“மோடி” எனும் விளம்பரப் பண்டம்!

அயல்நாட்டில் 2014ல் நடந்த பொதுத் தேர்தல் தொடர்பில் இன்னும் பல வியாபார வல்லுனர்களும், சந்தைப்படுத்தல் துறை சார்ந்தவர்களும் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்றால் நம்ப முடிகின்றதா? அரசியலுக்கும் வியாபாரத்துறைக்கும் பல்வேறு இருட்டறைச் சம்பந்தங்கள் இருந்தாலும், வெளிப்படையாக இத்தேர்தல் பேசப்படக் காரணம் – மோடி!

2014 இன் இந்தியப் பொதுத்தேர்தல் அரசியல் என்பதையும் தாண்டி, “மோடி” எனும் அடையாளம் எப்படி ஒரு Brand ஆக இந்திய மக்களிடம் சந்தைப்படுத்தப்பட்டது என்பது இன்றும் பல்வேறு இடங்களில் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. 
கொள்கை, மக்கள் செல்வாக்கு, ஆளுமை மிக்க தலைமைத்துவம் மற்றும் இன்னபிற பண்புகள் என்பவற்றை எல்லாம் தாண்டி, ஒரு வியாபாரப் பண்டமாக அரசியல் தலைமையினை மாற்றி மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றியும் பெறலாம் என்பதை நிருபித்துக் காட்டிய ஒரு தேர்தலாக அது அமைந்தது.

சமூக வலைத்தளங்களைக் கொண்டு, “மோடி” எனும் பிம்பத்தினை ஊதிப் பெருப்பித்துக் காட்டுவதற்கென அதிகளவான நிதியினை பாரதிய ஜனதாக் கட்சி செலவழித்திருந்தது. இது அண்ணளவாக 115 மில்லியன் டொலர்கள் என சில ஊடகங்கள் கூறி இருந்தன.
குஜராத்தின் முதல்வராக இருந்த போது செய்த அபிவிருத்தித் திட்டங்கள் எனக் கூறி பல்வேறு போலியான‌ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பட்டன. குஜராத் மாதிரி இந்தியாவும் ஒளிபெற மோடிக்கு வாக்களிக்கும்படி கோரிய அப்புகைப்படங்கள் மக்களிடம் இலகுவாக சென்றடைந்தது. மறுபுறத்தில் அவை போலியானவை எனும் குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒலித்தாலும், பொய் போய்ச் சேர்ந்த வேகத்திற்கு அவற்றால் ஈடுகொடுக்க முடியாமல் போனது.

இன்னும், மக்களை கவரும் வகையிலான பேச்சுக்களும் மோடிக்கென பிரத்தியேகமாக அவரது சந்தைப்படுத்தல் குழுவினால் வடிவமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன. அதற்கென அவர்கள் பல்வேறு ஆய்வுகளை இணையத்தில் மேற்கொண்டு, அதற்கமைவாகவே அவற்றை வடிவமைத்திருந்தனர்.

அதோடு, தானொரு பதவி ஆசை அற்றவர் என்ற சுயவிளம்பரமும் மோடிக்கு கைகொடுத்தது. பிரதமர் வேட்பாளருக்கான தேர்வின் போது கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தியினை தொடர்ந்து, தான் பிரதமர் வேட்பாளராக நிற்கப் போவதில்லை என பகிரங்கமாக அறிவித்ததும், அவரை ஊடகங்கள் இன்னும் முன்னிலைப்படுத்தி செய்திகளை வெளியிட ஏதுவாக அமைந்தது.

இப்படி பல்வேறு யுக்திகளே மோடியினை பிரதமர் நாற்காலியில் உட்காரவைத்தது.

இதன்பின்னர் பல்வேறு நாடுகளின் கட்சிகளும் 2014இன் இந்தியப் பொதுத் தேர்தல் மாதிரியை முன்வைத்தே தேர்தல்களை எதிர்நோக்கி இருந்தன. அண்மையில் அது தொடர்பில் சர்ச்சைக்குள்ளான oxford analytica நிறுவனம் தொடர்பில் அறிந்திருப்பீர்கள்!

மக்களுக்கான அதிகாரத்தைப் பெற்று அவர்களுக்கு சேவை செய்ய என வடிவமைக்கப்பட்ட‌ அரசியல் எனும் கருவி இன்று வணிகமயப்படுத்தப்பட்டிருக்கின்றது. பணமுள்ளவர்கள் யாராகினும், உரிய இடத்தில் அதை முதலீடு செய்யத் தெரிந்தவராக இருந்தால் அரசியலில் தான் எண்ணும் இடத்தை அடையும் சாத்தியத்தை இன்றைய வணிக உலகு அளித்துள்ளது. அதற்கு இன்றுள்ள பிரதான ஊடகமான சமூகவலைத் தளங்கள் எண்ணிலடங்காத வாய்ப்பினை வாரிவழங்குகின்றன.

அதற்கான பல உதாரணங்களை நாம் இன்றைய காலங்களில் காணக்கூடியதாக உள்ளது. பொருளீட்டலுக்கான தேவை முடிந்ததும் தொடங்குகின்ற‌ அரசியல் அவாவினை ஜிகினா வேலைப்பாடுகளுடன் நம்முன் ஓரு பிம்பத்தினை நிறுவ முயற்சிக்கும் பலர் இங்கும் உள்ளனர். அவர்களின் தேவை நிச்சயமாக தூய அரசியலல்ல என்றே சொல்லலாம். பொதுவான கருத்துருவாக்கம் ஒன்றின் மூலம் தம்மால் அடைவதற்கு மீதமிருக்கும் அரசியல் அதிகாரத்தினை சிறிதளவேனும் சுவைத்துப்பார்த்துவிட வேண்டும் என்ற அவாவே தவிர வேறொன்றுமில்லை.

இவர்கள் – மோடியின் மாதிரியை வைத்துக் கொண்டு தமக்கான சந்தைப்படுத்தல் குழுவை மெதுமெதுவாக கட்டமைத்துக் கொண்டு, அது அமையும் வரை தம்மைத் தாமே விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் வியாபாரிகளே!

பகிர:

One Reply to ““மோடி” எனும் விளம்பரப் பண்டம்!”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன