CIMA – ஒரு கொடுங்கனவு

90 களின் இறுதியில் CIMA என்பது ஒரு ஆடம்பர பண்டமாகத்தான் பார்க்கப்பட்டது. அதோடு, Prestige Symbol ஆகவும் CIMA இருந்தது. “ CIMA செய்றன்” “ மகன் CIMA செய்றார்” , “ இன்னார்ட மகன் CIMA செய்றானாம் கொழும்புக்கு போறான் “ போன்ற கதையாடல்கள் மிக பிரபலமும். சபைகளில் அங்கீகரிக்கப்பட்டதுமாக இருந்தன.

“CIMA செய்றன்” என்பதே ஒரு தகுதியாக நோக்கப்பட்ட அந்தக்காலங்களில், அதை பற்றி கனவுகள் நிறைய என்னைப் போன்ற பொருளாதார ரீதியில் தேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட பல நண்பர்களுக்கும் இருந்தது. அதனால், பொருளாதார ரீதியிலும் CIMA ஒரு எட்டாக்கனியாகவும் பிரமாண்டமாகவுமே தோன்றியதில் வியப்பேதுமில்லை. அதன் பலன், “CIMA செய்றன்” என்ற நண்பர்களை கொஞ்சம் உயரத்தில் வைத்துப் பார்க்க வைத்தது. அதோடு அவர்களது பொருளாதார நிலை பற்றிய கற்பிதங்களும் மிகைப்படுத்தப்பட்டதாகவே இருந்தன.

அதோடு, தொழில் தகைமை என்பதை தாண்டி CIMA செய்ய வேண்டும் என்பதற்கான காரணம் சமூகம் சார்ந்த ஒரு அங்கீகாரத்தை குறுக்கு வழியில் பெற்றுவிடலாம் என்ற வகையிலேயே இருந்தது. இன்று யோசிக்கின்ற போது சிரிப்பாக தோன்றினாலும், அன்றைய மனநிலையில் அதுதான் உண்மை.
இப்போது CIMA பற்றிய மிகைப்படுத்தல்கள் குறைக்கப்பட்டுவிட்டன. CIMA வினை விட துரிதஉணவு போல QS வந்துவிட்டதால் நம்மவர்கள் CIMAவுக்கான இடத்தினை இறக்கிவிட்டனர். துரித உணவு போன்ற QS சொற்ப காலத்தில் நிறைய பணம் பண்ண உதவுதால் அது இன்று CIMAவுக்கான இடத்தினை பிடித்துக் கொண்டது. இதற்கு உதாரணமாக, ஊரில் CIMA செய்பவர்கள் யார் என இன்று விசாரித்தால் அனேகமாக யாருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் 10 வருடங்களுக்கு முன்னுள்ள நிலமை வேறு. யாரெல்லாம் CIMA செய்கின்றார்கள் என அனேகம் பேருக்கு தெரிந்திருக்கும். CIMA வுக்கான விரிவாக்கம் என்னவென்று தெரியாதவருக்கும் CIMA பற்றி தெரிந்திருக்கும்.

நிதி நிலமையின் காரணமாக தொடமுடியாதிருந்த அதை இன்று தொழில் தகமையினை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தொடர முனைந்த போது, அதையும் தாண்டி, மேலே சொன்னது போல ஒருவிதமான அடையமுடியாத ஒன்றை அடைந்த திருப்தி ஏற்பட்டதையும் மறைப்பதற்கில்லை. அது அடிமனதின் ஆசைகளில் ஒன்றாக அன்று உறங்கி இன்று விழித்ததாக இருக்கலாம்.

அன்று, தொழில் தகைமை என்பதை தாண்டி, பல காரணங்களுக்காக துணைக்கழைப்பட்ட CIMA வினை அப்போதெல்லாம் தூக்கிக் கொண்டு திரிந்தவர்கள் இப்போது என்னவானார்கள் என்ற கேள்வியும் எனக்குள் இடைக்கிடையில் எழும். ஆனால், விடை சொல்லத்தான் யாரும் இல்லை.

பகிர:

One Reply to “CIMA – ஒரு கொடுங்கனவு”

  1. “துணைக்கழைப்பட்ட CIMA வினை அப்போதெல்லாம் தூக்கிக் கொண்டு திரிந்தவர்கள் இப்போது என்னவானார்கள் என்ற கேள்வியும் எனக்குள் இடைக்கிடையில் எழும்.”
    .
    cima பாஸ் பண்ணி முடித்து இருந்தால் ஏதாவது ஐரோப்பிய , அவுஸ்திரேலியா , கனடாவில் நல்ல சம்பளத்துடன் செட்டில் ஆகி இருப்பார்கள் .
    மேலே உள்ள நாடுகளுக்கு போக முடியாதவர்கள் மத்திய கிழக்கு நாட்டில் திருப்தியாக இருப்பதாக கூறி கொள்வார்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன