பிள்ளையார் பிடிக்கப் போய்…..

மகனைப்பற்றிய கவலை போடியாரை அரித்துக்கொண்டே இருந்தது. “இவனை என்ன செய்வது? சுட்டுப்போட்டாலும் வருதில்லியே!!” என எண்ணிக்கொண்டே கடை வீதிப்பக்கம் வண்டியினை உருட்டிக்கொண்டிருந்தார்.

“ எத்தன பிரயத்தன்ங்கள் , முயற்சிகள் …. சே! ஒன்றிலும் இவன் தேறின பாடில்லை..”

என அலுத்தவாறே தனக்குள் முணு முணுத்துக்கொண்டார்.. வண்டி, நணபர் மம்மாக்கரின் கடை முன்னே நின்றது.

“என்ன மகண்ட யோசினையோ?..” என சிரித்தவாறே போடியாரை நோக்கினார் மம்மாக்கர்.

“ஓண்டாப்பா. உனக்கு தெரியாததா! இவன் ஏ எல் எடுத்துட்டான். ஆனா இன்னும் இந்த சிங்களத்த பிடிக்கான் இல்ல பாத்தியோ” என்ற போடியாரிடம்,

“ அட விடுடாப்பா! சிங்களம் பிடிக்காட்டி என்ன விடன். பொடியன் வலு கெட்டிதானே!” இது மம்மாக்கர்.

“ கெட்டியா இருந்து என்ன செய்ற பெடியன் பாசைய பிடிக்கான் இல்லியே! நீயும் விசயம் தெரியாம கதைக்காய்.. இந்த காலத்தில சிங்களம் தெரியாம ஊர உட்டு போக ஏலுமா? இப்பவே சிங்களத்தால மட்டும்தான் பாட்டே படிக்கணும் என்கானுகள் இன்னும் கொஞ்ச நாளால தொழில் தேவ எண்டா சிங்களம் என்பானுகள்,  எதுக்கும் பாசை தெரியணுமெ! இல்லாட்டி எங்காவது ஓட வேண்டியதுதான்.” என பெருமூச்செறிந்தார் போடியார்.

போடியாரைப் பார்க்க மம்மாக்கருக்கு பாவமாக இருந்தது, மகன் பற்றிய கவலையில் இன்னும் கொஞ்சம் தலையில் வழுக்கை விழுந்தது போல தோன்றியது. கவலைகளுக்கு முடிவே இல்லை அல்லவா! ஒரு காலத்தில் பணம் பற்றிய கவலை. பிறகு குடும்பம், பிறகு….. என நீண்டு கொண்டே போகின்றது. இப்போது போடியாருக்கு மகனின் கவலை, அவன் எதிர்காலத்தினை எதிர் கொள்வதில் இருக்கும் சிக்கல்களை தீர்ப்பது பற்றிய கவலை.

நீண்ட சிந்தனையில் மூழ்கி இருந்த மம்மாக்கரினை,“என்னடப்பா கடும் யோசினை” என்ற போடியாரின் குரலே உலகுக்கு கொண்டு வந்தது.

“ஒன்னுமில்ல போடியார் உங்கட பிரச்சனையத்தான்  யோசிச்சுக்கு இருந்தன்.”

நெடிய பெருமூச்சொன்று போடியாரிடமிருந்து பிறந்தது.

“ம்ம்ம்……… அவன சிங்கள கிளாசுக்கு அனுப்பி பார்த்தன். தனியா புத்தகம் எல்லாம் வாங்கி குடுத்தன், ம்ஹூம் ஒரு பலனையும் காணோம். ஒண்டும் ஏறுதில்ல எங்கிறான்.” என்றவாறு எங்கோ வெறித்துப்பார்த்தார்.

இதற்கு இப்படி கவலைப்படுகின்றாரே என்ற பரிதாபம் மம்மாக்கரின் கண்களில் தெரிந்தது. அதைப்புரிந்தவர் போல,

“ஒண்டுமில்லடாப்பா, நல்லா படிக்கிறவன், கெட்டிக்காறன், நாளைக்கு இந்த ஒரு குறையால தோத்துப் போயிடக்கூடாதே எங்கிற கவலதான். நாளைக்கு இத எண்ட தகப்பன் எனக்கு செய்யல்ல எண்டு சொல்லக்கூடாதில்லியா! அதான்…” என்றார் போடியார்.

அதன் நியாயம் மம்மாக்கருக்கு சரி எனப்பட்டது.

“சரி போடியார், நான் ஒரு ஐடியா சொல்லட்டா”

என்ன என்பது போல மம்மாக்கரினை நோக்கினார் போடியார். கண்களில் ஆர்வம் பளிசிட்டது.

“ஒண்டும் இல்ல போடியார், நம்முட பக்கத்துவீட்டு பக்கீர் தம்பிட பையன், தொழில் செய்ய எங்கயோ சிங்கள ஊருக்கு போனவன், இப்ப வந்திருக்கான். சும்மா சிங்களம் கதைக்கான், சுப்பரா!” என்றவாறு அர்த்தத்தோடு நிமிர்ந்து போடியாரை பார்த்தார் மம்மாக்கர்.

போடியாருக்கு புரிந்துவிட்டது போல இருந்தது.

“ம்ம்ம்ம்…. நல்ல ஐடியாதான்… ஆனா எங்க அனுப்புறது?” என்றவாறு தலையை சொறிந்து கொண்டார்..

“ ஏன் போடியார், உங்கட பக்கத்து வயல்காரன் அப்புகாமி…”

“ சா! சரியா சொன்ன நீ .. அவந்தான் சரியான ஆள். அவண்ட ஊரிலதான் தமிழ் வாசனையே இல்ல. எல்லாரும் சிங்களம்தான். மகன விட்டா ஒரு மூணு மாதத்தில பாசைய பிடிச்சிடுவான்” போடியாரின் குரலில் உற்சாகம் தெறித்தது.

“ரொம்ப நன்றி மம்மாக்கர்.. நான் வாறண்டாப்பா.. அப்புகாமிய சந்திச்சு மத்த ஒழுங்குகள செய்யோணும்..” என்றவாறே விரைந்தார் போடியார். மம்மாக்கருக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.

****

“ என்னடாப்பா சுகமா இருக்கியா?” குரல் கேட்டு திரும்பிய போது போடியார் நின்று கொண்டிருந்தார். ஒருவாரம் கழித்து மம்மாக்கரின் கடைத்தெருவில், போடியாரின் பிரசன்னம்.

“ ஆ! போடியார் சுகமா? எங்க ஒருவாரமா காணோம்” என்றவாறு பொடியாரினை ஊடுருவினார் மம்மாக்கர்,

போடியார் இப்போது உற்சாகமாக இருப்பதாக மம்மாக்கருக்கு தோன்றியது.

“ மகன கொண்டு போய் அப்புகாமிட்ட விட்டுட்டன், பொடியன் இனி பாசைய படிச்சிடுவான்.” வார்த்தையில் பெருமிதம் தொனித்தது.

***

நாட்கள் உருண்டோடின…. மாதம் நான்கினை தாண்டிவிட்டது.

போடியாருக்கு மகன் சிங்களம் பிடிச்சிருப்பான், இனி போய் கூட்டிவரலாம் என்று முடிவு செய்து புறாப்பட்டார்.

அப்பூகாமியின் கிராமம் இன்னும் பசுமை மாறாமல் அப்படியே இருந்தது.

இவருக்கு பழக்கப்பட்ட ஊர்தான். அப்புகாமியின் வீடு நோக்கி விரையலானார் போடியார். தெருவழியில் இருந்த தேனீர் கடையில் , “ காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை?…” என ரேடியோ அலறிக்கொண்டிருந்தது. அட! இங்க தமிழ் பாட்டா! என்று ஆச்சரியத்துடன் அப்புகாமியின் வீட்டீனை நெருங்கும் போது, இருவர் தமிழில் பேசிக்கொண்டே போடியாரினை கடந்து சென்றனர். போடியாருக்கு இன்னும் ஆச்சரியமாகிப் போனது. ஏதோ ஒன்று புரிவது போல இருந்தது. சிந்தனையுடன் அப்புகாமியின் வீட்டிற்குள் பிரவேசிக்க எத்தனிக்கையில்,

“ ஆ ! வாங்கோ போடியார் , சுகமா இருக்கையளா? மகன் இஞ்ச நல்ல சுகமா இருக்கார். வாங்கோ வாங்கோ!..” என தமிழில் அவரை வரவேற்ற அப்புகாமிக்கு எதுவும் பதிலளிக்காமல் மூர்ச்சையானார் போடியார்..

அப்புகாமிக்கு எதுவும் புரியவில்லை… உங்களுக்கு…………………………..

பகிர:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன