகமே! 18வது திருத்தத்தின் போது நிறைவேற்றதிகாரத்தின் அனைத்துக் கதவுகளையும் திறந்துவிட ஆதரவளித்த நமது தலைமைகளைப் பற்றி இவ்வாறுதான் எண்ணத் தோன்றுகின்றது.

நிறைவேற்று அதிகாரம் வேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் சிங்கள அரசியலில் பெரும் சர்ச்சைகள் நிகழ்ந்து கொண்டிருக்க இன்னும் நமது தலைவர்கள் மௌனிகளாக இருப்பது எதற்கெனப் புரியவில்லை.

இன்னும் இத்திருத்தப் பிரேரணை தொடர்பில் எந்தவொரு முஸ்லிம் அரசியல் தலைமைகளும் வாய்திறந்ததாக அறியமுடியவில்லை. வாக்கரசியலில் மூழ்கியுள்ள நமது அரசியல் தலைமைகளுக்கு இது தொடர்பில் கவனிக்க நேரமிருக்காது என்பதே திண்ணம். வெகுவாக அரசியல்மயப்படுத்தப்படாத முஸ்லிம் வாக்காளர்களும் இது தொடர்பில் தெளிவினைக் கொண்டுள்ளதாக அறியமுடியவில்லை. மேலும், நமது அரசியல் தலைமைகளுக்கு பாரிய அளவில் அழுத்தம் கொடுக்கக் கூடிய அமுக்கக் குழுக்களும் முஸ்லிம் சமூகத்தினுள் இல்லாமை இதில் இன்னொரு குறை.

எப்படியோ! JVP யின் இத்திருத்தப் பிரேரணை மீண்டும் அவர்களை தொடங்கிய இடத்திற்கே கொண்டு வந்திருந்தாலும், நிறைவேற்றதிகார ஒழிப்பு தொடர்பான தென்பகுதி மக்களிடையே பிரச்சாரத்திற்கு இத்திருத்தப் பிரேரணை அவர்களுக்கு வெற்றியினையே கொடுத்துள்ளது.

ஆனால், அது சிறுபான்மையினரிடையே எந்தளவுக்கு இது தொடர்பில் தெளிவுள்ளது என்பது மிகப்பெரிய கேள்விக் குறியே! அதற்குக் காரணம் JVP அல்ல, நாம் கூறிக்கொள்ளும் நமது அரசியல் தலைமைகளே!!

ஜேவிபியினரின் இருபதாவது திருத்தத்தை பார்வையிட : இங்கு கிளிக்குக

பகிர:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன